ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தி.மு.க தலைவர் கருணாநிதி ஆகியோர் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள தனது வாழ்த்துச் செய்தியில்:இஸ்லாமியப் பெருமக்கள் இறை நினைவோடும், தியாகச் சிந்தனையோடும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில், எனது உள்ளம் கனிந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்வதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
இறைவனுக்காக எதையும் தியாகம் செய்யும் எண்ணத்தை மேலோங்கச் செய்யும் நன்நாளாகவும், ஏற்றத் தாழ்வுகளை அகற்றி அனைவரும் ஒன்று கூடி இறைவனின் புகழை நெஞ்சத்தில் நிலைக்கச் செய்து, விருந்தளித்து மகிழ்ச்சியில் திளைக்கும் திருநாளாகவும் கொண்டாடப்படுவதே பக்ரீத் திருநாளாகும்.
இறைவனின் விருப்பத்திற்கு ஏற்ப தன் ஒரே மகனான இஸ்மாயிலை பலியிடத் துணிந்த இறைத் தூதர் இப்ராகிம் அவர்களின் தன்னலமற்ற தியாகத்தினை உலகுக்கு உணர்த்தும் உன்னத நாள் இத்திருநாள் ஆகும்.
நபிகள் நாயகம் போதித்த அன்பு, அமைதி, மனிதநேயம் தழைத்தோங்க, அனைவரும் அன்னாரின் உன்னதமான வழியினைப் பின்பற்றி பாசமிக்க சகோதர, சகோதரிகளாய் மன வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் வாழ இந்தத் தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளில் உறுதியேற்போம்.
இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய திருநாளில் எல்லோரிடமும் இறை உணர்வும், தியாகச் சிந்தனையும், சகோதரத்துவமும் மலரட்டும், அது மனித குல நல்வாழ்விற்கு வழிகோலட்டும் என வாழ்த்தி, மீண்டும் ஒரு முறை எனது பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மேலும் தி.மு.க.தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள தனது வாழ்த்துச் செய்தியில்:
“கடமையைச் செய்வதாலேயே உண்மையான இன்பம் பிறக்கிறது” என்பதை உணர்த்தும் “ஈத்-உல்-அஸா” எனும் நோன்புத் திருநாளாம் பக்ரீத் பெருநாள் இஸ்லாமியச் சமுதாய மக்களால் மிகுந்த எழுச்சியோடு கொண்டாடப்படுகிறது.
அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் திருக்குர்ஆன் ஓதி மக்களுக்கு நன்மை பயக்கும் வாழ்வியல் நெறிகளைப் போதிக்கத் தொடங்கிய காலத்தில் அவர்மீது பகைகொண்டு, அப்போதனைகளைத் தடுக்க முனைந்தவர்கள் அவருக்கு அளவிடமுடியாக் கொடுமைகள் புரிந்தனர்; அவரைக் கல்லால் அடித்துச் சித்திரவதை செய்தனர். நபிகள் பெருமானாரின் வளர்ப்புத் தந்தையாகிய அபூதாலீப்பை அணுகி, “உங்கள் தம்பி மகனுக்குப் பொன்னைக் குவியல் குவியலாகக் கொட்டிக் கொடுத்துக் கோடீஸ்வரர் ஆக்குகிறோம்; உலகிலேயே சிறந்த பேரழகியைத்
திருமணம் செய்து வைக்கிறோம்; விருப்பப்பட்டால் அரபு நாட்டின் மன்னராகவே அவரைப் பிரகடனம் செய்கிறோம்; இவ்வளவிற்கும் ஈடாக, உங்கள் தம்பி மகன் செய்துவரும் போதனைகளை விட்டுவிட வேண்டும்; இல்லையேல், நாங்கள் அவரைப் பழிவாங்கியே தீருவோம்” என்றனர்.
நோய்வாய்ப்பட்டுக் கிடந்த அபூதாலீப் நபிகள் பெருமானாரை அழைத்துப் பகைவர்கள் கூறியதைத் தெரிவித்தபோது, “என் வலது கரத்திலே சூரியனையும், இடது கரத்திலே சந்திரனையும் அவர்கள் கொண்டுவந்து தருவதானாலும் என்னுடைய சத்தியப் பிரச்சாரத்தை ஒருக்காலமும் நிறுத்த மாட்டேன். இந்தச் சத்தியப் பிரச்சாரத்தில் நான் வெற்றி பெறுவேன். இல்லையானால் அதிலேயே மகிழ்ச்சியோடு மாண்டு போவேன்” என்று நபிகளார் உறுதிபடத் தெரிவித்தார். அன்று நபிகள் நாயகம் கொண்ட மன உறுதி பகைவரின் ஆணவத்தை அழித்து, அவரை மதித்துப் போற்றி வணங்கிட வழிவகுத்தது. அத்தகைய அண்ணலார் நபிகள் நாயகத்தின் போதனைகளைப் பின்பற்றி, நாள்தோறும் கடமைகளாற்றி வாழும் எனதருமை இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவர் வாழ்விலும் நன்மைகள் எல்லாம் செழித்திட என் உளமார்ந்த பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக