2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் காரணமாக ரூ. 1.76 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்குத் தணிக்கை துறை அறிவித்தது. இதையடுத்து இந்த ஊழலில் ஈடுபட்டதாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதி மன்றத்தில் நீதிபதி சைனி முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த விசாரணை தகவல்களை சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ. அவ்வப்போது தெரிவித்து வருகிறது.குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் ஓரளவு விசாரணை முடிந்து விட்டது. இதனால் இந்த வழக்கில் கைதானவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சி.பி.ஐ. புதிய நடவடிக்கையால் அது தள்ளிப் போனது.
இந்த நிலையில் சி.பி.ஐ. புதிய அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது. சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வக்கீல் லலித் இன்று ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் அவர், ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா உள்பட அனைவர் மீதும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 409 (நம்பிக்கை மோசடி) கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பதவியில் இருந்து கொண்டு ஆ.ராசா, சந்தோலியா, சித்தார்த் ஆகியோர் நம்பிக்கை மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது இந்த பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
மற்ற குற்றவாளிகளுக்கும் இது பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒவ்வொருவரும் எத்தகைய பிரிவின் கீழ் தொடர்புடையவர்கள் என்று வக்கீல் லலித் விளக்கமாக கூறினார்.
மேலும் 409-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டியது இந்த விசாரணைக்கு மிகவும் அவசியம் என்று விவாதித்தார். இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பில் வாதாடிய வக்கீல் சி.பி.ஐ.யின் புதிய வழக்குக்கு எதிர்ப்பு தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றத்தை பதிவு செய்யும் நடவடிக்கையை தாமதப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இந்த புதிய பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுவதாக கூறினார்.
சி.பி.ஐ. தொடர்ந்துள்ள புதிய பிரிவு வழக்கு காரணமாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை வரை வழங்க முடியும் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். இதற்கு முன்பு சி.பி.ஐ. பதிவு செய்துள்ள சட்டப்பிரிவுகளின்படி அதிகப்பட்சமாக 7 ஆண்டுகள் வரையே தண்டனை கொடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் இன்று சி.பி.ஐ. மேற்கொண்டுள்ள புதிய அதிரடி நடவடிக்கை காரணமாக ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிக பட்சமாக 10 ஆண்டுகள் வரை தண்டனை கொடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.
409-வது பிரிவின் கீழ் ஆ.ராசா, கனிமொழி, ராசாவின் உதவியாளர் சந்தோலியா, முன்னாள் தொலை தொடர்புதுறை செயலாளர் சித்தார்த் பெகுரா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வரை கொடுக்க முடியும் என்று பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஸ்பெக்ட்ரம் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் மீது ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 12-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
இதுகுறித்து சுப்பிரமணியசாமி கூறுகையில் ப.சிதம்பரத்திடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரும் எனது வேண்டுகோளை வரும் 12-ந்தேதிக்குள் சுப்ரீம் கோர்ட்டு தீர்மானிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக