எகிப்து வந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் மீது தக்காளி பழங்கள் வீசி ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. எகிப்தில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த ஹோஸ்னி முபாரக் பதவியில் இருந்து விரட்டப்பட்டார். சமீபத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தது. அதன்பின்,அதிபராக முகமது முர்சி பதவியேற்றார்.
இந்நிலையில், எகிப்து அரசியல் நிலவரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் நேற்று முதல் முறையாக வந்தார்.
துறைமுக நகரமான அலெக்சாண்டிரியாவில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஹிலாரியை பாதுகாப்பாக அதிகாரிகள் அழைத்து சென்றனர். அப்போது, அமெரிக்காவை கண்டித்து சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளின்டன் சென்ற வாகனத்துடன் பாதுகாப்பு படை வீரர்களின் வாகனங்களும் சென்றன. அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் திடீரென தக்காளி, ஷூ, வாட்டர் பாட்டில்களை வீசி கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், திட்டமிட்டபடி அலெக்சாண்டிரியாவில் ஜனநாயக உரிமைகள் குறித்து ஹிலாரி உரை நிகழ்த்தினார்.
பின்னர் எகிப்தின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினார். எகிப்தில் முபாரக் ஆட்சிக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், ஹிலாரி சென்ற கார் மீது தக்காளி, ஷூ, வாட்டர் பாட்டில் எதுவும் படவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக