சென்னை:முஸ்லிம் பெயர் சூட்டப்பட்டவர்கள் பாரபட்சத்திற்கு பலியாகும் நபர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இந்திய திரைப்பட உலகில் பிரபல நடிகரான கமல் ஹாசன் தனது பெயரை முஸ்லிம் பெயராக மாற்றப்போவதாக அறிவித்துள்ளார்.அண்மையில் பாதுகாப்பு சோதனை என்ற பெயரால் பாலிவுட்டின் புகழ் பெற்ற நடிகர் ஷாரூக் கான் அமெரிக்க விமானநிலையத்தில் 2 மணிநேரம் தடுத்துவைக்கப்பட்டார். இச்சம்பவத்திற்கு இந்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்தது.
ஷாரூக், அப்துல் கலாம் உள்ளிட்ட பல இந்திய பிரபலங்கள் அமெரிக்காவால் பாதுகாப்பு சோதனை என்ற பெயரால் அவமதிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ஷாரூக் கானிற்கு ஏற்பட்ட அவமதிப்பினை கண்டித்தும் அவரைப் போன்று முஸ்லிம் பெயர் வைத்திருப்பதால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் கமல் ஹாசன் தனது பெயரை அரபி உச்சரிப்பில் மாற்றப் போவதாக அறிவித்துள்ளார்.
அதாவது kamal hassan என்பதை Qamal hassan என மாற்றப் போகிறேன் என கூறுகிறார். தமிழில் பொதுவாக கமால் என்று அழைப்பார்கள்.
இதுக்குறித்து கமல் ஹாசன் கூறியது:
‘இதன் பெயரால் எனக்கு எதிர்காலத்தில் என்ன பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதுப்பற்றிக் கவலையில்லை. அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் எனது பெயருடன் ஹாசன் இருப்பதால் என்னையும் அந்நாட்டு விமானநிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
எனது தந்தை பெயர் வைக்கும் போதே இதுபோன்ற சந்தேகங்கள் வரும் என்று தெரிந்தே வைத்துள்ளார். அடிக்கடி என்னிடம் உனது பெயரை பற்றி யாரேனும் விசாரித்தார்களா? முஸ்லிம் என்று நினைத்தார்களா? என்று கேட்பார்.’ என்று கமல் கூறுகிறார்.
‘ஷாரூக் கான் என்ற பெயர்தாம் அவருக்கு வினையாக மாறியது. நான் முஸ்லிமா? இல்லையா? என்பது பிரச்சனை அல்ல. ஷாரூக் கான் உள்ளிட்ட முஸ்லிம் சகோதரர்களுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்ற ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் விதமாக நான் இம்முடிவை எடுத்துள்ளேன். எனது புதிய பெயரால் என்ன பிரச்சனை வந்தாலும் அதனை சந்திப்பேன். எனது பெயரை இதுபோல் சந்தேகமாக பார்த்து குழம்புவதை நான் ரசிக்கிறேன். சந்தோஷமாகவும் இருக்கிறது.
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட சம்பவத்தினால் அங்குள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்கின்றனர். அதனால்தான் ஷாருக்கானை தடுத்து நிறுத்தியுள்ளார்கள். அதுபற்றி ஷாருக்கானே கவலைப்படவில்லை.
இதுபோன்ற விஷயங்களுக்கு இந்தியாவில் இருந்து அவசரப்பட்டு கருத்து தெரிவிப்பதை நிறுத்த வேண்டும். ஆப்கானிஸ்தான் மாணவர்கள் நமது நாட்டில் எளிதாக ரூம் எடுத்து தங்கிவிட முடியுமா? இதுபோன்ற நடவடிக்கைகள் சமூகத்தில் புறையோடி போய் கிடக்கிறது. அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்.’ இவ்வாறு கமலஹாசன் கூறினார்.
ஆனால், மதசார்பற்றவாதியாக தன்னை அடையாளம் காட்டி வந்த கமல், ‘உன்னைப்போல் ஒருவன்’ என்ற படத்தில் முஸ்லிம்களை அநியாயமாக தீவிரவாதிகளாக சித்தரித்தது கடுமையான கண்டனத்திற்கு காரணமானது. மேலும் பர்மா பஜாரில் திருட்டு சி.டி மற்றும் வி.சி.டிக்களை விற்கும் நபர்கள் தீவிரவாத தாக்குதலுக்கு இப்பணத்தை பயன்படுத்துகிறார்கள் என்று முஸ்லிம்களை குறிப்பிட்டு கமல் ஹாசன் அபாண்டமாக பழி கூறியதும் அவர் மீது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக