புதுடெல்லி, "ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிட மாட்டேன்" என்று பிரதீபா பட்டீல் கூறினார்.
தற்போதைய ஜனாதிபதி பிரதீபா பட்டீல் இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றவர். கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் 25-ந் தேதி பதவி ஏற்ற இவர் இந்தியாவின் 12-வது ஜனாதிபதி ஆவார். ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு முன்னர் ராஜஸ்தான் மாநில கவர்னராக பதவி வகித்தார்.
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த இவர் ஜனாதிபதியாக பதவி ஏற்று 4 ஆண்டுகள் ஆகிறது. அடுத்த (2012) ஆண்டு ஜூலை மாதம் இவரது பதவிக்காலம் முடிவடைகிறது.
'அடுத்த ஆண்டு மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவீர்களா?' என்று பிரதீபா பட்டீலிடம் நேற்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "நான் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் எண்ணம் இல்லை. எனது சொந்த மாநிலமான மராட்டியத்தில் உள்ள புனே நகரில் தங்கி ஓய்வு எடுக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.
பிரதீபா பட்டீல் புனே நகரத்தில் தங்கி ஓய்வு எடுக்க விருப்பம் தெரிவித்து இருந்தாலும், மத்திய அரசு அவருக்கு டெல்லியிலேயே பாதுகாப்பான ஒரு பங்களாவை ஏற்பாடு செய்து தயார் நிலையில் வைக்கும் என்று கூறப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக