தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.7.12

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை விமான நிலையத்தில் சோதனை ஓட்டம்


சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. வசதிகள் சிறப்பாக இருப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள பன்னாட்டு முனையம் மற்றும் உள்நாட்டு முனையங்கள் சர்வதேச அளவில் அதிநவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. உள்நாட்டு முனையத்தில் பணிகள் நிறைவு செய்யப்பட்டு

'ஏரோ பிரிட்ஜ்'கள் அமைக்கப்பட்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதிக்குள் திறக்கப்படுகிறது.

பன்னாட்டு முனையத்தில் கட்டுமான பணிகள் நிறைவடைந்து விட்டன. இதனால் இந்த முனையத்தில் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. கொழும்பில் இருந்து மாலை 3.10 மணிக்கு 259 பயணிகளுடன் விமானம் சென்னை வந்தது.

இதில் வந்த பயணிகள் குடியுரிமை, சுங்க சோதனைகளை விரைவாக முடித்துக் கொண்டு வெளியே வந்தனர். இவர்களுக்கு விமான நிலைய இயக்குனர் சுரேஷ் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது விமானத்தில் வந்த பயணிகள் கூறியதாவது:-

கொழும்பில் இருந்து சென்னை வந்து சேர்ந்துவிட்டதாக விமானி அறிவித்தார். விமானம் நின்றபின் விமானத்தில் இருந்து இறங்கி விமானம் நிலையம் வந்தபோது அதிசயமாக இருந்தது. உண்மையில் சென்னை விமான நிலையத்தில் தான் உள்ளோமா? இல்லை சிங்கப்பூர், துபாய் போன்ற வெளிநாடுகளில் உள்ள விமான நிலையத்திற்கு வந்து விட்டோமா? என்று நினைத்தோம்.

சர்வதேச தரத்திற்கு அதிநவீன வசதிகளுடன் விமான நிலையம் உள்ளது. அதிகமான கவுன்ட்டர்கள் உள்ளன. இதனால் குடியுரிமை மற்றும் சுங்க சோதனைகள் விரைவாக முடிந்து வெளியே வந்தோம். சோதனை ஓட்டம் என கூறினார். பணிகள் முழுமையாக முடிந்து பயன்பாட்டிற்கு வந்தால் சிறப்பாக இருக்கும்.

இதுபற்றி விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, "பன்னாட்டு முனையத்தில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக இருந்தது. இன்னும் சில தினங்கள் பல சோதனை ஓட்டங்கள் நடத்தப்படும். அதன்பின்னர் பன்னாட்டு முனையம் ஆகஸ்டு மாத இறுதிக்குள் செயல்படுத்தப்படும்'' என்றனர்.

0 கருத்துகள்: