தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.4.12

இலங்கையில் சூடுபிடித்துவரும் தம்புள்ளைப் பள்ளிவாசல் விவகாரம்

கொழும்பு: தம்புள்ளைப் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவம் இலங்கை அரசைப் பொறுத்த வரையில் "புலி வாலைப் பிடித்த கதை" போல ஆகிவிட்டது.உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் ராஜபக்‌ஷே அரசு பல்வேறு கடும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் எதிர்கொண்டு வருகின்றது. பல்லின சமூகங்கள் வாழும் ஒரு ஜனநாயக நாட்டில், அனைத்து மக்களும் சமாதானமாகவும் சமத்துவமாகவும் வாழ்வதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டியது ஒரு நாட்டு
அரசாங்கத்தின் தார்மீகக் கடமையாகும்.

ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், தம்முடைய தனிப்பட்ட நலன்களுக்காகவும் பொதுமக்கள் மத்தியில் பிரிவினைத் தீயை மூட்டிவிட்டு, அந்த நெருப்பில் குளிர்காயப் பார்க்கும் இழிவான, மலிவான அரசியல் தந்திரத்தின் மிக மோசமான விலையை இலங்கையர்கள் கடந்த மூன்று தசாப்தகாலம் செலுத்த நேர்ந்தது. அந்த துன்பியல் வரலாற்றின் ஈரம் காய்வதற்குள், குறிப்பாக ஜெனிவா மாநாட்டில் தற்போதைய இலங்கை அரசு போர்க்குற்றவாளியாய் தலைகுனிந்து நிற்கும் நிலை வந்த பின்பும் மற்றொரு சிறுபான்மை இனத்தைக் குறிவைக்கும் பயங்கர நிலை ஏற்பட்டுள்ளமை வேதனைக்குரியது.

இந்நிலையில், தம்புள்ளை முஸ்லிம் பள்ளிவாயில் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாக கடந்த வெள்ளிக்கிழமை (27.04.2012) கொழும்பில் மாபெரும் பேரணியொன்று இடம்பெற்றுள்ளது.

இப்பேரணியில் முஸ்லிம்கள், தமிழர்கள், சிங்களவர்கள் இணைந்து கலந்து கொண்டதோடு, தம்புள்ளை அல் ஹைரியா முஸ்லிம் பள்ளிவாயிலை அகற்றி, வேறு ஓர் இடத்துக்கு அதனை இடமாற்றம் செய்யக்கோரும் பெளத்த பிக்குகளின் அடாவடித்தனத்துக்குத் தமது பலமான எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மேற்படி பள்ளிவாயில் மீதான தாக்குதல் சம்பவத்துக்குத் தமது கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில், அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து கடந்த வியாழக்கிழமை (26.04.2012) ஹர்த்தால் ஒன்றை ஒழுங்குசெய்திருந்தன.

இதன்போது, அங்குள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹர்த்தால் நடவடிக்கையின் போது, முஸ்லிம் பிரதேசங்களை அண்டியுள்ள தமிழ் வர்த்தகர்களும் தமது வர்த்தக நிலையங்களை செயற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறே, மேற்படி சம்பவத்துக்குத் தமது கண்டனத்தை வெளிக்காட்டும் வகையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, மட்டக்களப்பு மற்றும் ஏறாவூர் ஆகிய பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்கள், கடந்த வியாழக்கிழமை (26.04.2012) காலை முதல் கடையடைப்பில் ஈடுபட்டிருந்தன.

இப்பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள், அரச தனியார் அலுவலகங்கள் என்பன முற்றாக மூடப்பட்டிருந்தன. இங்குள்ள பாடசாலைகள் இயங்கிய போதிலும் மாணவர்களின் வரவு மிகக் குறைவாகவே காணப்பட்டுள்ளது.

இவ்வாறு, நாட்டின் பல பாகங்களிலும் தீவிர இனவாதப் பௌத்தப் பிக்குகளின் அடாவடித்தனத்தை எதிர்த்தும், அதற்கு அரச தரப்பில் வழங்கப்பட்டுள்ள ஆதரவுக்குத் தமது கண்டனத்தைத் தெரிவித்தும் இன மத பேதமின்றி பொதுமக்கள் களத்தில் இறங்கியுள்ளனர் என்பது இலங்கை அரசுக்குப் பெரும் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்: