துருக்கியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிலநடுக்கத்தில்
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 432 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 வாரக்குழந்தை, அவரது தாயார், மற்றும் பாட்டியார் எரிக் நகரின் கட்டிட இடிபாடுகளிலிருந்து 48 மணிநேரத்தின் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஆச்சரியமாகவும், நம்பமுடியாமலும், இருக்கிறது. இதற்கு கடவுளின் அருளே காரணம் என மீட்கப்பட்டவர்களின் பாட்டியார் தெரிவித்துள்ளார். எனினும் அக்குழந்தையின் தந்தையார் காணாமல் போயுள்ளதுடன், மீட்பு பணிகள் அவரை தொடர்ந்து தேடிவருகின்றனர்.இதேவேளை துருக்கியின் வான் (Van) மாநிலத்தின், எரிக் நகரில், நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5.4 மேக்னிடியூட் அளவில் மீண்டும் லேசான அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் வான் மாகாணத்தின் சிறைச்சாலை கைதிகள் சிறைச்சாலைக்கு தீவைத்துவிட்டு அங்கிருந்து தப்பிக்க முனைந்துள்ளனர். எனினும், பாதுகாப்பாளர்கள் அவர்களை தடுத்ததால் கலவரம் மூண்டுள்ளது.
இந்நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என மீட்பு பணியாளர்கள் கூறிவருகின்றனர். நிலநடுக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட வான் மாகாணத்திற்கு 12,000 தற்காலிக கூடாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வான் மற்றும் எர்சிஸ் நகரங்களில் இக்கூடாரங்களில் கடந்த இரு நாட்களாக தங்கிவருகின்றனர்.
எனினும், அவர்களுக்கான போதுமான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
துருக்கியின் வான் நகரம் உலகின் மிக பழமைவாய்ந்த நகரங்களில் ஒன்றாக திகழ்வதுடன், நிலநடுக்கம் ஏற்படும் வலயத்தில் அமந்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக