கறுப்பு பணம், ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் துவங்கிய பாபா ராம்தேவ் நள்ளிரவில் போலீஸ் படையினரால் பந்தலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டார். இவர் கைது செய்யப்படுவதாக அறிந்த பாபாவின் ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது, இதனையடுத்து கண்ணீர்புகைகுண்டு வீச்சு நடந்தது. போராட்டத்திற்கான அனுமதி போலீசார் வழங்கவில்லை என்றும் இதனால் இவர் அப்புறப்படுத்தப்பட்டார் என்றும் இவர் கைது செய்யப்படவில்லை என்றும் போலீசார் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பதட்டத்தை தணிக்க மைதானத்தை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அன்னிய நாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வர வலியுறுத்தியும், யோகா குரு பாபா ராம்தேவ், சாகும் வரைஉண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாக அறிவித்தார். இந்த போராட்டம் நடந்தால், பிரச்னை ஏற்படும் எனக் கருதிய மத்திய அரசு, உண்ணாவிரதத்தை வாபஸ் பெற வைக்க, கடும் முயற்சிகளை மேற்கொண்டது. மூத்த மத்திய அமைச்சர்கள், பாபா ராம்தேவுடன் பேச்சு நடத்தினர். மத்திய அரசு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததை அடுத்து, நேற்று காலை முதல், உண்ணாவிரதப் போராட்டத்தை ராம்தேவ் துவக்கினார்.
உண்ணாவிரதப் போராட்டத்துக்காக, டில்லி ராம்லீலா மைதானம் முழுவதும், வெல்வெட் துணியால் வேயப்பட்ட பிரமாண்ட பந்தல் போடப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை முதல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள், உண்ணாவிரதப் பந்தலில் குவியத் துவங்கினர். ராம்தேவ், காலை 5 மணிக்கு தன் சிஷ்யர்களுடன் மேடைக்கு வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர், மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இதன் பின், இரண்டு மணி நேரம், பூஜா மற்றும் யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பஜனை மற்றும் தேசபக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டன. ராம்தேவ், காலை 7 மணிக்கு உண்ணாவிரதத்தை துவக்கினார். உண்ணாவிரத மேடையில் இந்து, முஸ்லிம், சீக்கிய மதத் தலைவர்கள் ராம்தேவுடன் அமர்ந்திருந்தனர். வந்திருந்த அனைவருமே, எழுச்சியுடன் காணப்பட்டனர். "ஊழலை ஒழிக்க வேண்டும்,கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோஷமிட்டனர்.
சதி: உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து பாபா ராம்தேவ் பேசியதாவது: ஊழலுக்கு எதிராக என் இயக்கத்தின் மூலம், எந்த அரசியல் குறிக்கோளையும் நிறைவேற்ற, நான் முற்படவில்லை. இந்த இயக்கம் எந்த அரசுக்கும் எதிரானது அல்ல. இந்திய மக்களின் 4 லட்சம் கோடி ரூபாய், அன்னிய வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை, மத்திய அரசு திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழலுக்கு எதிராக, நான் குரல் கொடுத்தால், என் மீதே ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். என் பெயரில், இந்த நாட்டிலோ அல்லது வெளிநாடுகளிலோ, ஒரு அங்குல நிலம் கூட வாங்கவில்லை. என் பெயரில் எந்த வங்கியிலும் கணக்கு கிடையாது. நமது கோரிக்கைகளில் சிலவற்றை அரசு ஏற்றுக்கொண்டு விட்டது; மேலும் சில கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரை, என் போராட்டம் தொடரும். என் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறுவோருக்கு சவால் விடுகிறேன். அவர்கள் குற்றச்சாட்டுகளை நிரூபித்து விட்டால், இந்த இயக்கத்தை கலைத்து விடுகிறேன். எனக்கு எதிராக சதி நடந்து வருகிறது. அது என்ன என்பதை தற்போது கூற மாட்டேன். நேரம் வரும்போது கூறுவேன். நம்மை பொறுத்தவரை, முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.இவ்வாறு ராம்தேவ் பேசினார்.
ராம் தேவ் கைது ? பந்தலுக்கு தீ வைப்பு : மத்திய அரசுடன் உடன்பாடு ஏற்படாததால் ராம் தேவ் தொடர்ந்து உண்ணாவிரதத்ததில் ஈடுபட்டார்.இந்நிலையில் நள்ளிரவில் மைதானத்தை சுற்றி போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர். இவர் கைது செய்யப்படுவார் என்ற பதட்டத்தை தொடர்ந்து போலீசாருக்கும் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. போலீசார் மீது கல்வீசப்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி , கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தினரை கலைத்தனர். போராட்ட பந்தலுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் பெரும் பதட்டம் நிலவியது. போராட்டத்திற்கான அனுமதியும் ரத்து செய்யப்பட்டது.தொடர்ந்து போலீசார் ராம்தேவை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர்.
ராம் தேவ் டில்லிக்கு வெளியே விடப்பட்டதாக தெரிகிறது. மைதானத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மைதானத்தை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மைதானத்திற்கு வரும் அனைத்து வழிகளும் சீல் வைக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரத பந்தல்கள் கலைக்கப்பட்டு விட்டது.ஆதரவாளர்கள் அமைதிகாக்கும் படி பாபா ராம் தேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.யோகா பயிற்று வி்ப்பதற்காகமட்டுமே மைதானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. உண்ணாவிரத போராட்டத்திற்காக அனுமதி வழங்க வில்லை என மாநில அரசுதெரிவித்துள்ளது. பாபாராம் தேவ்கைது செய்யப்படவில்லை. அவர் பத்திரமாக பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.அதே சமயம் பாபா ராம் தேவ் மீண்டும் ஹரித்துவார் நகருக்கே அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படு்கிறது. அதிகாரிகள் துணையுடன் அவர் ஹெலிகாப்டர் மூலம் டேராடூனுக்கு கொண்டு செல்லப்படுகிறார். பின்னர் ஆசிரமத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்.
நன்றி செய்திகள்: தினமலர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக