நம்மால்இன்றுநினைத்த நேரத்தில்உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒருவருடனும் கைதொலைபேசியின் வாயிலாக பேசிவிட முடிகிறது என்றால் அது செயற்கைக்கோள்களின் செயல்பாடுகள் இல்லாமல் சாத்தியமில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே, அந்தசெயற்கைகோளை சுமந்து சென்று விண்வெளியில் (Outer Space)நிலைநிறுத்துவதில் ராக்கெட்டுகளின் (Rocket) பங்கு அளவிடற்கரியது.அந்த வகையில் விண்வெளி ஆய்வில் மனித சமுதாயம்
புதிய சகாப்தத்தை அடைய ராக்கெட் தொழில்நுட்ப (Rocket Technology) கண்டுபிடிப்புதான் அடிப்படை காரணமாக இருந்ததுஎன்றால் மிகையில்லை.
விண்வெளி புரட்சிக்கு வித்திட்ட ராக்கெட் (Rocket) தொழில்நுட்பம் ஒரு சில ஆண்டுகளின்ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டதில்லை, கிட்டத்தட்ட ஆயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தொடர்ச்சியான ஆய்வுகளின் முடிவில் கி.பி.1942 (1942 AD) ஆம் ஆண்டு தான் ராக்கெட் தனது மேம்பட்ட முதல் வடிவத்தை எட்டியது. ஒவ்வொருவினைக்கும் அதற்க்கு சமமான எதிர் வினை உண்டு என்ற நியூட்டனின் இயக்கவியல் விதியை (Newton’s Law of Motion) அடிப்படையாக கொண்டுதான் ராக்கெட்டுகள் இயங்குகின்றன. நியூட்டனின் இந்த இயக்கவியல் விதிகள் வகுக்கப்பட்டதோ கி.பி.பதினேழாம் நூற்றாண்டில் தான் (Philosophiae Naturalis Principia Mathematica, first edition of Motion Law published in 1687) ஆனால் விண்வெளி பயணம் பற்றிய சிந்தனையும் ராக்கெட் உருவாக்கம் பற்றிய ஆய்வும் கி.மு நான்காம் நூற்றாண்டிலிருந்தே (400 BC) துவங்கிவிட்டது என்றால் ஆச்சிரியமாக இல்லை வாருங்கள் அது பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.
ராக்கெட் எப்படி இயங்குகின்றது என்பதற்கு ரத்தின சுருக்கமாக விளக்கம் சொல்வதானால் நாம் கழிவறையில் தண்ணீரை பீச்சியடிக்க பயன்படுத்தும் ஷோயரை (Toilet Shower)உதாரணமாக கூறலாம். ஷோயரில் நுண்துளை (Nozzle) வாயிலாக தண்ணீர் பீச்சியடிக்கப்படும் போது தண்ணீர் வெளியேறும் வேகத்திற்கு இணையான விசை ஒன்று மேல்நோக்கி செயல்பட்டு ஷோயரை மேல் நோக்கி தள்ளும், அதைப்போல ராக்கெட்டில் நுண்துளை (Nozzle) வாயிலாக அதிக அழுத்தத்தில் பீச்சியடிக்கப்படும் எரிபொருள் எரிந்து உருவாகும் அதற்க்கு இணையான எதிர்விசை மேல்நோக்கி செயல்பட்டு ராக்கெட்டை மேல்நோக்கி உந்தித்தள்ளுகிறது.
வரலாறு அறிந்த முதல் ராக்கெட் பற்றிய ஆய்வுப் பயணம் கி.மு நான்காம் நூற்றாண்டிலிருந்து (400 BC) துவங்குகிறது. கிரேக்கத்தை சேர்ந்த (Ancient Greece) பல்துறை வல்லுனரான ஆர்ஸிடஸ் (Archytas, 428 BC – 347 BC, born in Italy) என்பவர் கி.மு.375 ஆம் ஆண்டு உந்துவிசையால் இயங்கும் மரத்தால் ஆன “தி பிஜியன் (The Pigeon) என்று அழைக்கப்பட்ட பறவை ஒன்றை வடிவமைத்தார். நீராவியின் உந்து விசையைகொண்டு இயங்கிய அவரது மரத்தால் ஆன பறவை கிட்டத்தட்ட 200 மீட்டர் தூரம் வரை பறந்து அன்றைய மக்களை ஆச்சிரியத்தில் உறையச் செய்ததாக வரலாறு தெரிவிக்கிறது. இவரது இந்த கண்டுபிடிப்புதான் பல புதிய சகாப்தங்களுக்கு திறவுகோலாக அமைந்தது என்றால் மிகையில்லை.
ஆர்ஸிடஸின் கண்டுபிடிப்பை அடிப்படையாகக்கொண்டு எகிப்த்தை சேர்ந்த பொறியாளரான (Engineer) ஹெரோன் (எ) ஹீரோ ஆப் அலெக்ஸாண்ட்ரியா (Heron (e) Hero of Alexandria, 10 AD – 70 AD) என்பவர் ஏயோலிபிலி (Aeolipile) என்ற சாதனத்தை கி.பி.ஒன்றாம் நூறாண்டில் (100 AD)வடிமைத்தார். உலகின் முதல் நீராவி என்ஜின் என்று ஆதாரப்பூர்வமாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏயோலிபிலி கிட்டத்தட்ட மூடப்பட்ட பாத்திரம் போன்ற அமைப்பைக் கொண்டதாக இருந்தது. பாத்திரத்தின் மேற்புறம் செங்குத்தாக இணைக்கப்பட்டிருந்த இரண்டு குழாய்களை அச்சாக கொண்டு சுழலும் வகையில் உருளை ஒன்று இணைக்கப்பட்டிருந்தது. உருளையின் எதிர் எதிர் துருவங்களில் குறுகிய துளைகளையுடைய இரண்டு ‘எல் (L)’ வடிவ நாசில்கள் (Nozzle) இணைக்கப்பட்டிருந்தன.
பாத்திரத்திற்குள் நீரை ஊற்றி கொதிக்க வைக்கும் போது நீர் ஆவியாகி வெளியேற வாய்ப்பின்றி அழுத்தப்பட்டு குழாய்களின் வழியாக உருளையை அடைந்து பின் மிகக்குறுகிய நாசில்கள் வழியாக அதிக வேகத்துடன் வெளியேறியது. வெளியேறிய வேகத்திற்கு இணையான எதிர் விசை உருளையின் மீது செயல்பட்டு உருளையை சுழற்றச் செய்தது. எதிர் எதிர் துருவங்களில் நாசில்கள் இணைக்கப்பட்டிருந்ததன் காரணமாக உருளை மிக வேகமாக சுழல ஆரம்பித்தது. விளையாட்டு பொருள் போல இருந்த இந்த ஏயோலிபிலிதான் பிற்காலத்தில் நீராவி என்ஜின்கள் வடிவமைப்பதற்கு மூலகாரணமாகவும், ராக்கெட்டுகள் வடிவமைத்திட முன்னோடி சிந்தனையாகவும் இருந்தது.
இதே காலகட்டத்தில் (100 AD) சீனாவில் மதவிழாக்களின் போது பட்டாசு வெடித்து விழாக்களை கொண்டாடும் வழக்கம் நடைமுறையில் இருந்ததாக வரலாறு தெரிவிக்கிறது. இந்த பட்டாசுகளை சீனர்கள் சால்ட்பெட்டர் (Saltpeter, such as potassium Nitrate),சல்பர் (Sulfur), கரித்தூள் (Charcoal Dust) ஆகியவற்றை பயன்படுத்தி தயாரித்திருந்தனர். தற்செயலாக ஒரு நாள் வெடிக்காத பட்டாசு ஒன்று புகையை கக்கிக்கொண்டு முன்னோக்கி பாய்ந்து செல்ல, இது தற்செயலாக விழாக்கொண்டாட்டத்திற்கு வருகை புரிந்திருந்த சீன வேதியல் வல்லுனர்களின் கண்களில் விழ அன்றிலிருந்து துவங்கிய ஆய்வுதான் வெடிபொருளை நிரப்பிக்கொண்டு பாய்ந்து சென்று இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் (Missile).
பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகு சால்ட்பெட்டர், கார்பன், சல்பர் ஆகியவற்றை கொண்டு வெடிமருந்தை தயாரித்த சீன வேதியல் வல்லுனர்கள், சிறிய மூங்கில் குழாய்களில் அடைத்து அவற்றை அம்புகளின் (Arrow) முனையில் இணைத்து வில்லில் (Bow) இருந்து ஏவி இலக்குகளை தாக்கினார்கள். தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்ட சீன வல்லுனர்கள் கிட்டத்தட்ட 800 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்பதாம் நூற்றாண்டில் (900 AD)வெடிமருந்தின் ஒரு பகுதி ஆக்ஸிஜனேற்றம் (Oxidation) செய்யப்பட்டிருந்தால் வெடிமருந்து வெடிக்காமல் எரிபொருளாக செயல்பட்டு எரிந்து வாயுக்களை புகையாக வெளியேற்றம் செய்யும் என்று கண்டுபிடித்தார்கள். அவ்வாறு வெளியேற்றப்படும் வாயுக்கள் குறுகிய துளைவாயிலாக வெளியேறும் படி செய்தால் அழுத்தம் காரணமாக வாயுக்கள் வெளியேறும் வேகத்திற்கு இணையான எதிர்விசை முன்னோக்கி செயல்பட்டு ராக்கெட்டை உந்தித்தள்ளும் என்றும் கண்டுபிடித்தார்கள் அவ்வாறு நிகழ்ந்தால் ராக்கெட் தானே இயங்கி இலக்கை தாக்கும் அப்போது ராக்கெட்டை ஏவுவதற்கு வில் (Bow) தேவைப்படாது என்று அறிந்துகொண்டார்கள்.
தொடர்ந்து பத்தாம் நூற்றாண்டின் (1000 AD) இறுதியில் ராக்கெட் தனது முதல் வடிவத்தை அடைந்தது. நீளமான குச்சி ஒன்றின் முனையில் வெடிபொருள் நிரப்பப்பட்ட மூங்கில் துண்டு ஒன்று குச்சியுடன் இணைத்துக்கட்டப்பட்டது. ராக்கெட் பற்றவைக்கப்பட்டதும் (Ignited) எரிபொருள் எரிந்து புகையை (வாயுக்களை) வெளியேற்றி, ராக்கெட் முன்னோக்கி சீறிப்பாய்ந்து இலக்கை தாக்கியது. பத்தாம் நூற்றாண்டிலேயே தயாரிக்கப்பட்டுவிட்டாலும் கூட மெய்யாக களத்தில் 1232 ஆம் ஆண்டு மங்கோலியர்களுக்கும் (Mongol Empire)சீனர்களுக்கும் காய் பெங் பு (Kai Feng Fu) என்ற இடத்தில் நடந்த போரில் தான் முதன் முதலாக ராக்கெட் பயன்படுத்தப்பட்டது. சீறி பாய்ந்து வந்து தாக்கி குறிப்பிடத்தக்க அழிவுகளை ஏற்படுத்திய சீன ராக்கெட்டுகளை சமாளிக்க முடியாமல் மங்கோலியப்படை பின்வாங்கி தோற்றது.
இதைத்தொடர்ந்து ராக்கெட்களின் மகத்துவம் பற்றி அறிந்துகொண்ட மங்கோலியர்கள், ஓஹீடீ கான் (Ogedei Khan, 1186 – 1241) ஆட்சிக்காலத்தில் ராக்கெட் தொழில்நுட்பம் தெரிந்த சில சீன வல்லுனர்களை பொன் மற்றும் பெண் ஆசை காட்டி தங்கள் நாட்டிற்கு கடத்தி வந்து தங்கள் ராணுவத்திற்கு தேவையான ராக்கெட்டுகளை தயாரிக்கும் பணியில் அவர்களை ஈடுபடுத்தினார்கள். ஐரோப்பிய யூனியன் மீது தனது ஆட்சி அதிகாரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று விரும்பிய ஓஹீடீகான் அதற்க்கு முன்னோட்டமாக ஹங்கேரி (Hungary) மீது 1241 ஆம் ஆண்டு போர் தொடுத்தார். மொஹி (Battle of Mohi, 1241)என்று அழைக்கப்பட்ட ஹங்கேரியின் சஜோ நதிக்கரையில் (Sajo River, Hungary) நடந்த அந்த யுத்தத்தில் மங்கோலியர்கள் ராக்கெட்டுகளை பயன்படுத்தி ஹங்கேரி படையினரை தவிடுபொடியாக்கினர், இதற்க்கு பிறகுதான் ராக்கெட் என்று ஒன்று இருக்கிறது என்பது பற்றி ஐரோப்பிய நாடுகளுக்கு (European Union) தெரியவந்தது.
மங்கோலியர்கள் வாயிலாக மெல்ல மெல்ல ராக்கெட் தயாரிக்கும் தொழில்நுட்பம் பற்றி14 ஆம் நூற்றாண்டு வாக்கில் கொரியர்களுக்கும் தெரியவந்தது. தொடர்ந்து 1448 ஆம் ஆண்டு சீசங் (Sejong the Great, 1397 – 1450) மன்னரது ஆட்சிக்காலத்தில் ஜோசன் வம்சத்தை(Joseon Dynasty) சேர்ந்த ராக்கெட் வல்லுனர்கள் ஹவாஜா (Hwacha or Singijeon) என்று அழைக்கப்பட்ட உலகின் முதல் மல்டி மிசைல் லாஞ்சர்களை (Multi Missile Launcher)வடிவமைத்திருந்தனர்.
பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் உலகின் அனைத்து நாடுகளிலும் தயாரிக்கப்பட்ட ராக்கெட் மரத்தினாலோ அல்லது மூங்கில் துண்டுகளை கொண்டோதான் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இந்நிலையில் 1780 ஆம் ஆண்டு இந்தியாவை ஆட்சி செய்துகொண்டிருந்த இங்கிலாந்து படைகளுக்கும் மைசூர் மன்னன் ஹைதர் அலிக்கும் (Hyder Ali, 1720 – 1782; The Ruler of Kingdom of Mysore) இடையே நடந்த குண்டூர் யுத்தத்தில் (Battle of Guntur) உலகிலேயே முதன் முறையாக ஆங்கிலேய படைகள் உலோகத்தினாலான (Iron cased) ஏவுகணைகளால் தாக்கப்பட்டது. மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்து தாக்கி பேரழிவுகளை எற்படுத்திய ராக்கெட்டுகளை கண்டு ஆச்சிரியத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்துபோன ஆங்கிலேயப்படைகள் தோற்று பின்வாங்கின.
மைசூர் மன்னன் ஹைதர் அலியின் மகனான மைசூர்புலி (Mysore Tiger) என்று அழைக்கப்பட்ட திப்பு சுல்தானால் (Tipu Sultan, 1750 – 1799) தயாரிக்கப்பட்டிருந்த உலகின் முதல் உலோக ராக்கெட் (Knows as Mysorean Rocket) கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டதாக இருந்தது. 20 சென்டி மீட்டர் நீளமும் 8சென்டி மீட்டர் விட்டமும் கொண்ட இரும்புக்குழல்களுக்குள் வெடிமருந்து நிரப்பப்பட்டு நான்கு அடி நீளம் கொண்ட மூங்கில் கம்புகளின் முனையில் கட்டப்பட்டு ஏவப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் (1800 AD) உலகிலேயே நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை திப்புவினுடையதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
திப்புவிடம் போரிட்டு வெல்ல முடியாது என்பதை தெரிந்துகொண்ட ஆங்கிலேயர்கள் திப்புவின் அண்டை அரசர்கலான திருவிதாங்கூர் சமஸ்தானம் (Kindom of Travancore),ஹைதராபாத் நிஜாம் (Nizam of Hydrabad), மராத்தியர்கள் (Maratha Empire) ஆகியோர்களை கூட்டு சேர்த்துக்கொண்டு லஞ்சம் என்ற சதிவலையை பின்னி திப்புவின் அமைச்சரான மிர் சாதிக்கை (Mir Sadiq) துரோகியாக மாற்றியது, இதன் பின்னரே திப்புவை ஆங்கிலேயர்களால் வெல்லமுடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சூரபத்மனை நினைவு கூறாமல் கந்தனின் வாழ்க்கை வரலாறை எப்படி நிறைவு செய்ய இயலாதோ அதுபோல ராக்கெட்டின் வரலாறு பற்றி குறிப்பிடும் போது திப்புவை பற்றி குறிப்பிடாமல் இருக்கமுடியாது. அந்த வகையில் வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் திப்பு. ஹைதராபாத் நிஜாம் அல்லது மராத்தியர் இருவரில் யாராவது ஒருவர் திப்புவுக்கு ஆதரவாக போரிட்டிருந்தால் அட அவ்வளவு வேண்டாம் வெள்ளையர்களுடன் சேர்ந்துகொண்டு திப்புவை தாக்காமல் இருந்திருந்தால் இந்தியாவில் வெள்ளையர்களின் சகாப்தம் அன்றே முடிவை எட்டியிருக்கும். வரலாற்றில் மகாத்மா காந்தி என்பவர் அறியப்படாமலேயே போயிருக்கக்கூடும்.
திப்பு மாவீரன் மட்டுமல்ல ஒரு மிகச்சிறந்த ராக்கெட் விஞ்ஞானியும் கூட. மேலும் பல சுவையான தகவல்களுடன் ‘ராக்கெட் உருவான வரலாறு’ – வின் இரண்டாம் பாகம் உங்களுக்காக காத்திருக்கிறது, தொடர்ந்து இணைந்திருங்கள், பதிவை பற்றிய உங்களது கருத்துக்களை மறக்காமல் பதிவுசெய்துவிட்டு செல்லுங்கள், உங்கள் கருத்துக்கள் என்னை மென்மேலும் வளர்த்துக்கொள்ள உதவும் நன்றி., வணக்கம்.!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக