புதுடெல்லி:பாகிஸ்தான் அதிபரையும், பிரதமரையும் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை காண பிரதமர் மன்மோகன்சிங் அழைத்த நடவடிக்கையை ‘சமாதானத்தின் சிக்ஸர்’ என பாகிஸ்தான் பத்திரிகைகள் பாராட்டியுள்ளன.
வருகிற 30-ஆம் தேதி மொகாலியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி ஆட்டம் நடைபெறவிருக்கிறது.இப்போட்டியை காண பாக்.பிரதமர் யூசுஃப் ரஸா
கிலானிம்,பாக்.அதிபர் ஆஸிஃப் அலி சர்தாரி ஆகியோரை பிரதமர் மன்மோகன்சிங் அழைத்தார். பாகிஸ்தான் இவ்வழைப்பை ஏற்றுக்கொண்டது.பிரதமர் மன்மோகன்சிங்கின் இந்நடவடிக்கையை பாகிஸ்தான் பத்திரிகைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக பிரசுரித்துள்ளன.எல்லா பாக்.பத்திரிகைகளிலும் முதல் பக்க செய்தியாக இது இடம்பெற்றுள்ளது.
நியூஸ் டெய்லி பத்திரிகை ‘அமன் க சக்கா’(சமாதானத்தின் சிக்ஸர்) என்ற தலைப்புடன் முக்கியத்துவமான செய்தியாக முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. டான் பத்திரிகையும் முதல் பக்கத்தில் செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் தூதரக உறவின் வாசலை திறந்துள்ளதாக எக்ஸ்ப்ரஸ் ட்ரிப்யூனல் செய்தி வெளியிட்டுள்ளது.
2008-ஆம் ஆண்டில் மும்பை தாக்குதலைத் தொடர்ந்து ஸ்தம்பித்துபோன இரு நாடுகளுக்கிடையேயான அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு புத்துயிர் அளிக்கும் நடவடிக்கையாக மன்மோகனின் அழைப்பை பெரும்பாலான பத்திரிகைகளும் சிறப்பித்துள்ளன.
கிரிக்கெட் மூலமாக சமர்த்தான ராஜதந்திர நடவடிக்கை என எக்ஸ்பிரஸ் ட்ர்ப்யூன் பத்திரிகை கூறுகிறது. மொகாலி கிரிக்கெட் போட்டி துவங்குவதற்கு இரு தினங்களுக்கு முன்பு இந்தியா-பாகிஸ்தான் உள்துறை, பாதுகாப்பு செயலாளர்களின் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
பிப்ரவரி மாதம் திம்புவில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவும்,பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் ஸல்மான் பாஷிரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடந்த வாரம் இரு செயலாளர்களும் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு திங்கள் கிழமை டெல்லியில் நடைபெறும் உள்நாட்டு செயலாளர்களின் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை விவாதித்தனர்.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் ராஜதந்திரம் இது முதல் தடவையல்ல. முன்னாள் பாகிஸ்தான் அதிபர்களாக பதவி வகித்த ஜியா உல் ஹக்கும், ஃபர்வேஷ் முஷாரஃபும் இரு நாடுகளுக்கிடையேயான தூதரக உறவை மேம்படுத்த கிரிக்கெட்டை பயன்படுத்தியிருந்தனர்.
ஜியா உல் ஹக் 1987-ஆம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை காண்பதற்காக இந்தியாவிற்கு வருகைத் தந்தார். முஷாரஃப் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை காண்பதற்காக 2005-ஆம் ஆண்டு டெல்லிக்கு வருகைத் தந்தார்.
அதேவேளையில்,மன்மோகன் சிங்கும், கிலானியும், சர்தாரியும் கிரிக்கெட் போட்டியை காண வருவதையொட்டி சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள கிரிக்கெட் போட்டியின் ஒளிபரப்பின் விளம்பரக் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
பத்து வினாடிகளைக் கொண்ட விளம்பரத்திற்கு 17 முதல் 18 லட்சம் வசூலிக்க இ.எஸ்.பி.என், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் தீர்மானித்துள்ளன. முன்னர் இது மூன்றரை முதல் நான்கு லட்சம் வரையிலான கட்டணமாகும். இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை 10 கோடி பேர் காணவிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக