தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.7.12

மியான்மர்:பாதுகாப்பு படையினரின் மிருக வெறியால் துயருறும் ரோஹிங்கியா முஸ்லிம்கள்!


யங்கூன்:கடந்த சில வாரங்களுக்கு முன்பு வடக்கு மியான்மரின் ராக்கேன் மாகாணத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் உள்ளூர் போலீஸ் மற்றும் ராணுவத்தின் மிருகவெறித் தாக்குதலால் துயருற்று வருவதாக முன்னணி மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.ஹியூமன் ரைட்ஸ் வாட்சின் ஆசியாவுக்கான துணை இயக்குநர் எலைன் ப்யர்ஸன் நேற்று(ஜூலை-7) வெளியிட்டுள்ள யூரேசியாவுக்கான மீளாய்வு அறிக்கையில், மியான்மர் அரசு உடனடியாக ரோஹிங்கியா சமூகத்தினர் மீது பாதுகாப்பு படையினர் நடத்தும்
தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
எவரேனும் கைது செய்யப்பட்டால் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட வேண்டும் அல்லது விடுதலைச்செய்ய வேண்டும். அவர்களது உறவினர்கள் சந்திக்க ஏற்பாடுச் செய்ய வேண்டும் என்றும் எலைன் அறிக்கையில் கூறியுள்ளார்.
கடந்த மாதம் மியான்மர் வடக்கு பகுதியில் உள்ள ராகேனில் ஒரு பெளத்த மத இளம்பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வுச் செய்யப்பட்டு படுகொலைச் செய்யப்பட்டார். இச்சம்பவத்தின் பழியை முஸ்லிம்கள் மீது சுமத்தி பெளத்தர்கள் 10 முஸ்லிம்களை படுகொலைச் செய்தனர். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்தனர். இப்பகுதியில் இன்னமும் அவசர நிலை நீடிக்கிறது.
மியான்மரில் கலவரம் வெடித்துக் கிளம்பியதைத் தொடர்ந்து கடந்த மாதம் இறுதியில் இருந்து அங்குள்ள நிலைமைகளை ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் ஆய்வு செய்ததில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பாதுகாப்பு படையினரால் திட்டமிட்டு அத்துமீறல்களுக்கு ஆட்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
உள்ளூர் போலீஸ், நஸாகா என அழைக்கப்படும் துணை ராணுவப்படை, ராணுவம் ஆகியன சிறுபான்மை முஸ்லிம்களை இழிவுப்படுத்தி அவர்கள் மீது மிருகத்தனமான அடக்குமுறைகளை கையாளுவதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம் சாட்டுகிறது.
மியான்மர் பாதுகாப்பு அதிகாரிகள் ரோஹிங்கியா முஸ்லிம்களை கூட்டாக கைது செய்கின்றனர். கொலைகள் உள்பட இதர அத்துமீறல்களிலும் ஈடுபடுகின்றனர். ரோஹிங்கியா டவுன்கள் சூறையாடப்படுகின்றன என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்சின் அறிக்கை கூறுகிறது.
ஹியூமன் ரைட்ஸ் வாட்சின் அறிக்கையில் பல்வேறு சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் ஒரு நிகழ்வு கடந்த ஜூன் 23-ஆம் தேதி நடந்த சம்பவமாகும். கலவரத்தால் ஊரில் இருந்து வெளியேறி மாங்க்டாவ் என்ற காட்டுப் பகுதியில் தங்கியிருந்த முஸ்லிம்கள் மீது ராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதில் தப்பித்தவர் ஹியூமன் ரைட்ஸ் வாட்சிடம் அனைவரும் பீதியில் ஆழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்; “நாங்கள் கிராமத்தில் இருந்து விரட்டப்பட்டு வெளியேறும்போது ஒரு கால்வாய் குறுக்கிட்டது. சில மக்களால் அதனை தாண்டிச்செல்ல முடியவில்லை. அப்பொழுது ராணுவம் அவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலைச் செய்தது.”
ஹியூமன் ரைட்ஸ் வாட்சின் அறிக்கையில் அரசே கலவரத்தில் ஈடுபட்டதை நேரில் கண்ட சாட்சிகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளனர்.
Equal Rights Trust (ERT) வெளியிட்டுள்ள அறிக்கையில் 50 அகதிகளிடம் எடுக்கப்பட்ட பேட்டிகள் இடம்பெற்றுள்ளன. அராகன்(ராக்கேன்) அரசிடம் ’மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்த கடுமையான கேள்விகள்’ என்ற தலைப்பில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கை 90 ஆயிரம் புலன்பெயர்ந்த மக்களுக்கு அரசு மனிதாபிமான உதவிகளை மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.
மியான்மரில் சொந்தமாக நிலம் வைத்துக்கொள்ள அனுமதியில்லாத ரோஹிங்கியா முஸ்லிம் சமூகத்தை, ஐ.நா, உலகிலேயே மிக துன்புறும் சிறுபான்மை சமூகமாக கருதுகிறது.
சொந்த நாட்டில் சுதந்திரமாக சஞ்சரிக்கும் உரிமை, கல்வி, வேலை ஆகியன பறிக்கப்பட்ட சமூகமாக தாங்கள் இருப்பதாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் கூறுகின்றனர்.
ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மர் அரசு ஒரு இன சிறுபான்மையினராக இதுவரை அங்கீகரிக்கவில்லை. மேலும் அவர்கள் அரசு அதிகாரிகளால் மனித மீறல்களுக்கு ஆளாக்கப்படுவதாக கூறுகின்றனர்.
பாதிக்கப்பட்ட சூழலில் பங்களாதேஷுக்கு தப்பிச் சென்றால் அங்குள்ள அதிகாரிகள், இங்கு போதிய இடம் இல்லை என கூறி ரோஹிங்கியா முஸ்லிம்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
புலன்பெயர்ந்தோர்களில் ஒருவர் கூறுவது நமது கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது
அவர் கூறுகிறார்: “நாங்கள் மீண்டும் மியான்மருக்கு சென்றால் அங்கு நஸாகாவால்(துணை காவல் படை) மரணம் காத்திருக்கிறது. நஸாகா எங்களை தெரு நாய் போல் சுட்டுக் கொன்று விடுவார்கள். நாங்கள் இங்கேயே மரணிக்க விரும்புகிறோம். ஒரு முஸ்லிம் இறந்தால் அவருக்கு கிடைக்கும் முறையான இறுதிச்சடங்கு(இஸ்லாத்தின் அடிப்படையில்) எங்களுக்கு கிடைப்பதை விரும்புகிறோம்.”

0 கருத்துகள்: