ரீபோக் இந்தியா நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து கிரிமினல் விசாரணை கோர அதன் தலைமை நிறுவனம் அடிடாஸ் முடிவு செய்திருக்கிறது.ஜெர்மன் நாட்டு விளையாட்டுப் பொருள் தயாரிப்பு நிறுவனமான அடிடாஸின் துணை நிறுவனம் ரீபாக் இந்தியா. இதில் ரூ. 866 கோடி அளவுக்கு நிதி முறைகேடு நடைபெற்றுள்ளதாக அடிடாஸ் புகார் கூறி
யுள்ளது.
இது குறித்து முறையான கிரிமினல் விசாரணை நடத்த சட்ட ரீதியான புகாரை அது அளித்துள்ளதாக அடிடாஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். குற்றச்சாட்டு மீதான விசாரணைக்கு உதவும் வகையில் தலைமை நிறுவனத்திலிருந்து ஒரு குழு இந்தியா சென்றுள்ளது.
அடிடாஸின் துணை நிறுவனமான ரீபாக் இந்தியா நிறுவனத்தில் 125 மில்லியன் யூரோ (ஏறத்தாழ ரூ. 866 கோடி) நிதி முறைகேடு நடைபெற்றுள்ளதாக இம்மாத தொடக்கத்தில் அடிடாஸ் கூறியது. உடனடி நடவடிக்கையாக நிறுவனத்தின் உயர் நிலை நிர்வாகத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.
அடிடாஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக இருந்த சுபீந்தர் சிங் பிரேம், தலைமை செயல் அதிகாரி விஷ்ணு பகத் ஆகியோர் உடனடியாகத் தங்கள் பணியிலிருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டது. இந்திய அடிடாஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக கிளாஸ் ஹெக்கராட் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்தியாவில் உள்ள 900 ரீபாக் கடைகளில் கிட்டத்தட்ட 300 கடைகளை மூடப் போவதாகவும் அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. இவை பெரும்பாலும் உரிமங்கள் முறையில் வெளியார் நடத்தும் கடைகள். ஆனால் நிதி முறைகேடு பிரச்னைக்கும் கடைகளை மூட உத்தேசிப்பதற்கும் தொடர்பில்லை என்று அடிடாஸின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக