சென்னை, ஜூலை. 27- சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி தி.மு.க. மாணவரணி சார்பில் வரும் 29ஆம் தேதி மாநிலம் முழுவதும் அறப்போர் கிளர்ச்சி நடத்துவதற்கு தி.மு.க அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக தி.மு.க தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டத்தை எப்படியும் எப்பாடுபட்டாவது எத்தகைய நீதிமன்றங்களில் ஏறியும் தடுத்து நிறுத்துவது என்ற
முனைப்போடு தனியார் பள்ளி முதலாளிகளும், அதற்கு துணை போகும் தமிழக அரசும் மிகுந்த அக்கறையோடு உயர்நிலை வழக்கறிஞர்கள் துணையுடன் வாதாடி, போராடி தமிழக மாணவர்களின் எதிர்காலம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று ஆட்டமாடி கொண்டிருக்கிறார்கள்.அவர்களின் ஆட்டத்தைத் தடுக்கவும் அநீதியை வென்று அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கவும் கடமைப்பட்டுள்ள தமிழகத்தின் கட்சிகள் பல்வேறு தலைவர்களின் ஏகோபித்த குரலோடு தி.மு.க.வின் குரலும் இணைந்திருப்பதால், தி.மு.க.வின் மாணவர் அணி, இளைஞர் அணி, பல்வேறு அணிகளின் சார்பாக வரும் 29ஆம் தேதி சமச்சீர் கல்வி ஆதரவுக்கு வலுசேர்க்கும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தையும் மாணவர்கள் ஆசிரியர்கள் புறக்கணிக்க வேண்டும். பெற்றோர்கள் வேலைக்கு செல்லாமல் ஒத்துழைக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிறிதும் வன்முறைக்கு இடமின்றி, அமைதியான முறையில் அறவழியில் சமச்சீர் கல்வி கோரிக்கையை வலியுறுத்தி, அறப்போர் கிளர்ச்சி நடைபெற வேண்டும். இவ்வாறு திமுக கூறியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக