தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.12.11

மத பிரார்த்தனை தொடர்பான விஷயங்களில் போலீசார் தலையிடக்கூடாது - உயர்நீதிமன்றம்!


மத பிரார்த்தனை தொடர்பான விஷயங்களில் காவல்துறையினர் தலையிடக்கூடாது" என வழக்கு ஒன்றில் மதுரை உயர் நீதிமன்ற கிளை காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை அருகே உள்ள கேசவன்புதூரைச் சேர்ந்தவர் பி.தாவீது. இவர் மதுரை உயர்நீதிமன்ற  கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில் கூறி இருந்ததாவது:"நான்,
கேசவன்புதூர் நெசவாளர்காலனியில் “பெத்தேல் பெந்தேகொஸ்தே“ ஜெபவீடு என்ற பெயரில் கடந்த 9 ஆண்டுகளாக சமூக தொண்டும், இறைபணியும் செய்து வருகிறேன். இங்கு பிரார்த்தனை நடக்கும் போது, அதிக சத்தம் எழுப்பும் எந்தவித ஒலிபெருக்கியையும் பயன்படுத்துவது இல்லை. இங்கு கடந்த  மே மாதம்  முதல் வருட விடுதலைப் பெருவிழா என்ற விழாவை நடத்திய போது, சிலர் பிரச்சினையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நாங்கள், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்குப் புகார் அனுப்பினோம். இதை அறிந்ததும், ஏற்கனவே பிரச்சினையில் ஈடுபட்ட நபர்கள், நாங்கள் பிரார்த்தனை கூட்டம் நடத்த அனுமதிக்கக்கூடாது என்று ஈத்தாமொழி காவல்துறையில் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து ஈத்தாமொழி காவல்துறை ஆய்வாளர் என்னை அழைத்து, பிரார்த்தனையை நிறுத்தி கொள்ளும்படி கூறினார்.

இந்திய நாடு மதச்சார்பற்ற ஜனநாயக நாடு. அரசியல் அமைப்பு சட்டப்படி அவரவர் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமை உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் பிரார்த்தனை நடத்தக்கூடாது என்று காவல்துறை ஆய்வாளர் நிர்ப்பந்தம் செய்வது சரியல்ல. எனவே மத பிரார்த்தனை விஷயத்தில் காவல்துறை ஆய்வாளர் தலையிடக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்." இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி வி.பெரியகருப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, "மத பிரார்த்தனை தொடர்பான விஷயங்களில் காவல்துறை ஆய்வாளர் தலையிடக்கூடாது" என்று உத்தரவிட்டார்.
நன்றி: இந்நேரம்

0 கருத்துகள்: