தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.5.11

தமிழக தேர்தல் 49(ஓ) படிவம் சாதித்தது என்ன?


தமிழகமக்கள் தேர்தல் முடிவுகளுக்காக காத்துக்கொண்டிருக்கும் நேரம் இது.
நடந்து முடிந்த தேர்தலில் 78 சதவீதம் வாக்கு பதிவாகியிருப்பது மக்களிடையே தேர்தல் விழிப்புணர்வும், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையையும் காட்டுவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிகிறார்கள்.

ஆனால் அதே நேரத்தில் இந்த தேர்தலில் கிராமப்புற  வாக்காளர்களே ஆர்வத்துடன் பங்கொடுத்துக்கொண்டார்கள். சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் படித்தவர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் வாக்குபதிவு வழக்கம் போல் குறைவாகவே உள்ளது.


வாக்களிக்க விரும்பாதவர்களும் தங்கள் கருத்தை பதிவு செய்ய 49(ஓ)படிவம் வாய்ப்பு தந்துள்ளது.நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் 24 ஆயிரத்து 591 பேர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் வாக்கை மறுத்துள்ளனர். இதில் தலைநகர் சென்னை முதலிடத்தில் உள்ளது.

49 (ஓ) படிவம் படித்த நகரவாசிகளிடையே  யாரும் ஒழுக்கமில்லை என்ற அடிப்படையிலும், புதுமையாக ஏதாவது செய்வது என்கிற கண்ணோட்டத்துடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.மேலும் ஒருபகுதியினர் தங்களது சமூக அக்கறையை வெளிப்படுத்தும் விதமாக 49(ஓ) படிவத்தை தேர்வு செய்கிறார்கள்.
இதற்கான காரணமாக தங்களது தொகுதியில் அரசியல் கட்சிகள் சரியான வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்கிறார்கள்.மேலும் சிலர் அரசியல் ஒரு சாக்கடை என்கிற மனோபாவம் உள்ளவர்களும் இந்த படிவத்தை தேர்வு செய்கிறார்கள்.

இதுவரை இந்த படிவத்தை பயன்படுத்தி எந்த வேட்பாளரும் நிராகரிக்கப்படவில்லை. வெற்றியாளரைவிட 49(ஓ) அதிக ஒட்டுகள் விழுந்தால் தேர்தலை ரத்துசெய்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்தவேண்டும்.
அப்படி தேர்தல் நடத்துகையில் ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தடை விதிக்கவேண்டும். அப்படியான ஒரு நிலைமை ஏற்படுவதற்கு  அதிக சாத்தியமில்லை.இன்றுள்ள தேர்தல் அமைப்பு முறையில் 49(ஓ) படிவம் ஒன்றையும் சாதிக்கப் போவதில்லை.

49(ஓ) படிவத்தை தேர்வு செய்த காரணங்களின் மையக்கருத்து மாற்றத்தை விரும்புகிறோம் என்பது தான். மாற்றத்தை விரும்புபவர்களின் நோக்கத்தை ஒருங்கிணையவிடாமல் பல்வேறு வகையான திசைதிருப்பல்கள் எழுகின்றன.
49(ஓ) வுக்கான பிரச்சாரமும் இதன் ஒரு பகுதியாகத்தான் உள்ளது. தேர்தல் மட்டுமே அரசியல் என்பதாகவும், வேட்பாளர்களின் தனி மனித ஒழுக்கத்தை மேம்படுத்தினால் அரசியல் தூய்மையாகிவிடும் எனவும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஒரு தனிமனிதனின் ஒழுக்கத்தை தீர்மானிப்தே அவர் சார்ந்துள்ள கொள்கைதான் என்பது  மறக்கடிக்கப்படுகிறது.

தனிமனிதனை மையப்படுத்திய அரசியலை விட கொள்கை சார்ந்த அரசியலே சரியான தீர்வாக அமையும். அரசியல் சாக்கடை என்று சொல்லிகொண்டு ஒதுங்கியிருப்பது மாற்றத்தை ஏற்படுத்தாது.
ஒவ்வொரு தனிமனிதனின் அன்றாட வாழ்க்கையை தீர்மானிக்கிற அரசியலை தேர்தல் கால வேலையாக பார்க்காமல்  அன்றாட வாழ்வின் அங்கமாக பார்க்கவேண்டும்.
பெரும்பான்மை மக்களின் வாக்குகளுக்கு மதிப்பளிக்காததுமான தேர்தல் அமைப்பை மாற்றி, வாக்கு விகிதத்திற்கு  ஏற்ப கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்குதல் என்ற முறையில்(விகிதாச்சார பிரதிநிதித்துவம்) மாற்றியமைப்பது தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றம் ஆயுதமாகப் பயன்படும்.

அ.தமிழ்ச்செல்வன்

0 கருத்துகள்: