தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.7.11

இந்திய அரசால் ஏமாற்றப்படும் முஸ்லிம்கள்!


சிறுபான்மை முஸ்லிம்களுக்கு மத்திய அரசு பல நலத் திட்டங்களை அவ்வப்போது அறிவிக்கின்றது. அவை பத்திரிகைகளில் முக்கியச் செய்திகளாக இடம் பெறும்.

அதன்பின் அத்திட்டங்கள் மூலம் முஸ்லிம்களுக்கு உரிய பயன்கள் கிடைக்குமா என்றால் அந்தத் திட்டங்கள் என்னவென்றே முஸ்லிம் சமுதாயத்திற்குத் தெரியாது.

அரசு அதிகாரிகளை அணுகி குறிப்பிட்ட திட்டம் குறித்து கேட்டால்
- இன்னும் மத்திய அரசிடமிருந்து முறையான உத்தரவு வரவில்லை என்று அதிகாரிகள் பதில் சொல்வார்கள். சிறுபான்மை மக்களுக்கான திட்டங்கள் வெறும் ஏட்டளவில்தான் உள்ளது. முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது மத்திய அரசு.

இக்குழு இந்தியா முழுவதும் நேரடியாக கள ஆய்வு மேற் கொண்டு 404 பக்கங்களைக் கொண்ட ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இந்திய நாட்டில் சிறுபான்மையினரான முஸ்லிம்களின் வாழ்க்கை நிலையின் அவலங்கள் இவ்வறிக்கையின் மூலம் வெளிப்பட்டபோது முஸ்லிம்கள் மாத்திரமல்லாமல் சமூக ஆர்வலர்களும் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். பல மாநிலங்களில் கல்வி, பொருளாதார நிலைகளில் தலித் மக்களை விடவும், துப்புரவுத் தொழிலாளர்களை விடவும் முஸ்லிம்களின் நிலை மிகவும் பின் தங்கியிருப்பதும், கல்வி, வேலை வாய்ப்பு போன்றவை முஸ்லிம் சமூகத்திற்கு மறுக்கப்பட்டு வரும் உண்மைகளும் வெளிச்சத்திற்கு வந்தன.

நாடு முழுவதும் இதற்கு விமர்சனங்களும் எழுந்தன. நாடாளுமன்றத்திலும் இது எதிரொலித்தது. இதனால் முஸ்லிம்களின் அதிருப்தியைத் தவிர்க்கும் வகையில் உடனடியாக சச்சார் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு 15 அம்சத் திட்டத்தைக் கொண்டு வந்தது மத்திய அரசு. இதன்படி முஸ்லிம்கள் கணிசமாக வாழ்கின்ற 90 மாவட்டங்களை கண்டறிந்து அங்கு கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட பணிகள் தொடங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. நாட்டில் பொதுவாக முஸ்லிம்களை கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னேற்றுவதற்கு உண்டான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அறிவித்தது மத்திய அரசு.

சச்சார் அறிக்கையில், ஓரளவு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு பெற்றிருக்கும் முஸ்லிம்களுக்கு அவர்கள் சார்ந்துள்ள மதத்தைக் காரணம் காட்டி, வாடகைக்கு வீடு கொடுக்க மறுக்கப்பட்டு வருகிறது என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை கையிலெடுத்திருக்கும் மத்திய அரசு, ஒரு வரைவு திட்டத்தை தயாரித்து வருகிறது. இந்த வரைவுத் திட்டத்தின்படி, சிறுபான்மை முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகள் மட்டுமல்லாது வாடகைக்கு வீடு தர அல்லது வீட்டு வசதியை மறுப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கவும், ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் வழிவகை செய்திருக்கிறது மத்திய அரசு.

இந்த சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசின் சிறுபான்மை நலத்துறை முழு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் இதனால் முஸ்லிம்களுக்கு எவ்வித பயனும் விளையப் போவதில்லை. முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு தரவில்லை என்றால் சட்டப்படி அது தவறு என்பதை விளங்கிக் கொள்ளும் வீட்டின் உரிமையாளர், வாடகைத் தொகையையும், முன் பணத்தையும் வேண்டுமென்றே கூட்டிச் சொல்லி தானாகவே முஸ்லிம்கள் விலகிக் கொள்ளும் வகையில் நடந்து கொண்டால் சட்டத்தால் அவர்களை என்ன செய்து விட முடியும்?

ஒரு வேளை அதிக வாடகை இருந்தாலும் ஓ.கே. என்று ஒப்புக் கொள்ளும் ஒரு சிலரால் வீட்டு உரிமையாளருக்குத்தான் ஆதாயம் ஏற்படும். இதுமட்டும்தான் இச்சட்டத்தால் ஏற்படும் பயனாக இருக்க முடியும். இதுபோன்ற வீண் நடவடிக்கைகளை விட்டு விட்டு முஸ்லிம்களின் நலனில் உண்மையான அக்கறை செலுத்தி அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை விகிதாச்சார அடிப்படையில் உயர்த்தித் தர மத்திய அரசு முன் வர வேண்டும். இது ஒன்றுதான் முஸ்லிம்களை முன்னேற்றுவதற்கான ஆக்கப்பூர்வமான செயல் திட்டமாக இருக்கும். இதுவல்லாமல் 15 அம்சத் திட்டம் என்ன 80 அம்சத் திட்டம் போட்டாலும் அது - தேர்தல் பிரச்சாரத்தில் சொல்லி முஸ்லிம்களை ஏமாற்ற மட்டுமே உதவும்.

0 கருத்துகள்: