தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.6.12

முதன் முறையாக சீனத் துறைமுகத்தில் இந்திய போர்க் கப்பல்கள்


இந்திய போர்க்கப்பல்கள் சுமார் 6 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சீன துறைமுகத்தில் நிறுத்தப்படுகின்றன.ஷாங்காய் துறைமுகத்தில் இந்திய போர்க்கப்பல்கள் ஐஎன்எஸ் சக்தி, ஷிவாலிக், கார்முக், ராணா உள்ளிட்ட 4 கப்பல்கள் இன்று நிறுத்தப்படுகின்றன.இந்தக் கப்பலில் ராஜ்புத் ரக ஏவுகணை உள்ளிட்ட பல ஆயுதங்கள் உள்ளன. மொத்தம் 1,400 கடற்படை வீரர்களுடன் ஷாங்காய் துறைமுகத்தில் இக்கப்பல் நுழைகிறது.இந்தக் கப்பலுக்கு வைஸ் அட்மிரல் அனில்
சோப்ரா தலைமைதாங்குகிறார். சீனாவின் கடற்படை அதிகாரிகளுடன் அவர் பேச்சு நடத்துவார். 6 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்தியக் கப்பல் சீன துறைமுகம் செல்வது இதுவே முதல் முறையாகும்.
இருதரப்பிலும் நிலவிவந்த கருத்து வேறுபாடுகளைப் போக்க கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் இறுதியில் இத்தகைய சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது.
இரு நாடுகளின் கடற்படையும் சேர்ந்து கூட்டாக பயிற்சி மேற்கொள்வது நட்பு ரீதியிலான ஒத்துழைப்பைப் பறைசாற்றும் வகையில் அமையும் என்று சீனாவுக்கான இந்தியத் தூதர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.
ஷாங்காய் துறைமுகத்தில் இருக்கும்போது சீன பள்ளிக் குழந்தைகள் இந்திய போர்க்கப்பலைப் பார்வையிடுவர். இது தவிர பல்வேறு கலை, கலாசார நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 7ஆம் திகதி இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்தித்துப் பேசிய சீன வெளிவிவகாரத்துறை அமைச்சர் யாங் ஜெயிசி, சீனாவுக்கு வரும் இந்திய போர்க்கப்பலுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
சமீபத்தில் இந்தியாவின் கொச்சி துறைமுகத்துக்கு வந்த சீன கப்பலுக்கும் இதேபோல பிரமாண்டமான உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: