தர்மஸ்தலாவில் சிவனேயென்று இருந்த மஞ்சுநாதருக்கு சநாதன தருமத்தின் காவலர்களான பாரதீய ஜனதாவின் வடிவில் இப்போது பெரும் சோதனை ஏற்பட்டுள்ளது.
மஞ்சுநாதர் இப்போது பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். கருநாடகத்தின் தர்மஸ்தலாவில் அமர்ந்து கொண்டு தானுண்டு தனது தருமப் பரிபாலனம் உண்டு என்று சிவனேயென்று இருந்த மஞ்சுநாதருக்கு சநாதன தருமத்தின் காவலர்களான பாரதீய ஜனதாவின் வடிவில் இப்போது பெரும் சோதனை ஏற்பட்டுள்ளது. நாட்டில் அதர்மம் தலையெடுத்து தர்மம் தலைசாயும் போதெல்லாம்
சம்ஜௌதா, நாண்டெட், மாலேகான் பாணியில் ஆர்.டி.எக்ஸ் அவதாரம் எடுக்கும் பாரதீய ஜனதாவே இந்த சோதனைக்கு மூலகர்த்தா என்பதால் தான் மஞ்சுநாதர் கடப்பாறையை விழுங்கியவர் கணக்காக விழித்துக் கொண்டிருக்கிறார்.கீர்த்தணாரம்பத்திலே கருநாடகத்தில் முதன் முறையாக இராம ராச்சியத்தை அமைப்பதில் வெற்றி கண்ட பாரதிய ஜனதாவின் எடியூரப்பா, சீரோடும் சிறப்போடும் பல்வேறு ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். ஆர்.எஸ்.எஸ் காண்டீபத்திலிருந்து சீறிப் பாய்ந்த இராம பாணங்கள் குத்திக் கிழித்ததில் கருநாடகத்தின் சகல துறைகளிலும் ஊழல் சீழ் வடிந்து ஆறாய் ஓடத் துவங்கியது. ‘இதென்னடா நமக்கு வந்த சவால்’ என்று கங்கை ஆறே பொறாமை கொண்டது. நடக்கும் தேட்டையில் தனக்கான அவிர் பாகம் தடைபட்டுப் போனதைக் கண்ட மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஹெச்.டி. குமாரசாமி நெற்றிக் கண்ணைத் திறந்தார். ஊடகங்களில் எடியூரப்பாவின் காவிக் கோவணத்தை உருவி அம்மணக்கட்டையாக நிறுத்தினார்.
பாவப்பட்ட ஏழைகளான ரெட்டி சகோதர்களின் ரொட்டிச் செலவுகளுக்கு பெல்லாரி மாவட்டத்தையே தூக்கிக் கொடுத்த எடியூரப்பா சில பெட்டிகளை குமாரசாமியின் வாயில் திணித்து ஆறுதல்படுத்த முடியுமா என்று முயற்சித்துள்ளார். அவ்விடத்தில் வாய் கொஞ்சம் பெரிது என்பதாலோ என்னவோ பேரம் படியவில்லை. அதைத் தொடர்ந்து குமாரசாமி சற்றும் மனம் தளராமல் எடியூரப்பா தன்னிடம் நடத்திய பேரத்தை பகிரங்கமாய் அம்பலப்படுத்தி விட்டார். இது நடந்தது கடந்த பதினாறாம் தேதி. அப்போது அவர், தான் எடியூரப்பாவின் குடும்பத்தார் அடிக்கும் கொள்ளைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டால் எதிர்காலத்தில் அவரது கட்சியோடு பாரதிய ஜனதா கூட்டணி அமைக்கும் என்றும், பணம் கொடுப்போம் என்றும் எடியூரப்பா ஆசை காட்டியதை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
தான் ஆட்டிய வெள்ளைக் கொடியைக் கிழித்து மலம் துடைத்து தன் முகத்திலேயே அப்பி விட்ட சோகத்தை மறைத்துக் கொண்ட எடியூரப்பா, தனது நேர்மையை நிரூபிக்க குமாரசாமியை ஒரு சவாலுக்கு அழைக்கிறார். சவால் என்றதும் நீதி மன்றம் வழக்கு என்பதெல்லாம் உங்களுக்கு நினைவுக்கு வரக்கூடும் – முதலில் அதை ரப்பர் வைத்து அழித்துப் போடுங்கள். நாம் பேசிக் கொண்டிருப்பது சாதா ராஜ்ஜியத்தைப் பற்றியல்ல – ராம ராஜ்ஜியத்தைப் பற்றி.
சரி விஷயத்துக்கு வருவோம். மேற்படி சவால் என்னவென்றால், குமாரசாமி தான் சொல்லும் குற்றச்சாட்டுகள் உண்மையென்று தர்மஸ்தலாவில் இருக்கும் மஞ்சுநாதரின் முன் கற்பூரம் அடித்து சத்தியம் செய்ய வேண்டியது. தான் சொல்வதே சரியானது என்று எடியூரப்பாவும் சத்தியம் செய்ய வேண்டியது. இதில் யார் சொன்னது பொய்யோ அவரை தண்டிக்க வேண்டிய பொறுப்பு மஞ்சுநாதரைச் சேர்ந்தது.
எடியூரப்பா, ஜெயலலிதா போன்றவர்களுக்கெல்லாம் சாமியும் சத்தியமும் சர்க்கரைப் பொங்கல் போலத்தான். இவரே இப்படி ஏற்கனவே பல கோயில்களில் பல்வேறு சத்தியங்களையும் ஹோமங்களையும் செய்துள்ளவர் தான். அது தான் முப்பத்து முக்கோடி தெய்வங்கள் இருக்கிறார்களே. இன்றைக்கு ஒரு சாமியோடு கூட்டணி வைத்து இன்னொரு சாமிக்கு அல்வா கொடுத்து விடலாம், நாளை வேறு ஒரு சாமியோடு கூட்டணி வைத்து மொத்தமாக எல்லோருக்குமே அல்வா கொடுத்து விடலாம். இது தான் எடியூரப்பா ஜெயலலிதா போன்றவர்களின் அசட்டுத் துணிச்சலுக்குக் காரணம்.
ஆனால் இந்த முறை விசேஷம் என்னவென்றால், குமாரசாமியைப் பார்த்து‘துண்டைப் போட்டுத் தாண்ட ரெடியா’ என்று எடியூரப்பா அடித்த சவால் அரசுப் பணத்தில் அடித்ததாகும். மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்து தான் எல்லா பத்திரிகைகளிலும் அரைப்பக்க அளவில் விளம்பரம் கொடுத்தார். ஒருவேளை என்றாவது ஒருநாள் ஆர்.எஸ்.எஸ் கும்பல் சொல்வது போல் இராம ராஜ்ஜியம் மட்டும் அமைந்து விடுமானால் நீதிமன்றங்களை எல்லாம் இழுத்து மூடிவிடுவார்கள்.
ஹிந்து சநாதன தருமத்தின் அடிப்படையில் தீமிதித்தல், கற்பூரம் அடித்தல், குழந்தையைப் போட்டு தாண்டுதல், நாக்கில் சூடு போட்டுக் கொள்ளுவது, சூத்திரன் படித்தால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது என்பன போன்ற வருண தருமத்தின் அடிப்படையிலான விசாரணை முறைகளும் தண்டனை முறைகளுமே கோலோச்சும்.
எடியூரப்பா சிலைமுழுங்கி என்றால் குமாரசாமி மலைமுழுங்கி. எனவே, அவரும் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யும் சவாலை கடந்த பதினெட்டாம் தேதி ஏற்றுக் கொள்கிறார். இதுவும் ஊடகங்களில் விமரிசையாக வெளியாகிறது. இந்தியாவின் ஐ.டி தலைநகரம் இப்படி ஐந்தாம் நூற்றாண்டு பிராணிகளின் பிடியில் இருப்பதைப் பார்த்து ஊரே சிரிப்பாய்ச் சிரிக்கிறது. இப்படியாக எடியூரப்பாவும் குமாரசாமியும் துண்டைப் போட்டுத் தாண்டுவதற்கான நாளாக 27-ம் தேதி குறிக்கப்பட்டது.
இந்த ஆன்டி கிளைமேக்ஸை ஒரிஜினல் சத்தியவான் (ISO 2000:9001) எடியூரப்பா எதிர்பார்க்கவில்லை. ஒரு விஷயம். சீனியர் கவுடாவும் ஜூனியர் கவுடாவும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் அரசியல் நடைமுறையான பில்லி சூனியங்கள் மற்றும் பூஜை புனஸ்காரங்களில் போதுமான அளவுக்குக் கரைகண்டவர்கள் தான். அவர்கள் நடத்திய பல்வேறு ஹோமங்களையும் பூஜைகளையும் பார்த்து மிரண்டு போன எடியூரப்பா ஏற்கனவே ஒருமுறை ‘ கவுடா குடும்பம் எனக்கு சூனியம் வச்சிட்டானுக’ என்று புலம்பியிருக்கிறார். இங்கே தான் இந்தியப் போலி ஜனநாயகத்தின் உண்மையான மாண்பு வெளிப்படுகிறது. இவர்களுக்குள் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவதில் போட்டி நடப்பதில்லை. மாறாக, குட்டிச்சாத்தானை யார் முதலில் கைக்குள் போட்டுக் கொள்வது என்பதில் தான் போட்டியே நிலவுகிறது.
சம்பந்தப்பட்ட நாளன்று தர்மஸ்தலாவின் மஞ்சுநாதர் ஆவலோடு ஜமுக்காளம், சொம்பு சகிதமாக காத்துக் கொண்டிருந்த நிலையில் எடியூரப்பா தனது சத்தியத்தைத் திரும்ப வாங்கிக் கொள்கிறார். புனிதமான பல்வேறு மடங்களைச் சேர்ந்த மட சாமியார்களும், புனிதத்துக்கே புனிதமாக விளங்கும் பாரதிய ஜனதா தலைவர் கட்காரியும் தன்னிடம் வேண்டிக் கொண்டதை அடுத்து தான் சவாலில் இருந்து பின் வாங்குவதாக எடியூரப்பா அறிவித்து மஞ்சுநாதரின் பஞ்சாயத்து சொம்பில் மூத்திரம் அடித்து விட்டார்.
ஊருக்கே தர்ம நாட்டாமையாக விளங்கிய ‘மஞ்சுநாதர் இப்போது என்னைத் தீர்ப்பு சொல்ல விடுங்கடா’ என்று புலம்பிக் கொண்டிருப்பதாகக் கேள்வி. பில்லி சூனியமும் துண்டைப் போட்டுத் தாண்டும் ஜனநாயக நடைமுறையும் மண்ணைக் கவ்வியதை அடுத்து ஆர்.எஸ்.எஸ் சுயம்சேவக்கான எடியூரப்பா இப்போது குமாரசாமிக்கு எதிராக நீதிமன்றத்தை நாடப்போவதாகச் சொல்லியிருக்கிறார். சமச்சீர் கல்வி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே கண்டிருக்கும் நாம் இவையிரண்டுக்கும் வேறுபாடே இல்லையென்கிறோம். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
அரசியல் பிரச்சினைகள் என்றில்லை; தனது அரசின் மேல் எழும் ஊழல் முறைகேடுகள் குறித்த புகார்களுக்கு இவர் அளிக்கும் பதில் – ‘இதெல்லாம் பில்லி சூனிய வேலை’ என்பது தான். ஒரு மாநிலத்தை ஆளும் முதல்வர் அறிவியல் பூர்வமாகச் சிந்திக்க மறுக்கிறார் என்பதோடு பில்லி சூனியத்தையே தனது சகல பூஜைகளுக்கும் காரணமாக முன்வைக்கிறார். நாளை ஒருவேளை இராம ராஜ்ஜியம் அமைந்து விடுகிறது என்பதை கற்பனை செய்து பாருங்கள். விலைவாசி உயர்வுக்கும், வேலையில்லாப் பிரச்சினைகளுக்கும் சுடுகாட்டு முனி தான் காரணம் என்பார் இராம கோபாலன். அதற்கு ஒரு சாந்தியாகம் செய்து விட்டால் போதும் என்று எடுத்துக் கொடுப்பான் ஜெயேந்திரன். ஆர்.எஸ்.எஸ் சொல்லும் இராம ராஜ்ஜியம் என்பது இப்படித் தான் இருக்கும் நண்பர்களே. அதன் ஒரு சின்ன ட்ரைலர் தான் கருநாடகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது.
__நன்றி :வினவு.காம்_____________________________________________
0 கருத்துகள்:
கருத்துரையிடுக