சென்னை, தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 13-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.
வாக்குப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் இடங்களில் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் விழிப்புடன் பாதுகாத்து வருகிறார்கள்.
வருகிற 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மதுரை, கோவை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய தேர்தல் மண்டலங்களில் உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் அதிகாரி, உதவி தேர்தல் அதிகாரி, பயிற்சியாளர் ஆகியோருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தலைமையில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் பி.அமுதா, டி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் பயிற்சி வழங்கப்பட்டது.இறுதி கட்டமாக நேற்று சென்னை மண்டலத்தில் உள்ள தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளுக்கு வாக்கு எண்ணிக்கை பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தின் பின்புறத்தில் உள்ள பொன்விழா கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. காலையில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்ட பயிற்சி முகாம் நடந்தது. மாலையில் காஞ்சீபுரம், வேலூர் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி முடிந்ததும் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
மே 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்துள்ளோம். சென்னையில் தான் கடைசி கட்ட பயிற்சி அளித்துள்ளோம். வாக்கு எண்ணிக்கை சுமுகமாக நடைபெற 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை வாகனங்களை அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள், கலெக்டர்கள் உள்ளிட்ட யாருடைய வாகனங்களாக இருந்தாலும் அனுமதி கிடையாது.
அதுபோல வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளே ஒவ்வொரு கட்சிசார்பிலும் ஒரு ஏஜெண்டுதான் இருப்பார்கள். அவர்களுக்கு அடையாள கார்டு தேர்தல் அதிகாரி மூலம் வழங்கப்படும். அதைக் கொண்டுதான் அவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லமுடியும். அவர்கள் ஒரு முறை மையத்திற்குள் சென்றால் முடிவு வெளிவந்த பின்னர்தான் மையத்தை விட்டு வெளியே வரமுடியும்.
ஒவ்வொரு தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கையின்போது 8 முதல் 14 மேஜைகள் போடப்பட்டிருக்கும். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மத்திய தேர்தல் பார்வையாளர் இருப்பார். வாக்கு எண்ணிக்கையில் மொத்தம் 10 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஈடுபடுவார்கள். 2 ஆயிரத்து 800 மைக்ரோ அப்சர்வர்கள் என்று அழைக்கப்படும் மத்திய அரசு அதிகாரிகளும் இருப்பார்கள்.
ஒவ்வொரு மேஜையிலும் ஒரு கண்காணிப்பு கேமராவுடன் வீடியோ கருவியும் பொருத்தப்படும். வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதல் முடிவு வரை இடைவெளி இன்றி முழுமையாக வீடியோவில் எடுக்கப்படும். ஒவ்வொரு சுற்றின் முடிவும் வீடியோவில் பதிவு செய்யப்படும். அதன்பிறகே ஒவ்வொரு சுற்றின் முடிவும் வெளியிடப்படும். ஒவ்வொரு சுற்றின் முடிவும் சரிபார்த்த பின்னர்தான் அடுத்த சுற்று எண்ணப்படும்.
வாக்கு எண்ணும் மையங்களுக்குள் யாரும் செல்போன் எடுத்துச்செல்லக்கூடாது. தேர்தல் அதிகாரி மட்டும் செல்போன் வைத்திருப்பார். பத்திரிகையாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தகவல் மையத்திற்குள் மட்டும் செல்போன் பயன்படுத்தலாம். வாக்கு எண்ணும் இடத்தில் செல்போன் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் போலீசார், தமிழ்நாடு சிறப்பு போலீசார், மத்திய துணை ராணுவப் படை போலீசார் ஆகிய 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும். இவர்கள் அனைவரும் பரிசோதனை செய்த பின்னரே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்ல முடியும். இவ்வாறு பிரவீண் குமார் கூறினார்.
பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: தேர்தல் ஆணையம் வரம்புமீறி செயல்படுவதாகவும், அதற்கு கடிவாளம் போட வேண்டும் என்றும் கூறப்படுகிறதே?
பதில்: தேர்தல் விதிமுறை எல்லா மாநிலங்களுக்கும் ஒன்றுதான். சிறுசிறு வேறுபாடுகள் உண்டு. தமிழகத்தைப் பொறுத்தவரையில், 1959-ம் ஆண்டு சட்டத்தின்படி, சுவர் விளம்பரத்திற்கு தடை உள்ளது. அதைத்தான் நாங்கள் அமல்படுத்தி இருக்கிறோம்.
கேள்வி: தேர்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் உள்ளன?
பதில்: 52 ஆயிரம் வழக்குகள் பதிவாகி உள்ளன. அவற்றில் 1,700 வழக்குகள் தேர்தலுடன் சம்பந்தப்பட்ட பணபரிவர்த்தனை தொடர்பானது. இந்த வழக்குகளுக்கு வருகிற 12-ந்தேதிக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 70 முதல் 80 சதவீதம் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.
உரிமை கோராத பணம் பற்றிய விசாரணை வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. சரியான ஆவணங்களை காண்பித்து பணத்துக்குரியவர்கள் தங்கள் பணத்தை பெற்றுச்செல்லலாம்.
கேள்வி: ஓட்டு எண்ணிக்கை 'பூத்' வாரியாக தெரியாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதா?
பதில்: அவ்வாறு செய்வதற்காக சில ஆலோசனைகளை நடத்தினோம். ஆனால், அதில் சில பிரச்சினைகள் உள்ளன. எனவே, வழக்கம்போல் 'பூத்' வாரியாகத்தான் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
கேள்வி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களில் மின்தடை ஏற்பட்டால் பாதுகாப்பு பாதிக்கப்படாதா?
பதில்: அந்த மையங்களில் மின்தடை செய்யாமல் இருக்க தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் சொல்லி இருக்கிறோம். மேலும், ஒருவேளை தப்பித்தவறி மின்தடை ஏற்பட்டாலும் ஜெனரேட்டர் வசதி உள்ளது. இவ்வாறு பிரவீண்குமார் பதில் அளித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக