நோர்வேயில் கடந்தாண்டு ஜூலை மாதம் 77 பேரை சுட்டுக் கொன்ற ஆண்டர்ஸ் ப்ரவீக் விசாரணையின் போது, தமது செயல்கள் குறித்து தாம் பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார்.இரண்டாம் உலக போருக்கு பின் ஐரோப்பாவில் மிக அட்டகாசமாகவும் அதிநவீனமாகவும் தாக்குதல் ஒன்றை நடத்தியது நான் தான் என்றும், என்னை விடுதலை செய்யுங்கள் அப்போதுதான் இதேபோன்ற ஒரு தாக்குதலை மீண்டும் என்னால்
நடத்திக்காட்ட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.குட்டித் தீவொன்றில் குழுமியிருந்த இளைஞர்களிடையே கண்மூடித்தனமான துப்பாக்கித் தாக்குதலையும் குண்டுவெடிப்பையும் தானே நடத்தியதாக அவர் ஒப்புக்கொண்டாலும், பயங்கரவாதச் செயலொன்றில் ஈடுபட்டதாகவும், பெருமளவானோரை திட்டமிட்டுக் கொன்று குவித்ததாகவும் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை அவர் ஏற்க மறுத்தார்.இதுகுறித்து ப்ரவீக் கூறுகையில், அந்த துப்பாக்கிசூடு, குண்டுவெடிப்பு எல்லாம் நல்லெண்ணத்தின் அடிப்படையிலான செயல்கள். அவை தீங்கான செயல்கள் அல்ல என்று அவர் கூறினார்.
குடியேற்றக்காரர்களின் வருகையிலிருந்தும், பன்முக கலாச்சாரம் என்ற போக்கிலிருந்தும் நோர்வேயைப் பாதுகாப்பதற்காகத் தான் தான் இதையெல்லாம் செய்தேன் என்று கூறி ப்ரவீக் தனது வாக்குமூலத்தை நிறைவுசெய்தார்.
ப்ரவீக் புத்தி சுவாதீனம் இல்லாமல் தான் இந்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டாரா அல்லது புத்தி சுவாதீனத்துடன் தான் இந்த காரியங்களைச் செய்தாரா என்று நீதிமன்றம் தீர்மானிக்க அவரது வாக்குமூலம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
வழக்கு நடக்கும் நீதிமன்றத்தில் உளவியல் நிபுணர்கள் அவரை உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். ப்ரவீக்கின் வாக்குமூலமோ பிற சாட்சிகளின் வாக்குமூலமோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக