தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.6.11

பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வுக்கு ஜெயலலிதா கடும் கண்டனம்

சென்னை, ஜூன். 26-  டீசல், கேஸ், கெரசின் விலை உயர்வுக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
மத்திய அரசு டீசலுக்கான
விலையை லிட்டருக்கு 3 ரூபாயும், சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டர் ஒன்றுக்கு 50 ரூபாயும் மற்றும் மண்எண்ணெய் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும் நள்ளிரவு முதல் உயர்த்தி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.
பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி விட்டதால், பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது உயர்த்தி வருகின்றன. பெட்ரோல் விலை ஏற்றம் இரு சக்கர வாகனங்கள் மற்றும் சீருந்துகள் (கார்) ஆகியவைகளைப் பயன்படுத்தும் நடுத்தர வர்க்க மக்களை பாதிக்கிறது. ஆனால், டீசல் விலை உயர்வு, ஏழை, எளியோர் உட்பட அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக பாதிக்கும். சரக்குகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பெரும்பாலும் தரை வழியாக லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. டீசல் விலை ஏற்றத்தினால் சரக்கு போக்குவரத்திற்கான கட்டணம் பல மடங்கு உயரும். இது, அனைத்து தரப்பு மக்களையும், குறிப்பாக, ஏழை, எளிய மக்களை வெகுவாக பாதித்து விடும். விலைவாசி உயர்வினால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த டீசல் விலை உயர்வினால் அனைத்துப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் உயர்ந்து விடும்.
மக்களின் வருவாய் ஒரே அளவில் இருக்கும் நிலையில், இது போன்ற டீசல் விலை உயர்வால் ஏற்படும் விலைவாசி உயர்வை மக்களால் எப்படி எதிர்கொள்ள இயலும்? அனைத்து தரப்பு மக்களும் எரிபொருளாக பயன்படுத்தும் சமையல் எரிவாயுவும் சிலிண்டர் ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வளவு அதிகமான விலை உயர்வை மக்களால் தாங்க இயலாது. ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் மண்எண்ணெய் விலையும் லிட்டருக்கு 2 ரூபாய் வீதம் உயர்த்தப்பட்டுள்ளது ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்றாகும். ஒட்டு மொத்த விலைவாசி உயர்வு உள்ள இந்த நிலையில், இந்த மண்எண்ணெய் விலை ஏற்றம் ஏழை, எளிய மக்களை மிகவும் வாட்டி வதைக்கும். எனவே, டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்எண்ணெய்க்கான விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
டீசல் மீதான கலால் வரி 2 சதவீதம், கச்சா எண்ணெய் மீதான சுங்க வரி 5 சதவீதம் என சொற்ப அளவில் கலால் மற்றும் சுங்க வரி குறைக்கப்பட்டு, அதைப் போன்று மாநில அரசால் விதிக்கப்படும் மதிப்பு கூட்டு வரி குறைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டு, மக்கள் வளர்ச்சிப் பணிகளுக்காக அதிகம் செலவிடுவது மாநில அரசுதான். மாநில அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது மதிப்பு கூட்டு வரி மட்டும்தான். எனவே, டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்எண்ணெய் ஆகியவற்றின் விலையை மிக அதிகமாக உயர்த்தியுள்ள மத்திய அரசுக்கு, வரியைக் குறைக்கும்படி மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்க எந்த தார்மீக உரிமையும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

0 கருத்துகள்: