புனே:பெங்களூர், புனே குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர் முஹம்மது கத்தீல் சித்தீக் சிறையில் கழுத்து நெரித்துக் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.புனேயில் உள்ள உயர்பாதுகாப்பு மிக்க ஏரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கத்தீலை சக சிறைக் கைதிகள் கழுத்தை நெரித்துக் கொலைச் செய்ததாக
போலீஸ் கூறுகிறது.
சம்பவத்தைக் குறித்து சி.ஐ.டி விசாரணைக்கு மஹராஷ்ட்ரா அரசு உத்தரவிட்டுள்ளது.
சிறை சூப்பிரண்ட் எஸ்.பி.கதாப்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
2011 செப்டம்பர் 22-ஆம் தேதி டெல்லி போலீசின் ஸ்பெஷல் பிரிவு இந்திய முஜாஹிதீன் உறுப்பினர் என குற்றம் சாட்டி கத்தீலை கைது செய்தது. தொடர்ந்து புனே பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கும், பெங்களூர் சின்னச்சுவாமி ஸ்டேடிய வழக்கும் இவர் மீது சுமத்தப்பட்டது.
புனேயில் ஸ்ரீமந்த் பக்துஷேத் எல்வாயி விநாயகர் கோயிலுக்கு வெளியே குண்டுவைக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது சுமத்தப்பட்டது.
கொலைக்கான காரணத்தை விசாரித்து வருவதாக போலீஸ் கூறுகிறது. புனே ஏரவாடா சிறையில் அதீத பாதுகாப்பு மிகுந்த சிறையில் வைத்துதான் கத்தீல் கழுத்தை நெரித்துக் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வளவு பாதுகாப்பு மிகுந்த சிறை அறையில் எவ்வாறு இதர கைதிகள் வந்து கத்தீலை கழுத்தை நெரித்துக் கொலைச் செய்தனர்? என்பது குறித்து பலத்த சந்தேகம் நிலவுகிறது.
இந்தியன் முஜாஹிதீன் உறுப்பினர் என்று கத்தீலை போலீஸ் குற்றம் சாட்டிய பொழுதும் அவருக்கு எதிரான எவ்வித ஆதாரத்தையும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இச்சூழலில் போலீஸார்தாம் இக்கொலையின் பின்னணியில் செயல்பட்டிருக்கலாம் என மனித உரிமை ஆர்வலர்கள் சந்தேகத்தை எழுப்புகின்றனர்.
பீகாரில் தற்பொழுது இந்திய பாதுகாப்பு அதிகாரிகளின் முஸ்லிம் வேட்டை கிராமமாக மாறியுள்ள தர்பாங்கா மாவட்டத்தில் பரஹ் ஸமேலா கிராமத்தைச் சார்ந்தவர்தாம் கத்தீல். இச்சம்பவத்தைக் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்களான மனீஷா சேத்தி, ஷப்னம் ஹாஷ்மி, காலின் கான்ஸால்வ்ஸ், மஹ்தாப் ஆலம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
கத்தீலின் மனைவிக்கு இழப்பீடு வழங்கவும், அவருடைய உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் செலவை அரசு ஏற்றுக்கொள்ளவும் இவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக