ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீடுகளுக்கு மின்கட்டணம் 2 மடங்காக உயர்கிறது. இதுவரை யூனிட்டுக்கு 75 மற்றும் 85 பைசா செலுத்தி வந்தவர்கள், இனி 2 செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பஸ் கட்டணம், பால் விலை உயர்வை தொடர்ந்து மின்கட்டணமும் உச்சத்திற்கு செல்கிறது. தமிழக அரசின் பொருளாதார நிலை மோசமாக உள்ளதால் பஸ், மின் கட்டணம் மற்றும் பால் விலையை உயர்த்துவதாக முதல்வர் ஜெயலலிதா
அதிரடியாக அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பு அன்றிரவே அமலுக்கு கொண்டுவரப்பட்டது. உள்ளூர், வெளியூர் பஸ் கட்டணம், வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அதிருப்தியடைந்த மக்கள் பல இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் அறிவித்த வண்ணம் உள்ளன.மின்கட்டணம் உயர்த்தப்படும் என ஜெயலலிதா அறிவித்தாலும் அதை உடனடியாக அமல்படுத்த முடியாது. மின்கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை. இதுகுறித்து மின்சார ஒழுங்கு முறை ஆணையத்துக்கு மின்வாரியம் கோரிக்கை வைக்க வேண்டும். அதன்பின், மக்களின் கருத்தை ஆணையம் கேட்டறிந்து மின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். இதற்கு சிறிது காலம் ஆகலாம் என கூறப்படுகிறது. மின்வாரியத்துக்கு ஏற்பட்டுள்ள 8 ஆயிரம் கோடி இழப்பை சரி செய்ய, மின் கட்டணத்தை 100 சதவீதம் வரை உயர்த்த ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் மனு கொடுத்துள்ளது.
தமிழ்நாடு மின்வாரியம் தினமும் 10,000 மெகாவாட் மின்சாரத்தை மொத்தம் 2.10 கோடி இணைப்புகளுக்கு பகிர்ந்து அளிக்கிறது. இதில் 1.67 கோடி வீட்டு மின்இணைப்பு, 19 லட்சம் விவசாய இலவச இணைப்பு, 14 லட்சம் குடிசைகளுக்கான இணைப்புகளாகும். இவற்றுக்கு வழங்கப்படும் மின்சாரம் போக, மீதம் உள்ளது வர்த்தக நிறுவனங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
மின்வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்பட்டு வந்ததையடுத்து கடந்த ஆண்டில் ஒரு பிரிவினருக்கு மட்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்படி, 600 யூனிட்களுக்கு அதிகமாக பயன்படுத்துவோருக்கு யூனிட் ஒன்றுக்கு 1.05 கட்டணம் உயர்த்தப்பட்டது. அதாவது 3 ஆக இருந்த கட்டணம் 4.05 என நிர்ணயிக்கப்பட்டது. இந்த கட்டண உயர்வு மூலம் ஆண்டுக்கு 1,952 கோடி கூடுதல் வருமானம் கிடைத்தது. ஆனாலும், இழப்பை ஈடுகட்ட முடியவில்லை என கூறப்படுகிறது. 2001&ல் மின்வாரியத்தின் கடன் தொகை 3539 கோடியாக இருந்தது. இது, 2011&ல் 43,000 கோடியாக அதிகரித்துள்ளது. 2011&12ம் ஆண்டில் கடன் தொகை கூடுதலாக 10,000 கோடி ஏற்படும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது மின்வாரியத்தின் மொத்த செலவு 28 ஆயிரம் கோடியாக உள்ளது. இதில் பல்வேறு கட்டணம் மூலம் 20 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. 8 ஆயிரம் கோடி நஷ்டத்தில் வாரியம் இயங்குகிறது. இந்த நஷ்டத்தை ஈடுசெய்யவே, கட்டணம் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. வாரியம் அளித்துள்ள அறிக்கையை ஏற்று, ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்ததும் மின் கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துவிடும்.
தற்போது வீட்டு இணைப்புகளுக்கு 5 பிரிவுகளாக மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாதாரண ஏழை மக்கள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு அதிகபட்சமாக 75 பைசா மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகிறது. 50 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு 75 பைசாவும், 51 முதல் 100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 85 பைசாவும் 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 1.50ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
புதிய கட்டணம் அறிவிக்கப்படும்போது, இந்த 3 பிரிவுகளையும் ஒன்றாக சேர்த்து, 200 யூனிட் வரை கட்டணமாக 2 வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது யூனிட்டுக்கு 75 பைசா, 85 பைசா செலுத்தி வருபவர்கள்கூட இனி 2 செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
200 முதல் 600 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு கட்டணமாக 2.20 வசூலிக்கப்பட்டு வருகிறது. இதையும் 500 யூனிட்டாக குறைக்க உள்ளனர். மேலும் இவர்களுக்கு கட்டணம் 3.50 ஆக உயர்த்தப்படுகிறது. 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துவோ ருக்கு கட்டணம் 4.05&ல் இருந்து 5.75 ஆக அதிகரிக்கிறது.
வர்த்தக நிறுவனங்களுக்கு 1 முதல் 100 யூனிட் வரை 4.30, 100 முதல் 200 யூனிட் வரை 5.30, 200 யூனிட்களுக்கு மேல் 6.50 என தற்போது மின்கட்டணம் வசூலிக்கப்பட்டது. இனி இக் கட்டணம் 1 அதிகரிக்கும் என தெரிகிறது. இதேபோல், கடைகளுக்கு தற்போதைய கட்டணத்தை விட 1 அதிகரிக்கும்.
மின் கட்டணம் தற்போது இனிமேல்
1 முதல் 50 யூனிட் 0.75 காசு 2.00
51 முதல் 100 யூனிட் 0.85 காசு 2.00
101 முதல் 200 யூனிட் 1.50 2.00
201 முதல் 600 யூனிட் 2.20 3.50
601 யூனிட்டுக்கு மேலே 4.05 5.75
0 கருத்துகள்:
கருத்துரையிடுக