ராஜீவ் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளாக இருப்பவர்களின் மரண தண்டனையை குறைப்பதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என
சோனியா குடும்பத்தினர் சொல்லிவிட்டிருக்கும் நிலையில், மத்திய அரசின் ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கையில், சாந்தன், பேரறிவாளன், முருகனுக்கு தூக்குதண்டனை நிறைவேற்ற நாள் குறித்திருப்பதும், அதற்கான இடைக்காலத் தடை உத்தரவும் பெறப்பட்டிருக்கிறது.
நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனையாகவே இது பொது அரங்கில் பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் இந்தத் தண்டனை நிறுத்தப்பட வேண்டும், எனப் போராடுபவர்களில் பலரும் தெரிவிக்கும் முக்கிய காரணம், உண்மை குற்றவாளிகளே இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மூவருக்குமான மரணதண்டனை நீதிக்குப் புறம்பானது. இந்தியச் சட்டவரைபுகள் பாமர மக்களுக்கு பாதுகாப்பாக இல்லாததையே இவ்வாறான தண்டனைகள் உறுதி செய்கின்றன என்பதாகும். அதனாற்தான் அவர்கள் சொல்கின்றார்கள், அப்பாவிகளுக்கு தூக்கு என்று வழக்கு முடிந்து போகாமல் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே இந்திய ஜனநாயகத்தின் நேர்மையான தன்மை வெளிப்படும் என்று.இந்த வழக்கில் தொடர்ச்சியாகத் தெரிவிக்கப்படும் ஆயிரமாயிரம் சந்தேகங்கள் தொடர்பில், அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியே அவை தொடர்பில் உண்மைகளைக் கண்டுபிடிக்காமல் நிரபாரதிகளை தூக்கில் போட்டு உண்மை குற்றவாளிகளை விட்டுவிட முயல்வது ஏன்..?
ஆயிரம் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டாலும், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட கூடாது என்பது இந்திய சட்டத்தளத்தில் எப்போதும் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கு புதிரும், மர்மங்களும் விடுவிக்கப்படாத நிலையில் தற்போது தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என முனைப்புப் பெறுவது ஏன்..? என்ற கேள்வி மீளவும் எழுந்திருக்கும் நிலையில், இவ்வழக்கில் எழுப்பபட்டுள்ள சில சந்தேகங்கள், இங்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்குப்பற்றி அறிந்திருக்க முடியாத இன்றைய இளைய சமூகம் இதுபற்றித் தெரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்.
நாட்டில் புற்றுநோயாக புரையோடி தேசத்தை சிறுக சிறுக அழிக்கும் ஊழலை உடனடியாக கட்டுப்படுத்தும் மந்திரக் கோல் எதுவும் தன்னிடமில்லை என்றும், எதை எடுத்தாலும் "எனக்கு தெரியாது" என்று சொல்லும் பொருளாதார புத்திசாலி மன்மோகனை பிரதமராக கொண்ட தேசம் இது.
மன்மோகனை தலைவராக கொண்ட இந்திய நாடாளுமன்றம் சட்டமியற்றக்கூடிய புனிதமான இடம் என்றும், அன்னாஹசாரே போன்றவர்கள் எல்லாம் தெருவில் உட்கார்ந்து கொண்டு சட்டத்தை இயற்ற சொல்லி வற்புறுத்த முடியாது என்றும் ப.சிதம்பரம், கபில்சிபல், பிரணாப் முகர்ஜி உள்ளிட்டவர்கள் சொல்கிறார்கள்.
சட்டம் இயற்றப்படும் இடம் புனிதமானது என்றால் அதை இயற்றுபவர்கள் புனிதர்களாகத் தானே இருக்க வேண்டும். தேர்தல் முடிவுகள் வரும் போது தான் தெரிகிறது இந்த புனிதமான இடத்திற்கு வெற்றி பெற்று வருபவர்களின் இலட்சனம். ப.சிதம்பரம் போன்றவர்கள் சொல்வது போல புனிதமான இடத்திற்குத் வருபவர்களின் எல்லாப் பாவங்களும் கழுவப்பட்டு, புனிதர்களாகவும் மாற்றப்படுவார்கள். அவர்களே சட்டம் இயற்றுபவர்களாகவும் இருந்து விடுவார்கள்.
சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோருக்கு தூக்குதண்டனைனை நிறைவேற்ற சொல்லி உத்தரவிட்டிருப்பது தவறு என்றார் முன்னாள் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் டி.ஜி.பி கேபிஎஸ்.கில். "ராஜீவ் கொலையான போது கூட்டத்தில் அவரது பக்கத்தில் இருந்த ஒரு காங்கிரஸ்காரன் கூட சாகலையே...அது எப்படியப்பா", என்று சராசரி தமிழன் சந்தேகம் எழுப்புகிறான்.
" இராஜீவை கொலை செய்ய அன்னிய நாட்டு சக்திகள் தான் முயன்றன; இராஜுவ் கொலைக்கான திட்டத்தை அன்னிய சக்திகளுடன் கைகோர்த்து ஆயுத தரகரான சந்திராசுவாமி தான் வகுத்தார்; இன்னும் சொல்லப்போனால் ராஜீவ் காந்தி கொலைக்கும், இந்திராகாந்தி கொலைக்கும் கூட தொடர்பு இருக்கிறது. இந்த இரு கொலைகளிலும் தொடர்பு உடையவர்கள் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் என்று முன்னாள் மத்திய அமைச்சர் கே.கே.திவாரி கூறியதாக அவுட்லுக் இதழில் செய்தி வெளியானதே! அந்த சந்திரசுவாமியை எல்லாம் ஏன் இன்னும் விசாரிக்கவில்லை? என்று படித்த இளைஞர்கள் கேள்வி கேட்கிறார்கள்.
"ராஜீவ் கொலை வழக்கில் தேடப்பட்டு பின்னர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட சிவராசன், காங்கிரஸ் கட்சி தலைவர் வாழப்பாடியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் எல்லாம் கிடைத்ததே..இதை இந்திய புலனாய்வு துறை ஏன் மறைத்தது? இப்படி அடுக்கடுக்காக சந்தேகங்களும் கேள்விகளும் தொக்கி நிற்கின்ற நிலையில் அவசர அவசரமாக தற்போது இவர்களை தூக்குமரத்திற்கு அனுப்ப காங்கிரஸ் அரசாங்கம் ஏன் முயல்கிறது?
இந்த வழக்கில் தொடக்கம் முதலே இந்திய அரசியலில் பல குழப்பங்களும் சித்து விளையாட்டுக்களும் அரங்கேறின என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிந்தது என்பதை காணமுடியும். 29.5.1991 திகதியில் தி இந்து நாளிதழில் வெளிவந்த ஒரு செய்தி அதன் முதல் கோணலை வெளியிட்டது. ஆசிய அளவில் வலுவான நாடாக வளர்ந்து கொண்டிருந்த இந்திய நாட்டு தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதை குறித்த வழக்கை ஆராய அமைக்கப்பட்ட விசாரனைக்கமிஷன் பற்றி அது சொன்னது. " ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது சந்திரசேகர் தலைமையிலான மத்தியில் ஆட்சியில் இருந்தது. இந்த படுகொலை பற்றி விசாரிக்க நீதிபதி வர்மா தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்று அப்போதைய உள்துறை அமைச்சர் சுபத்காந்த் சகாய்
அறிவித்தார். அப்போது சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் சுப்பிரமணியன் சாமி. இருவருமே வர்மா கமிஷன் என்பது, இந்த படுகொலை நேர்ந்தததில் இருந்த பாதுகாப்பு குறைபாடுகளை மட்டுமே விசாரிக்கும் என்று அறிவித்தனர். ஆனால் கொலைச்சதி பற்றி விசாரிக்காது என்று சொன்னார்கள். கொலைச்சதியையும் இந்த கமிஷன் விசாரிக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.
சந்திரசேகர் ஆட்சிக்கு பிறகு பி.வி.நரசிம்ம ராவ் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. தங்கள் கட்சியின் தலையாய குடும்பத்தை சேர்ந்த ராஜுவ் கொலை வழக்கு வேகம் பிடிக்கும். உண்மையான குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியை பிடித்த பிறகும் கூட ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிஷனுக்கு அலுவலகம் கூட ஒதுக்கப்படவில்லை. செயலாளர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் கூட நியமிக்கப்படவில்லை. விசாரணை வரம்பையும் அறிவிக்கவில்லை. இந்த அவலத்தை பற்றி நீதிபதி வர்மாவே குமுறியதாக சொல்லப்பட்டது. "இந்தியாவின் ஜனநாயக முதிர்ச்சி எந்த அளவுக்கு உள்ளது என்பதையே இது காட்டுகிறது. இந்த பிரச்சினை இந்தியாவின் கவுரவம் சம்பந்தப்பட்டது; உலகமக்கள் இந்த வழக்கை உன்னிப்பாக கவனிக்கிறார்கள்" என்றார் நீதிபதி வர்மா.
இதே காலகட்டத்தில், அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.சவான் " இந்திராகாந்தி கொலையில் கொலையாளிகளுக்கு பின்னால் இருந்த சக்திகளை அடையாளம் காண அரசு தவறிவிட்டது. ஆனால் ராஜீவ் கொலை விசாரணையில் அப்படி எதுவும் நடந்து விடக்கூடாது. இதில் விடுதலைப்புலிகளின் பங்கு உண்டு என்று சொல்லப்பட்டாலும், கொலைக்குப் பின்னால் உள்ள மற்ற சக்திகளை கண்டுபிடிப்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. உலகில் கேள்வி கேட்பாரின்றி ஆதிக்க சக்திகளாக விளங்கும் சில நாடுகளுக்கு ராஜீவ் காந்தியின் ஆட்சி வருவது என்பது எரிச்சலாக இருந்தது" என்றார். அதாவது, ராஜீவ் கொலையில் சர்வதேச சதிகள் இருந்ததை அன்றே எஸ்.பி.சவான் நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார். அப்படியென்றால் இந்த சர்வதேச சதிகள் இந்த வழக்கில் ஏன் அடையாளம் காணப்படவில்லை? இது பற்றி எதுவும் கண்டுபிடிக்கப்படாமலே தற்போது இந்திரா காந்தி கொலை வழக்கை குழப்பி முடித்தது போல் ராஜீவ் கொலை வழக்கும் முடிவுக்கு வந்து விட்டதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்து விட்டது.
காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே இருக்கும் கறுப்பு ஆடுகள் சிலவற்றின் துணை இல்லாமல் நிச்சயமாக ராஜீவ் காந்தி படுகொலை நடந்திருக்க முடியாது. இதற்கு இந்திராகாந்தி கொலை வழக்கு ஒரு உதாரணம். 1977 ஆம் ஆண்டு இந்திரகாந்தி பதவியிழந்த போது அவரிடம் ஒரு சாதாரண உதவியாளராக இருந்தார் ஆர்.கே.தவான். இந்திரா காந்தியின் நம்பிக்கைக்கு உரிய யஷ்பால் கபூர் என்பவரின் தயவில் அவர் இந்திராவிடம் வேலைக்கு சேர்ந்தார். 1980 ல் இந்திரகாந்தி பிரதமரான போது ஆர்.கே.தவான் அவரின் தனி உதவியளராக நியமிக்கப்பட்டார். இந்திரகாந்தியின் நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவராக மாறினார்.
பிறகு இந்திராகாந்தி கொலை பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட தக்கர் விசாரணைக்கமிஷன் தனது அறிக்கையில், " இந்திரா கொலையில் அவரது இல்லத்திற்குள்ளேயே சதிகள் உருவாக்கப்பெற்று அரண்மனை சூழ்ச்சி போன்ற பெரிய சதிகள் இந்த கொலையில் அடங்கியுள்ளன. குறிப்பாக இந்த கொலை தொடர்பாக இந்திராவின் தனி உதவியாளராக இருந்த ஆர்.கே.தவான் மீது சந்தேகம் எழுகிறது. இவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும் தவானின் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்திராகாந்தி உயிரோடு இருந்தவரை காங்கிரசு கட்சிக்கும், ஆர்.கே.தவானுக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. ஆனால் இந்திரா கொலைக்கு பின்னால் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகராக ஆர்.கே.தவான் மாறினார். இது எப்படி? 1998 ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் டெல்லி தொகுதி ஒன்றில் போட்டியிட ஆர்.கே. தவான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். என்ன ஒரு காங்கிரஸ் கைங்கரியம்? இந்திராவின் கொலையில் தொடர்புடையவர் என்று தக்கர் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்டவருககு காங்கிரசில் பதவி அளிக்கப்பட்டது. இது ஏன் என்ற மர்மம் இதுவரை யாருக்கும் புரியவில்லை.
இது போல், ராஜீவ் திருபெரும்புதூர் கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சி.பி.ஐ புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் அப்போது தமிழன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், ராஜீவ் திருப்பெரும்புதூர் வந்த போது, அவருடன் காங்கிரஸ் கட்சியின் எம்.பி யான மரகதம் சந்திரசேகரும், அவரது மகன் லலித் சந்திரசேகரும் இருந்தார்கள். கொலை நடந்த இடத்தில் லலித் சந்திர சேகரை (சிங்கள பெண்ணை திருமணம் செய்து கொண்டவர்)காணவில்லையே என்று பின்னர் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது " அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்க்க போய்விட்டேன்" என்று சொன்னார் அவர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு அவர் போகவில்லை. ஒரு காங்கிரஸ்காரர் தான் மரகதம் சந்திரசேகரை ஆஸ்பத்திரியில் சேர்த்தார் என்பது பிறகு தெரிந்தது.
லலித் சந்திரசேகரின் இந்த தவறான வாக்குமூலத்தை மேலும் விசாரிக்கவில்லை. இதே போல் லலித் சந்திரசேகரை முதலில் பார்க்கும் போது எந்த காயமும் படாமல் நன்றாக தான் இருந்தார். பிறகு நான்குநாள் கழித்து பார்த்த போது காலில் பெரிய கட்டுடன் இருந்தார். இந்த நேரத்தில் "மல்லிகை" அலுவலகம் முன்பு (சி.பி.ஐ அலுவலகம்) சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவனை பிடித்து விசாரித்தோம். அவனை விசாரித்ததில், "அமெரிக்காவில் இருந்து ஒரு அம்மா மல்லிகை அலுவலக முகவரியை கேட்டார்கள். அதனால் முகவரியை குறிக்க வந்தேன்" என்றான்.
அமெரிக்காவில் இருந்து முகவரி கேட்ட அந்த பெண்மணியின் கணவர் பெயர் "டேனியல் பீட்டர். இவர் லலித் சந்திரசேகருடன் திருப்பெரும்புதூர் வந்து அங்கு நடந்த விபத்தில் பலியானவர். பிறகு பிடிபட்டவனின் வீட்டை சோதனை செய்தோம். அங்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் " இந்த லலித்தால் தான் இந்த நிலைமை. இந்த கார்த்திகேயனிடம் சொல்லணும்" என்று அமெரிக்காவிலிருந்த பெண்மணி குறிப்பிட்டிருக்கிறார். இதற்காகத் தான் எங்கள் அலுவலக முகவரியையும் கேட்டிருக்கிறார்.
எங்கள் ஐ.ஜி ஸ்ரீகுமாரும், ரகோத்தமன் என்பவரும் அப்போது அமெரிக்காவில் தான் இருந்தார்கள். அவர்களுக்கு இந்த கடிதங்களை அனுப்பி விசாரித்து விடலாம் என்று பேச்சு எழுந்தது.அமெரிக்காவில் இருந்து திரும்பிய ரகோத்தமனிடம் கேட்டதற்கு " எனக்கு இந்த கடிதம் பற்றி ஒன்றுமே தெரியாது" என்றார்.
பிடிபட்ட கடிதங்கள் அடங்கிய கோப்பு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு தான் என்னிடம் திரும்பி வந்தது. ஆனால் அந்த கோப்பில், அமெரிக்காவிலிருந்த அந்த பெண்மணி எழுதியதாக சொல்லப்படும் முக்கியமான கடிதம் இல்லை. லலித் சந்திரசேகர், டேனியல் பீட்டரின் மனைவி, மரகதம் சந்திரசேகம் ஆகியோர் விவகாரம் முறையாக விசாரிக்கப்படவில்லை" இப்படி சி.பி.ஐ இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் சொல்லியிருந்தார்.
ராஜீவ் கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் சந்திராசாமி. நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் கொடி கட்டிப்பறந்த இந்த சந்திரசாமி யார்? நரசிம்மராவின் 25 ஆண்டுகால நெருங்கிய நண்பர். இந்திய பிரதமராக இருந்த சந்திரசேகருக்கும் வழிகாட்டி. சர்வதேச ஆயுதவியாபாரியான கசோக்கிக்கு மிக நெருக்கமான நண்பர். ராஜீவ் இந்திய பிரதமரான உடனேயே இந்தியாவை விட்டு வெளியேறியவர். சந்திரசாமிக்கு ராஜீவ் கொலைவழக்கில் தொடர்பு உண்டு என்று அரியானா மாநிலத்தை சேர்ந்த பா.ஜ. அரசியல்வாதி ரமேஷ் தலால் என்பவர் கூறினார். அவர் " சந்திராசாமிக்கு ராஜீவ் கொலையில் முக்கிய பங்கு உண்டு.
சந்திராசாமி என்னை வீட்டுக்கு அழைத்து "ராஜீவ் கொலையில் தனக்குள்ள தொடர்பை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டினார்." என்று வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.
"ராஜீவ் கொலை செய்யப்படுவதற்கு முன்பே, 1991 மார்ச் மாதத்திலேயே ராஜீவ் கொலை செய்யப்படுவார். காங்கிரஸ் இரண்டாக பிளவுபடும். தேர்தலுக்கு பிறகும் சந்திரசேகர் அரசு தொடர்ந்து நீடிக்கும் என்று சந்திராசாமி என்னிடம் கூறினார். அப்போதே சந்திராசாமியின் ரகசிய நடவடிக்கைகள் பற்றி உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவித்தேன்" என்றும் அவர் சாட்சியமளித்துள்ளார்.
ஆனால் அவ்வாறான சந்திராசாமி இப்போதும் சுதந்திரமாக வெளியில்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக