எகிப்தில் நடந்த மக்கள் போராட்டத்தில் பொதுமக்களை படுகொலை செய்த வழக்கில், எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.ஆனால் ஊழல் வழக்கில் முபாரக் மற்றும் அவரது மகன்கள் விடுவிக்கப்பட்டதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.எகிப்தில் 30 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி
நடத்தியவர் ஜனாதிபதி முபாரக்(வயது 84).கடந்தாண்டு ஜனவரியில் ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர்.
அவர்கள் மீது இராணுவ தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர்ந்து 18 நாட்கள் நடந்த போராட்டத்தில் 800க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
அதன்பின் முபாரக் விரட்டி அடிக்கப்பட்டார். உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் இராணுவ கவுன்சில் ஆட்சி அமைந்தது.
இந்நிலையில் கடந்த 10 மாதங்களாக மக்களை கொன்று குவித்தது, நாட்டின் செல்வத்தை சுருட்டியது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் முபாரக் மீது வழக்கு நடந்தது.
அரசு பணத்தை சுருட்டியது தொடர்பாக முபாரக்கின் மகன்கள் அலா, கமால் மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபிப் அட்லே மீது விசாரணை நடந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் கெய்ரோ நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
நீதிபதி அகமது ரபாத் தீர்ப்பை வெளியிட்டார். இதில் மக்களை கொன்று குவித்த வழக்கில் முபாரக், ஹபிப் அல்அட்லேவுக்குகுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் ஊழல் வழக்குகளில் இருந்து முபாரக்கும் அவரது மகன்களும் விடுவிக்கப்பட்டனர். அப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த முபாரக்கும் அவரது மகன்களும் எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை.
இதற்கிடையில் மரண தண்டனையை எதிர்பார்த்திருந்த வக்கீல்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நீதிமன்றத்தில் முபாரக் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் மோதல் வெடித்தது.
பொலிசார் கண்ணீர் புகைகுண்டு வீசி கும்பலை கலைத்தனர். மேலும் தீர்ப்பு வெளியான பிறகு நூற்றுக்கணக்கான மக்கள் கெய்ரோவில் உள்ள தாஹிர் சதுக்கத்தில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் எகிப்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக