தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.5.12

இன்று பாரத் பந்த்!: எதிர்கட்சிகள் அறிவிப்பு!


புதுடெல்லி:பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இன்று இந்தியா முழுவதும் முழு அடைப்பிற்கு பா.ஜ.க, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.பெட்ரோல் விலை உயர்வு நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்ற உள்ள திரிணமூல் காங்கிரஸ்,
திமுக உள்ளிட்டகட்சிகளும்கூட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந் நிலையில் பாஜக கூட்டணி மற்றும் இடதுசாரி கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் வியாழக்கிழமை பந்த் நடைபெறுகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதுடன் வேலைநிறுத்தப் போராட்டமும் நடைபெறுகிறது.
இந்தப் போராட்டத்துக்கு சிஐடியு, ஏஐடியுசி ஆகிய தொழிற்சங்கங்கள் உள்பட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
கேரள மாநிலத்தில் ஏற்கனவே முழு அடைப்பு நடத்தப்பட்டுவிட்டதால் இன்று அம்மாநிலத்திற்கு முழு அடைப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஆட்டோ ஓடாது என்று என்று சிஐடியு ஆட்டோ சங்கப் பொதுச்செயலாளர் எம்.எஸ்.ராஜேந்திரன் கூறியுள்ளார். தமிழகத்தில் சுமார் 2 லட்சம் ஆட்டோக்கள் உள்ளன. இதில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடாது என்று அவர் கூறினார்.
பேருந்து மற்றும் ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து மாலை 4 மணிவரை கடைகள் அடைக்கப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன் கூறியுள்ளார்.
போராட்டத்தின்போது எவ்வித வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். சென்னையில் 12 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
News@thoothu

0 கருத்துகள்: