புதுடெல்லி:ப்ரஸ் கவுன்சிலுக்கு கூடுதல் அதிகாரம் தேவை என கவுன்சிலின் சேர்மன் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கோரிக்கை விடுத்துள்ளார். இதற்காக பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.இதுத்தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:ப்ரஸ் கவுன்சிலை நவீனப்படுத்த எலக்ட்ரானிக் மீடியாக்களையும் ப்ரஸ் கவுன்சிலின் வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும். பத்திரிகைகளையும், பத்திரிகை ஏஜன்சிகளையும் தண்டிக்கவும், விமர்சிக்கவும், எச்சரிக்கை விடுக்கவும் மட்டுமே ப்ரஸ் கவுன்சிலுக்கு தற்பொழுது அதிகாரம் உள்ளது.
எச்சரிக்கை விடுத்தாலோ அல்லது விமர்சித்தாலோ பத்திரிகையும், பத்திரிகையாளர்களும் அதனை புறக்கணிக்க முயலுகின்றனர் என்பதுதான் உண்மை. பத்திரிகை தர்மத்தை மீறும் பத்திரிகையாளர் மீது அபராதம் விதித்தல், அரசு விளம்பரத்தை ரத்துச்செய்தல், உரிமத்தை ரத்துச்செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். தவறு செய்யும் பத்திரிகையாளர்களுக்கும், பத்திரிகைக்கும் அவர்களின் கருத்தினை தெரிவிக்கும் வாய்ப்பை வழங்கவும் சட்டத்தில் வழிவகுக்கவேண்டும்.
பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்வு காணமுடியாவிட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முயலவேண்டும். கவுன்சிலின் வரம்பிற்குள் மின்னணு மீடியாக்களையும், இணையதளத்தையும் உட்படுத்தி மீடியா கவுன்சில் என பெயர் மாற்றவேண்டும். இவ்வாறு கட்ஜு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபர் 11-ஆம் தேதி பிரதமருக்கு கட்ஜு அனுப்பிய கடிதம் நேற்று முன் தினம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் அளித்த மனுவை தொடர்ந்து வெளியானது. தகவல் அறியும் உரிமை ஆர்வலரான சுபாஷ் அகர்வால் என்பவர் இம்மனுவை சமர்ப்பித்தார்.
News@thoothu
0 கருத்துகள்:
கருத்துரையிடுக