இஸ்லாமாபாத்:பஞ்சாப் மாகாண முன்னாள் ஆளுநர் ஸல்மான் தஸீர் கொலைச்செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மாலிக் மும்தாஸ் ஹுஸைன் காதிரிக்கு மரணத்தண்டனை தீர்ப்பளித்த நீதிபதி பர்வேஸ் அலி ஷா சவூதி அரேபியாவில் அடைக்கலம் தேடியுள்ளார்.தண்டனைக்குரிய தீர்ப்பை வழங்கியபிறகு கொலை மிரட்டல் வந்ததையொட்டி நீதிபதியும், அவரது குடும்பத்தினரும் சவூதி அரேபியாவிற்கு சென்றுள்ளனர்.
கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி காதிரிக்கு நீதிபதி பர்வேஸ் அலி ஷா மரணத்தண்டனை தீர்ப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற அறையில் வழக்கறிஞர்கள் நீதிபதிக்கு தடை விதித்தனர். மேலும் சில அமைப்புகள் நீதிபதியை கொலைச்செய்பவர்களுக்கு பரிசுகளை அறிவித்தன. இச்சம்பவத்தை கவனத்தில் கொண்டு பர்வேஸ் அலிக்கும் அவரது குடும்பத்தினருக்கு சவூதியில் வசிப்பதற்கான ஏற்பாடுகளை பாக்.அரசு செய்துக்கொடுத்தது.
கடந்த ஜனவரி நான்காம் தேதி பஞ்சாப் ஆளுநர் ஸல்மான் தஸீர் அவரது மெய்க்காப்பாளரான காதிரியால் சுட்டுக்கொல்லப்பட்டார். மத அவமதிப்பு சட்டத்தை சீர்திருத்தவேண்டும் என கோரிக்கை விடுத்த தஸீரிக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருந்தது.
இறைத்தூதரை அவமதிப்பவர்களுக்கு மரணத்தண்டனை வழங்கவேண்டும் என்பது சட்டம். இச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என தஸீர் கோரிக்கை விடுத்திருந்தார். தஸீரை கொலைச் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காதிரிக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டது நீதிமன்றத்திலும், வெளியேயும் கடுமையான எதிர்ப்பை உருவாக்கியது. தஸீர் கொலையினால் ஹீரொவாக மாறியுள்ள காதிரியை விடுதலைச் செய்யவேண்டும் என கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக