துப்பாக்கியில் இருந்து கிளம்பும் தோட்டாவைவிடத் துறுதுறுப்பாக இருக்கிறார் வெள்ளத்துரை டி.எஸ்.பி!என்கவுன்டர் வெள்ளத்துரை என்பது இவர் சுட்டு வாங்கிய பட்டம். திருச்சியில் தொடங்கி திருப்பாச்சேத்தி வரை கடந்த 13 வருடங்களில் 12 உயிர்களைப் பறித்திருக்கிறது வெள்ளத்துரையின் துப்பாக்கி.சமீபத்தில்
எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரபு மற்றும் பாரதி ஆகியோரைஎன்கவுன்டரில் வெள்ளத்துரை சுட்டுக் கொன்றது மனித உரிமை ஆர்வலர்கள் இடையே கொந்தளிப்புகளை ஏற்படுத்த, அது பற்றிய எந்தச் சலனமும் இல்லாமல் அடுத்த புரொமோஷனுக்காகக் காத்திருக்கும் உற்சாகத்துடன் என்னை எதிர்கொண்டார்.
எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரபு மற்றும் பாரதி ஆகியோரைஎன்கவுன்டரில் வெள்ளத்துரை சுட்டுக் கொன்றது மனித உரிமை ஆர்வலர்கள் இடையே கொந்தளிப்புகளை ஏற்படுத்த, அது பற்றிய எந்தச் சலனமும் இல்லாமல் அடுத்த புரொமோஷனுக்காகக் காத்திருக்கும் உற்சாகத்துடன் என்னை எதிர்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டைச் சேர்ந்த இவர், எம்.ஏ, ஹிஸ்ட்ரி, எம்.ஏ. போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன், எம்.எட். என பி.ஹெச்டி வரை முடித்தவர்.
““இவ்வளவு படிச்சுட்டு, எதுக்காக போலீஸ் வேலைக்கு வந்தீங்க?”“
““வேலை வெட்டி இல்லாம இருந்தேன்... வந்துட்டேன். படிப்பு முடிச்சிட்டு, ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ குமரகுருபரர் சுவாமிகள் கலைக் கல்லூரியில் லெக்சரரா சேர்ந்தேன். மூணு வருஷத்துக்கு மேல தாக்குப்பிடிக்க முடியலை. அப்புறம் வேலைவெட்டி இல்லாம, வயல் வேலை பார்த்துட்டு இருந்தேன். அப்பத்தான் 1994-ல எஸ்.ஐ. செலெக்ஷனுக்குப் போனேன். 97-ல் அப்பாயின்ட்மென்ட் கிடைச்சது. பெரிய லட்சியம் எல்லாம் வெச்சுக்கிட்டு காக்கி உடுப்பை மாட்டலை. மாசாமாசம் சம்பளம் குடுப்பாங்க. கஷ்டப்படாமக் கஞ்சி குடிக்கலாம். இதுதான் அப்ப எனக்கு இருந்த ஒரே எதிர்பார்ப்பு. பயிற்சி முடிஞ்சு புதுக்கோட்டை கீரனூர்ல போஸ்டிங் போட்டாங்க. 99-ல திருச்சி பாலக்கரைக்கு புரொபேஷன் எஸ்.ஐ-யா வந்தேன். அப்பவே துப்பாக்கி தூக்கிட்டேன்!”“
““உங்க முதல் என்கவுன்டர் அனுபவம்?”“
““பாலக்கரை போஸ்டிங் எடுத்துக்கிட்ட மூணாவது மாசமே, அந்த அசைன்மென்ட் கிடைக்கும்னு எதிர்பார்க்கலை. திருச்சி லால்குடி கோர்ட்ல மாஜிஸ்திரேட் முன்னாடியே கூண்டுல நின்னுட்டு இருந்தவங்களைக் கழுத்தை அறுத்துக் கொன்னான் ரவுடியான கோசிஜன். அவன்தான் என் துப்பாக்கிக்கு முதல் வேட்டை. போலீஸைத் தாக்க வந்தப்போ குட்ஷெட் ரோட்ல வெச்சுப் போட வேண்டியதாப்போச்சு. அதுக்கு எல்லாரும் என்னைப் பாராட்டினப்போ, எனக்குள் எந்தச் சலனமும் இல்லை. இதோ இப்போ ரெண்டு பேரைச் சுட்டு வீழ்த்தினப்பவும் அப்படித்தான் இருந்தேன். அயோத்திக்குப்பம் வீரமணியைச் சுட்டுத் தள்ளினப்ப, எனக்கு பி.பி. பரிசோதித்த டாக்டர் நார்மல்னுதான் சொன்னாரு. நான் என்னோட காட்ஃபாதர்னு நினைக்கிறது திரிபாதி சாரைத்தான். அதேபோல, போலீஸ் ஆபீஸர்னா வால்டர் தேவாரம் மாதிரி இருக்கணும்னு நினைப்பேன். என் ஒவ்வொரு என்கவுன்டருக்கும் அவர்கிட்ட இருந்து பாராட் டுக் கடிதம் வரும். இப்பவும் எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன்!”“
துடிக்கிறது அவரது செல்போன். எடுத்துப் பேசியவர், ““ஆத்தா சொல்லுத்தா... டாடி நல்லா இருக்கேன் தாயி. சாப்பாடு சாப்பிடலம்மா, பிஸ்கட்டும் பழமும் சாப்பிட்டேன். இன்னும் என்கொயரி முடியல. சரி தாயி, பெப்டிக் அல்சர் வந்துடாமப் பாத்துக்கிறேன் தாயி”“ என்று முகம் மலரப் பேசி விட்டு நிமிர்ந்து பார்க்கிறார்.
““போன்ல உங்க மகளா?”“
““ஆமா... எனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. பொண்ணு மெடிக்கல் காலேஜ்ல மூணாவது வருஷம். பையன், டென்த் படிக்கிறான். என் பொண்ணு எனக்கு ரொம்ப செல்லம். இருந்தாலும், ரவுடிகளை சுட்டுத்தள்ளுறதுல அவளுக்கு இஷ்டமே கிடையாது. “ஒரு உயிரைக் காப்பாத்துறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? ஆனா, நீங்க சர்வசாதாரணமாக் சுட்டுக் கொன்னுட்டு வந்து நிக்கிறீங்களே டாடி. நான் மனுஷங்க உயிரைக் காப்பாத் தப் பயிற்சி எடுக்கிறேன். டிபார்ட்மென்ட்ல மத்தவங்க உயிரை எடுக்குறதுக்குன்னே உங்களை வெச்சிருக்காங்களே”னு அடிக்கடி என்கூட சண்டை போடுவா!”“
““அரசாங்கத்தின் பெயரால், அதிகாரத்தின் பெயரால் இப்படி உயிர்களைக் கொல்வது பாவம்இல்லையா? உங்கள் மனசாட்சி உறுத்தாதா? துப்பாக்கி தூக்கும்போது அதையெல்லாம்நினைத்துப் பார்க்க மாட்டீர்களா?”“
““மக்களைப் பாதுகாக்கத்தானே அரசாங்கம் போலீஸை வெச்சிருக்கு. அந்த போலீஸையே கொலை செய்ற அளவுக்கு ரவுடிகளுக்குத் துணிச்சல் வந்துருச்சுன்னா, அது “வார்” இல்லையா? போருக்கு வந்த பிறகு பாவம், புண்ணியம் பார்த் துக்கிட்டு இருக்க முடியுமா? துடிப்பான இளைஞனா பணியில் சேர்ந்த ஆல்வின் சுதன் என்ன பாவம் செஞ்சான்? அவனுக்காக யாரும் ஏன் பரிதாபப்பட மாட்டேங்கிறீங்க? நேத்து என் கைல துப்பாக்கி இருந்த மாதிரி, அன்னைக்கு ஆல்வின் கைல துப்பாக்கி இருந்திருந்தா, அவன் செத்திருக்க மாட்டான்ல.
நான் விவசாயக் குடும்பத் தில் பிறந்தவன். நெல்லுக்குப் பக்கத்தில் களை வளரத்தான் செய்யும். சமயம் பார்த்து அதை நாசூக்காப் பிடுங்கி அழிக்கணும். இல்லைன்னா, நெல்லையே அழிச்சு வயலை யும் சீரழிச்சுடும். நாலாயிரம் பேர் நிம்மதியை, சந்தோஷத்தை நாலு பேரு கெடுக்குறாங்கன்னா, அந்த நாலு கிருமிகளை அழிக்கிறதுல தப்பே இல்லை. இதுக்காக நான் எப்பவும் வருத்தப்பட்டதே இல்லை. வருத்தப்படவும் மாட்டேன். என்கவுன் டர் ஆபரேஷன் முடிஞ்சதும் ஏதாவது ஒரு அம்மன் கோயி லுக்குப் போய் சாமி கும்பிடு வேன். இப்போ மதுரை மீனாட்சி அம்மனைப் பார்க்கப் போறேன்!”“
““நீங்க ஒரு ஏரியாவுக்கு போஸ்டிங் ஆன உடனே, அங்கே “என்கவுன்டர்” நடக்குது. அதுலஎன்ன மர்மம்?”“
““டிபார்ட்மென்ட்ல எல்லார் துப்பாக்கியும் வெடிக்கும் சார். ஆனா, பிரச்னைக்குரிய ஏரியாக்களுக்கு நான் போனால், சட்டம் - ஒழுங்கு கட்டுக்குள் இருக்கும்னு அதிகாரிகள் நினைக்கிறாங்க. சந்தர்ப்ப சூழல் சில நேரங்களில் அறிவிப்பு இல்லாம ஆர்ம்ஸ் தூக்கவெச்சிருது. அவ்வளவுதான்!”“
““ “என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை” இதை உங்கள் மனைவி ரசிக்கிறாரா?”“
““எப்படி ரசிப்பாங்க? என் மனைவி ராணி ரஞ்சிதம், அமெரிக்கன் கல்லூரியில் சாலமன் பாப்பையாவின் ஸ்டூடன்ட். எம்.ஏ. எம்.ஃபில். முடிச்சுட்டு, ஒரே ஒரு வருஷம் கெஸ்ட் லெக்சரரா வேலை பார்த்தாங்க. அப்புறம் இல்லத்தரசி ஆகிட்டாங்க. என்கவுன் டர் நடந்துட்டா, மத்தவங்க எனக்கு வாழ்த்துச் சொல் வாங்க. ராணி மட்டும், “இதுவும் ஒரு பொழப்பா? இதுக்கு வாத்தியாராவே இருந்திருக் கலாம்”னு திட்டுவாங்க. அவங்க ரொம்பப் பயந்த சுபாவம்!”“ - சிரித்தபடி மனைவியைப் பார்க்க, வெள்ளத்துரையை முறைத்தபடி பேசத் தொடங் கினார் ராணி ரஞ்சிதம்.
““வெளியில இருந்து பார்க்கிறவங்களுக்கு வேணும்னா, இவர் ஒரு ஹீரோவாத் தெரியலாம். ஆனா, குடும்பத்துல நாங்க படுறபாடு எங்களுக் குத்தான் தெரியும். காலையில தயிர் சாதத்தைக் கட்டிக்கிட்டுக் கிளம்பிட்டா, எங்கே போவார், எப்பத் திரும்ப வருவார்னு எதுவும் தெரியாது. திரும்ப அவர் முகம் பார்க்கிற வரை “திக்திக்”குன்னே இருக்கும். வீட்டுக்குச் சொந்தக்காரங்க யாராவது புதுசா வந்தாக்கூட, “இவங்க யாரா இருக்கும்? யாராச்சும் அனுப்பி வந்திருக்காங்களா?”னு சந்தேகப்பட வேண்டி இருக்கு. எதையும் வெளிப்படையா என்கிட்ட சொல்லவும் மாட்டாரு.
வீரமணி என்கவுன்டர் அன்னைக்கு, “பையைக் கொடு... சிக்கன் வாங்கிட்டு வர்றேன்”னு போனார். நானும் மசாலா அரைச்சு வெச்சுட்டு உட்காந்திருந்தேன். ராத்திரி முழுக்க ஆள் வரலை. காலையில பாத்தா, டி.வி-ல வீரமணி என்கவுன்டர்னு நியூஸ் ஓடுது. டிபார்ட்மென்ட்டுக்காக இவ்வளவு உழைக்கிறாரு. ஆனா, மகளுக்கு காலேஜ் ஃபீஸ் கட்ட, போன வருஷம் என் நகைகளை அடகுவெச்சேன். இதுவரை திருப்ப முடியலை. பிப்ரவரில மறுபடி ஃபீஸ் கட்டணும். அதுக்கு என்ன பண்றதுனு தெரியலை. இதைக் கூடத் தாங்கிக்கலாம். ஆனா, வெளியில போன மனுஷன், நல்லபடியாத் திரும்பி வரணு மேனு தினமும் பரிதவிச்சுக் கிடக்கிற நான்தான் தினம் தினம் ஒரு என்கவுன்டர் வேதனையை அனுபவிக்கிறேன்!”“ எனக் கண் கலங்கினார் ராணி ரஞ்சிதம்.
கிளம்பும் முன் வெள்ளத் துரையிடம் அந்தக் கேள்வி யைக் கேட்டேன்.
““அது எப்படிங்க பிரபு, பாரதி இருந்த இடத்துக்கு நீங்க வந்து சேர்ந்தீங்க... தப்பி ஓடின அவங்ககையில் உடனே வெடிகுண்டு கிடைச்சது... எதுவுமே நம்புற மாதிரி இல்லையே?”“
““போலீஸ் பிடியில் இருந்து அவங்க 12.50-க்குத் தப்பிக்கிறாங்க... 8.30 மணிக்குச் சம்பவம் நடக்குது. இடைப் பட்ட சுமார் 8 மணி நேரத்தில் அவங்க கையில் பெட்ரோல் குண்டு கிடைக்கிறதும் ஈஸி. அந்த நேரத்துக்குள்ள போலீஸ் அவங்களைக் கண்டுபிடிக்கிறது அதைவிட ஈஸி!”“ நன்றி:தேடிப்பார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக