தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.6.11

சமையல் கியாஸ், டீசல் விலை உயர்வு: தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னை, ஜூன். 26-  கியாஸ், டீசல், மண்எண்ணெய் விலை உயர்வுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
இதுகுறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளதாவது:-
ஏழை, நடுத்தர மக்கள் சமையலுக்குப் பயன்படுத்தும் மண்எண்ணெய் லிட்டருக்கு ரூபாய் 2ம்,
சமையல் எரிவாயு ஒன்று ரூபாய் 50ம் நேற்று நள்ளிரவு முதல் எதிர்பாராத வகையில் மத்திய அரசால் உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இன்றியமையாத சமையலுக்கு இந்த விலை உயர்வினால் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவு குடும்பத்தை நடத்தும் தாய்மார்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இது போதாது என்று டீசல் விலையும் லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது வேதனைக்குரியதாகும். எத்தகைய பிரிவு மக்களில் யாரும் வீட்டிலேயே அடைந்து கிடைக்கப் போவதில்லை. வேலைக்கும், வியாபாரத்திற்கும், பள்ளிக் கூடத்திற்கும், மருத்துவமனைகளுக்கும் என அன்றாடம் போக வேண்டிய குடும்பங்களின் போக்குவரத்து செலவுகள் இதனால் அபரிமிதமாக அதிகரிக்கும்.
இந்திய அரசு நடத்தும் எண்ணெய் கம்பெனிகளுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது என்றும், இந்திய அரசின் சொந்த நிதிநிலையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும், இந்த விலை உயர்வு மக்களுக்கு கட்டுப்படியாகக் கூடியது என்றும் மத்திய அமைச்சர் கூறியுள்ளது விந்தையாக உள்ளது. ஆனால் உண்மையில் மத்திய அரசுக்கு வருவாய்க்கான பல துறைகள் உள்ளன. மேலும் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் அதிகாரமும் உள்ளது. உள்நாட்டிலும், அயல்நாட்டிலும் கடன் எழுப்பும் வாய்ப்புகளும் அதிகம். மத்திய அரசின் பற்றாக்குறையை ஈடுகட்ட பல வழிகள் உண்டு.
கூலி வேலைக்குப் போனால்தான் குடும்பம் நடத்த முடியும் என்ற நிலையில் உள்ள ஏழை, நடுத்தர மக்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டால், அவர்கள் அந்தப் பற்றாக்குறையை ஈடுகட்ட எங்கே போவது? ஒரு மக்கள் நல அரசுக்கு இலக்கணம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக இருக்க வேண்டுமே தவிர, வறுமையில் வாட்டுவதாக இருக்கக் கூடாது. ஆகவே இந்திய அரசின் இந்த நடவடிக்கை மக்கள் விரோதமானது.
ஏற்கனவே உணவுப் பொருட்களின் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் இந்திய அரசின் இந்த நடவடிக்கை மேலும் விலைவாசி உயர்வை ஒரு சதவிகித்திற்கும் மேல் அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். தண்டச் செலவையும், தேவையற்ற திட்டங்களுக்கான செலவையும் இந்திய அரசு தவிர்த்தாலே போதும். இத்தகைய விலை உயர்வுக்கு அவசியம் இராது. அதை விட்டுவிட்டு ஏழை, நடுத்தர மக்களின் மேல் இந்த கூடுதல் செலவை சுமத்துவது கண்டிக்கத்தக்கதாகும்.
தே.மு.தி.க. சார்பில் இப்பொழுது ஏற்பட்டுள்ள விலை உயர்வை மட்டுமல்ல, கடந்த காலங்களிலும் கண் மூடித்தனமாக பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியதையும் சேர்த்து திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். மக்களுக்காகத்தான் அரசே தவிர, அரசுக்காக மக்கள் அல்ல. அரசின் பற்றாக்குறையை ஈடுகட்ட மக்களை வாட்டி எடுப்பது உண்மையான ஜனநாயகமும் ஆகாது. இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளதாவது:-
ஏழை மக்கள் மீது அரசுக்கு இரக்கமே இல்லையோ என்று எண்ணும் அளவுக்கு டீசல், மண்எண்ணை, சமையல் கியாஸ் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வு மிகவும் கண்டிக்கத்தக்கது. டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு உயரும். இனி ஏழை மக்கள் பட்டினி கிடந்து வாட வேண்டும் என்று அரசு கருதுகிறதோ என்று நினைக்கத்தோன்றுகிறது. இந்த விலை உயர்வு ஏழைகளின் பொருளாதார முதுகெலும்பை முறித்து விடும் என்பதால் உடனடியாக திரும்ப பெறவேண்டும். மாநில அரசும் எரிபொருட்கள் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியுள்ளதாவது:-
ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்கள் மீது மத்திய அரசு தொடுத்துள்ள கடுமையான தாக்குதலாகும். இந்த விலை உயர்வை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இந்த விலை உயர்வு, அனைத்துப் பொருட்களின் விலைகளையும் சங்கிலித் தொடர்போல மேலும் கடுமையாக உயர்த்தும். எனவே மத்திய அரசு, ஏழை, எளிய, நடுத்தர மக்களைப் பாதிக்கும் இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்றும், இந்த விலை உயர்வுக்கு எதிராக அனைத்து தரப்பு பொது மக்களும், ஜனநாயக எண்ணம் கொண்டவர்களும் வலுவான கண்டனக் குரலை எழுப்ப வேண்டும்.
 
மனித நேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல்சமது:-
டீசல் விலை உயர்வால் மக்களின் அன்றாட வாழ்வு மிகவும் பாதிக்கப்படும். சமையல் எரிவாயு விலை உயர்வால் அனைத்து மக்களும் மிகவும் இன்னலுக்கு இலக்கப்பட்டுள்ளர்கள். மக்களின் வாட்டத்தை போக்கி மக்களின் அதிருப்தி கோப அலையாக மாறுவதற்கு முன் விலை உயர்வை திரும்பப் பெற மத்திய அரசு முன்வர வேண்டும்.
 
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன்:-
நம்நாட்டில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனத்தின் நலனைக் கருத்தில் கொண்டே கியாஸ், டீசல், விலை உயர்த்தப்பட்டுள்ளது. பங்குச்சந்தையில் தனியார் நிறுவனத்தின் பங்கு விலை குறைந்து விடாது காக்கவே இந்த விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் பொருட்களின் விலை மேலும் உயர்ந்து மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவார்கள். எனவே மத்திய அரசு இந்த விலையேற்ற முடிவை உடனடியாகக் கைவிடவேண்டும். பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகளை மத்திய அரசு முழுவதுமாகக் கை விடவேண்டும், தனியாரிடமிருக்கும் பெட்ரோலிய உற்பத்தித் தொழிலை ஏற்று நடத்தவேண்டும், உள்நாட்டில் தட்டுப்பாடு இருக்கும் நிலையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கக்கூடாது.

0 கருத்துகள்: