ஸ்ரீநகர் : ராஜீவ் காந்தி படுகொலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு வரும் 9ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. தூக்கிலிட கூடாது என்றும் அவர்கள் நிரபராதிகள் என்றும் தமிழின ஆர்வலர்கள் தமிழகத்தில் போராட்டங்களை நடத்தினர். சென்னை உயர்நீதிமன்றம் அவர்களின் தூக்கு தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்தி உத்தரவிட்டுள்ளது.
அவர்களின் தூக்கு தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக ஆக்குமாறு குடியரசு தலைவரை கேட்டு கொள்ளும் தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியதற்கு பெரியளவில் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் தேசம் அமைதியாய் இருப்பது போல் அப்சல் குருவின் தண்டனையை குறைக்கும் தீர்மானத்தை கொண்டு வந்தால் அமைதியாய் இருக்கும் என தான் நம்பவில்லை என்றார்.மேலும் அவரின் அறிக்கையில் எப்போதுமே காஷ்மீர் மக்களின் உணர்வுகள் சரியான முறையில் புரிந்து கொள்ளப்படாததோடு பாரபட்சம் காட்டப்பட்டு வருவதாகவும் கூறினார். ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், அப்சல் குரு உள்ளிட்ட யாரும் தூக்கிலிடப்படுவதை தாம் விரும்பவில்லை என்றார். காஷ்மீரின் அமைதி குலைவதற்கு காரணமான எதையும் தாம் எதிர்ப்பதாக கூறினார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிஜேபி தமிழக சட்டசபை தீர்மானம் தவறான முன்னுதாரணம் என்றும் அதை பிற மாநிலங்கள் பின்பற்ற கூடாது என்றும் கூறியுள்ளது. அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்த உச்ச நீதிமன்றம் கூட பாராளுமன்ற தாக்குதலில் அப்சல் குருவுக்கு நேரடி தொடர்புக்கான ஆதாரம் இல்லையெனினும் தேசத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்தவே தூக்கிலிடுவதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக