ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் சர்வதேச அளவிலான பொருளாதார நிலை மேலும் மோசமடையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டியன் லாகர்டே தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய நாடுகளில் கிரேக்கம், போர்ச்சுக்கல், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன.இவற்றின் நிதி நெருக்கடிக்கு உரிய தீர்வு காணப்படுவதில் மந்த நிலை காணப்படுகிறது. கால
வரையறையுடன்கூடிய தீர்வு விரைவாக காணப்பட வேண்டும். இல்லையெனில் சர்வதேச அளவில் இதன் தாக்கம் மேலும் விஸ்வரூபம் எடுக்கும் என்று கிறிஸ்டியன் லாகர்டே சுட்டிக்காட்டியுள்ளார்.
வரையறையுடன்கூடிய தீர்வு விரைவாக காணப்பட வேண்டும். இல்லையெனில் சர்வதேச அளவில் இதன் தாக்கம் மேலும் விஸ்வரூபம் எடுக்கும் என்று கிறிஸ்டியன் லாகர்டே சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆசிய நாடுகளில் ஒரு வார காலம் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், டோக்கியோவில் நடைபெற்ற பொருளாதார கருத்தரங்கில் பேசுகையில் இக்கருத்தை வெளியிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது, இந்த நாடுகளில் இப்போது நிலவும் பொருளாதார தேக்க நிலை மூன்று மாதங்களுக்கு முன்பிருந்ததை விட மிக மோசமாக உள்ளது.
இத்தகைய சூழலில் உறுதியான நடவடிக்கையை ஐரோப்பிய கூட்டமைப்பு எடுத்தாக வேண்டும். இல்லையெனில் நிலைமை இன்னும் மோசமடையும். பொருளாதார தேக்க நிலை காரணமாக ஏற்படும் பயங்கரமான விளைவுகளை தவிர்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நடப்பாண்டில் சர்வதேச அளவிலான பொருளாதார வளர்ச்சி 3.5 சதவீதமாக இருக்கும் என்று கடந்த ஏப்ரலில் ஐ.எம்.எப் கணித்தது. 2013ஆம் ஆண்டில் இதனை 4.1 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது.
தற்போதைய சூழலில் இந்த இலக்கை எட்ட முடியுமா என்பது சந்தேகமே. இது தொடர்பாக புதிய மதிப்பீட்டு அறிக்கையை ஐ.எம்.எப். இம்மாத இறுதியில் வெளியிட உள்ளது. அதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, தற்போதைய பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட விவரத்தை லாகர்டே தெரிவிக்க மறுத்துவிட்டார்.
கடந்த வாரம் பிரஸ்ஸல்ஸில் கூடிய ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் வங்கி வட்டி விகிதத்தைக் குறைப்பதென முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான நடவடிக்கைகளை அந்நாடுகளின் மத்திய வங்கி வியாழக்கிழமை முதல் அமல்படுத்தத் தொடங்கியுள்ளன. இவை வளர்ச்சியின் அடையாளம் என்று லாகர்டே சுட்டிக் காட்டினார்.
இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறையைப் போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சிறந்த பலனை அளிக்கும்.
ஆனால் ஐ.எம்.எப் பார்வையில் இப்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் போதாது. ஐரோப்பிய மண்டலம் முழுவதும் நிதி சீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். இங்குள்ள வங்கிகளின் செயல்பாடு முற்றிலுமாக மாறி, நிதிப் பற்றாக்குறை இல்லாத சூழல் உருவாக வேண்டும்.
இவற்றையெல்லாம் செயல்படுத்துவது மிகவும் சிரமமான விஷயம்தான். ஆனால் அதை கட்டாயம் நிறைவேற்றினால்தான் வெற்றி நிச்சயம் என்று அவர் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய கூட்டமைப்பு வங்கிகள் மட்டுமின்றி சீனாவில் உள்ள மத்திய வங்கியும் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது.
இதனிடையே அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 2 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முன்னர் இது 2.1 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக