பாபா ராம்தேவின் வெளிநாட்டு சொத்துகள் பற்றி அமலாக்கப்பிரிவு விசாரணையை தொடங்கி உள்ளது.
ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, யோகா குரு பாபா ராம்தேவ் டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார். அவரை போலீசார் வலுக்கட்டாயமாக டெல்லியை விட்டு வெளியேற்றினர். அவருடைய ஆதரவாளர்களை தடியடி நடத்தி கலைத்தனர். பின்னர், தனது ஆசிரமத்தில் உண்ணாவிரதத்தை தொடர்ந்த ராம்தேவ்,
9 நாட்களுக்கு பிறகு உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். இருப்பினும், ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று அறிவித்தார்.ராம்தேவ் மத்திய அரசுக்கு சவாலாக உருவெடுத்துள்ளதை மத்திய அரசு விரும்பவில்லை. ராம்தேவ் தனக்கு ரூ.1,100 கோடி சொத்து இருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். எனவே, அவரது சொத்துகளில் ஏதாவது முறைகேடுகளை கண்டுபிடிக்க முடியுமா என்று மத்திய அரசு முனைந்துள்ளது. இதற்காக, மத்திய அரசின் அமலாக்கப்பிரிவு முடுக்கி விடப்பட்டுள்ளது. ராம்தேவும், அவருடைய 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் வெளிநாடுகளில் வாங்கியுள்ள சொத்துகள் மற்றும் செய்துள்ள முதலீடுகள் குறித்து அமலாக்கப்பிரிவு, விசாரணையை தொடங்கி உள்ளது. இந்த முதலீடுகள் மற்றும் பணபரிவர்த்தனைகளில், அன்னிய செலாவணி சட்ட விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளனவா என்பதை கண்டறிவதே இந்த விசாரணையின் நோக்கம்.
ராம்தேவ் தொடங்கிய பல்வேறு அறக்கட்டளைகள் மூலமாக பணபரிவர்த்தனைகள் நடைபெறுவதை தடுப்பதும் இந்த விசாரணையின் நோக்கம் ஆகும். அதிலும் குறிப்பாக, ஸ்காட்லாந்தில் உள்ள லிட்டில் கம்ப்ரே தீவு பற்றி அமலாக்கப்பிரிவின் பார்வை தீவிரமாக விழுந்துள்ளது. அந்த தீவு, ஒரு தம்பதியர் ராம்தேவுக்கு பரிசாக அளித்தது ஆகும். அந்த தீவு, ராம்தேவின் வெளிநாட்டு தலைமை அலுவலகமாகவும், நல்வாழ்வு மையமாகவும் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு வசம் ஏற்கனவே உள்ள ஆவணங்கள் மற்றும் உளவுத்துறை தகவல்களை அடிப்படையாக வைத்து இந்த விசாரணை நடைபெறுகிறது. இந்த விசாரணையில், ஏதாவது சட்டவிரோதம் நடந்திருப்பது கண்டறியப்பட்டால், ராம்தேவ் மீது அன்னிய செலாவணி முறைப்படுத்தும் சட்டம் (பெமா) அல்லது அன்னிய செலாவணி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்வது பற்றி அமலாக்கப்பிரிவு முடிவு செய்யும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுபோல், ராம்தேவுக்கு எதிராக சி.பி.ஐ.யும் விசாரணை நடத்தி வருகிறது. ராம்தேவ், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும், 30 நிறுவனங்களை தொடங்கி இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவற்றில், ராம்தேவுக்கு நெருக்கமான ஆச்சாரியா பாலகிருஷ்ணன், இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை, ஆயுர்வேத மருந்து தயாரிப்பவை ஆகும். இந்த நிறுவனங்களும், ராம்தேவ், ஆச்சாரியா பாலகிருஷ்ணன் ஆகியோரும் தாக்கல் செய்த வருமானவரி ஆவணங்களை சி.பி.ஐ. ஆய்வு செய்து வருகிறது. அந்த வருமான கணக்குக்கும், ராம்தேவ் அறிவித்த ரூ.1,100 கோடி சொத்துக்கும் இடையே ஏதாவது முரண்பாடு உள்ளதா என்று ஆய்வு செய்து வருகிறது. மேலும், ராம்தேவ் நிறுவனங்களில் இருந்து வேலைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை தேடிப்பிடிக்கும் பணியிலும் சி.பி.ஐ. ஈடுபட்டுள்ளது. அந்த ஊழியர்கள் மூலம், ராம்தேவ் நிறுவனங்கள் பற்றிய முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என்று சி.பி.ஐ. கருதுகிறது. ராம்தேவுக்கு நன்கொடை அளிக்கும் வெளிநாட்டினர், அவர்களின் பின்னணி, தொடர்புகள் ஆகியவற்றையும் சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. ராம்தேவ் நிறுவனங்களின் பங்குதாரர்கள் மீதும் சி.பி.ஐ.யின் பார்வை விழுந்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக