தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.4.11

யூரி கெகாரின் விண்வெளியில் சுற்றிவந்து ஐம்பது வருடங்கள்


ரஷ்ய விண்வெளி வீரர் யூரி கெகாரின் விண்வெளியில் சுற்றிவந்து ஐம்பது வருடங்கள் ஆகின்றன. விண்வெளிக்குச் சென்றுவந்த முதலாவது மனிதன் அவர்தான்.
வானத்தை வசப்படுத்த மனிதன் எடுத்த முயற்சியின் முதல் வெற்றியாக அது பார்க்கப்பட்டது.
அதுவரை மனிதர்கள் யாரும் விண்வெளிக்கு சென்றதில்லை. ரஷ்யா தான் முதல் முறையாக அந்த சாதனையை செய்தது. யூரி கெகாரின் பூமியை ஒரு சுற்று சுற்றிவந்து மீண்டும் பூமிக்குள் இறங்கியபோது அவர் விஞ்ஞான உலகின் கதாநாயகனாக பார்க்கப்பட்டார்.

காரணம், அவர் விண்வெளிக்கு செல்வதற்கு முன்பு மனிதர்கள் யாருமே விண்வெளிக்கு சென்றதில்லை. செல்ல முடியுமா என்பதில் பல்வேறு சந்தேகங்கள் நிலவின.
விண்வெளியின் தட்பவெப்ப நிலையை மனித உடம்பு தாங்குமா என்பது முதல் கேள்வி. புவியீர்ப்பு சக்தி செயற்படாத விண்வெளியில் மிதக்க நேரும் மனிதனின் மூளை வேலை செய்யுமா என்பதில் பலருக்கும் சந்தேகம் இருந்தது. விண்வெளியில் மனிதனுக்கு பைத்தியம் பிடித்துவிடலாம் என்றெல்லாம் அச்சங்கள் நிலவின.
அதைவிட முக்கியம், பூமியிலிருந்து விண்ணுக்கு தாவிப்பாயும் விண்கலத்தில் அதிகூடிய வேகசக்தியில் செல்லும் கலனில் மனித உடம்பு தாக்கு பிடிக்குமா என்பதும் யாருக்கும் தெரியாது.
இப்படி செல்லும் விண்கலம் பூமியின் சுற்றுச்சூழலில் இருந்து வான் மண்டலத்திற்குள் செல்லும்போதும் மீண்டும் வான் மண்டலத்திலிருந்து பூமியின் சுற்றுச்சூழலுக்குள் நுழையும்போதும் ஏற்படும் அதிகூடிய வெப்பசூழலை மனித உடல் தாங்குமா அல்லது மனித உடல் வெடித்து சிதறிவிடுமா என்றெல்லாம் விஞ்ஞானிகளுக்கு பல்வேறு கவலைகள் இருந்தன. இதையெல்லாம் மீறி விண்வெளிக்குள் போகும் மனிதனால் அங்கு நிலவும் கதிரியக்கத்தை தாங்க முடியுமா என்பது அடுத்த பெரிய கேள்வி.
இத்தனை கேள்விகள் மற்றும் கவலைகளுடன் தான் யூரி கெகாரின் தனது சின்னஞ்சிறிய விண் ஓடத்தில் பூமியை விட்டு விண்ணுக்கு தாவினார்.
அவரை மேலே அனுப்பிவிட்டு கவலையுடன் கையைப்பிசைந்து கொண்டிருந்த விஞ்ஞானிகளுக்கு, விண்ணிலிருந்து கெகாரினின் உருவமும் குரலும் கீழே இருக்கும் கட்டுப்பாட்டு அறையில் தெரிந்ததும் ஒரே கொண்டாட்டமாகிப்போனது.
விண்வெளியை பார்த்து மனிதன் அச்சம் கொள்ளத்தேவையில்லை. அங்கே மனிதன் செல்லவும் முடியும் அதை வெற்றிகொள்ளவும் முடியும் என்பதை அப்போது தான் விஞ்ஞானிகள் அனுபவ பூர்வமாக உணர்ந்தனர்.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஐநூற்றுக்கும் அதிகமான விண்வெளி வீரர்கள் வான் மண்டலத்திற்கு சென்று திரும்பியிருக்கின்றனர். இதற்கெல்லாம் முதல் புள்ளியாக திகழ்ந்த கெகாரினின் விண்வெளிப்பயணத்தை, ரஷ்ய அரசாங்கம் இன்று விமரிசையாக கொண்டாடிவருகிறது.
கிரம்லிண் மாளிகையில் ஐம்பது துப்பாக்கி வேட்டுச்சத்தங்களுடன் இந்த நாள் நினைவு கூறப்படுகிறது.
இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருக்கும் வானியலாளர்களுடன் வீடியோ மூலம் பேசிய ரஷ்ய அதிபர் டிமித்ரி மெத்வதேவ், விண்வெளி ஆராய்ச்சி என்பது ரஷ்யாவின் முன்னணி இலக்குகளில் ஒன்றாக திகழ்வதாக தெரிவித்தார். இதற்கு தேவைப்படும் நிதி ஒதுக்கீடுகளை தமது நாடு செய்யும் என்றும் அவர் கூறினார்.
விண்வெளிக்கு முதன் முதலில் மனிதனை அனுப்பி சாதனை செய்த ரஷ்யா இந்தத் துறையில் தனக்குள்ள சாதக நிலைமையை இழக்க தயாரில்லை என்றும் அவர் கூறினார்.
கெகாரின் தன்னந்தனியாக ஒற்றையடிப்பாதையில் மேற்கொண்ட விண்வெளிப்பயணம் இன்று பலரும் பயணம் செய்யக்கூடிய நெடுஞ்சாலை பயணமாக வளர்ந்திருக்கிறது.

0 கருத்துகள்: