தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.5.12

ஈரானுடன் உறவு இந்தியாவுக்கு முக்கியமானது – எஸ்.எம்.கிருஷ்ணா!


புதுடெல்லி:ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை மீண்டும் குறைப்பதற்கான அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பதில் அளித்துள்ளார்.வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பும், ஸ்திரத்தன்மையும் இந்தியாவின் பொருளாதார கட்டமைப்பை பொறுத்தவரை மிகவும் முக்கியமானது என்றும் எரிசக்தியை விட
இதர காரணிகளையும் இந்தியாவுக்கு பரிசீலிக்க வேண்டியுள்ளது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஸ்டேட் செகரட்டரி ஹிலாரி கிளிண்டனுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றினர். அப்பொழுது கிருஷ்ணா இதனை தெரிவித்தார்.
ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை மீண்டும் குறைக்கவேண்டும் என்று ஹிலாரி பேச்சுவார்த்தையின் போது வலியுறுத்தினார். ஆனால், 60 லட்சம் இந்தியர்கள் பணியாற்றும் மேற்காசியா பிராந்தியத்தில் அதிலும் குறிப்பாக வளைகுடா பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் இந்தியாவுக்கு முக்கியமானது என்று கிருஷ்ணா தெரிவித்தார்.
இந்தியாவின் எரிசக்தி தேவைகளைப் பொறுத்தவரை ஈரான் முக்கிய கூட்டாளி என்றும், இதற்கும் மேலாக பாதுகாப்பிற்கும், ஸ்திரத்தன்மைக்கும் இந்தியா முன்னுரிமை வழங்கும் என்றும் அவர் கூறினார்.
மேற்காசிய பிராந்தியத்திற்கு இந்தியாவில் இருந்து நூறு பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதி நடைபெறுகிறது. இப்பிராந்தியத்தில் இருந்துதான் இந்தியாவின் 60 சதவீத எண்ணெய் இறக்குமதியும் நடைபெறுகிறது. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள ஈரானுக்கு அவர்களுக்கான உரிமைகள் உண்டு. ஆனால், ஒப்பந்த நிபந்தனைகளின் படி அணு ஆயுதம் இல்லாத நாடாக மாற்ற ஈரானுக்கு கடமை உள்ளது என்று எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுப்பதே இந்தியா மற்றும் அமெரிக்காவின் நோக்கம் என ஹிலாரி கூறினார். இவ்விவகாரத்தில் சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். பேச்சுவார்த்தையின் போது ஈரானுக்கு நிர்பந்தம் அளிக்கவேண்டும் என்று ஹிலாரி தெரிவித்தார்.
தீவிரவாத செயல்களுக்கு பாகிஸ்தான் மண்ணை உபயோகப்படுத்துவதில்லை என்பதை உறுதிப்படுத்த பாகிஸ்தான் நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும் என்று இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.

0 கருத்துகள்: