சமூகத்தில் ‘உதிரி’களாக்கப்ட்ட அடித்தட்டு மக்களின் வாழ்வியல் முறையை சினிமாவின் இலாப வெறிக்கு பயன்படுத்தும் ஒரே இயக்குனர் நமது ‘பாலா’ தான்.
மனநோயிலிருந்து விடுபட்டும் ஆசிரமத்திலிருந்து வர இயலாத கதாநாயகன், தொண்டைக் குழியை கடித்து குதறும் கதாநாயகன், மனிதர்களை Horlicks போல் அப்படியே சாப்பிடும் கதாநாயகன்,
என அவரது பாத்திர படைப்புகளின் மீது திணிக்கப்பட்ட சோகமும், வக்கிரம் பிடித்த வன்முறைக் காட்சிகளும் தவறாமல் இடம் பிடிக்கும். அந்த வகையில், அவன் - இவன் படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் அபத்தத்தின் உச்சம்.
ஒரு ஊர்ல ஒரு ஜமீன்தார், அவர் மீது பாசம் வைத்திருக்கும் கதாநாயகர்கள். அவர்கள் இருவருக்கும் அப்பா ஒன்று அம்மா வேறு வேறு. தாயும், மகனும் சேர்ந்து ‘தண்ணியடிக்கிறார்கள்” (குடித்து கும்மாளம் போடுகிறார்கள்) .
கதாநாயகர்கள் இருவர் குடும்பத்தின் உறுப்பினர்களுமே விரசமான மொழியில் பேசிக்கொள்கிறார்கள். அவர்களது நடவடிக்கைகள் அதை விட கேவலமாக இருக்கிறது. இப்படி ஒரு குடும்பமும் ஊரும் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கிறதாம்.
அந்த காமெடி பீஸ் ஜமீன்தாரை, வில்லன் கொன்று விடுகிறான். அதற்காக நமது கதாநாயகர்கள் இருவரும் சேர்த்து அந்த வில்லனை கொன்று விடுகிறார்கள். அதோடு “a film by Bala” என்று டைட்டில் போட்டு விடுகிறார்கள்.
படத்தில் “பாலா’வின் பெயரைச் சொல்லும் விதமான காட்சிகள் ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்பவர்களுக்கு, இருக்கவே இருக்கிறது ‘சமீன்தாரை” நிர்வாணமாக ஓடவிடச் செய்யும் காட்சி. 55 வயது மதிக்கத் தக்க ஒருவரை அம்மணமாக ஓடவிடுவதன் மூலம் பார்வையாளர்களை ஒரு கணம் அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டும் என்பதே இயக்குனரின் எண்ணம்.
அதை விட கொடுமை என்னவென்றால், வில்லன் பேசும் வசனம். “குர்பானி” என்கிற பெயரில் ஒட்டக்கறியை கொண்டு வந்து சாப்பிடுறான்களே? அவங்களை மட்டும் நீங்க ஒன்னும் சொல்லமாட்டிறீங்க? என்று ஆதங்கப்படுகிறான் மாட்டிறைச்சி விற்பனை செய்யும் வில்லன்.
மாட்டிறைச்சி சாப்பிடும் பழக்கம் உடையவர்களும், ஒட்டக இறைச்சி சாப்பிடக் கூடியவர்களும் முஸ்லிம்கள்களே. அதை எதிர்ப்பவர்களே ஹிந்துதுவாவினர் என்கிற அரசியல் பார்வை கூட பாலாவுக்கு இல்லை.
ஆர்.எஸ்.எஸ்.காரன் மாடு மற்றும் ஒட்டகக் கறி உண்பவர்களை மனுதர்ம அடிப்படையில் தண்டிக்க வேண்டும் என்கிறான். ஆனால் நமது பாலாவோ, ஒட்டக இறைச்சி சாப்பிடுபவனை, மாட்டிறைச்சி சாப்பிடுகிறவன் தண்டிக்க வேண்டும் என்று விரும்புகிறார். இராமகோபாலனுக்கே ஒரு படி மேலே போய் ‘இந்துத்துவ’ வகுப்பு எடுக்கிறார் நமது பாலா.
இந்த இடத்தில் ‘பாலா’வின் முந்தைய படைப்பான “நான் கடவுள்” திரைப்பட வசனம் நினைவுக்கு வருகிறது. ‘மாட்டுக்கறி தின்னாலும் மலையாளி புத்திசாலியாத்தாண்டா இருக்கான்’ என்று வில்லன் ஒரு வசனம் பேசுவான். அந்த வசனத்திற்கு முழுமுதற்பொறுப்பு ஜெயமோகன் என்னும் எழுத்தாளர். மேற்கூறிய வசனத்தில் இரண்டு செய்திகள் நாம் கவனிக்க வேண்டும்
(1) மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களுக்கு புத்தி கிடையாது. (2) மலையாளிகள் புத்திசாலி. ஜெயமோகன் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்று சொல்லும்போது, அவரின் இந்துத்துவ அரசியல் மனநிலை அப்பட்டமாக வெளிப்படுகிறது. அதே சமயம், தன்னுடைய மலையாளி இன பாசத்தையும் விட்டுக் கொடுக்காமல், மலையாளிகள் புத்திசாலிகள் என்று ஒரு கருத்தினை பதிவு செய்கிறார். எஸ்.ராமகிருஷ்ணன்தான் அவன் - இவன் படத்திற்கு செயமோகன் பாணியில் ஒரு வசனத்தை எழுதியிருக்கிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக