சென்னை : சமச்சீர் கல்வியை நிறுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த ஆண்டே சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சமச்சீர் கல்வி நிறுத்தம் தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் கடந்த 2 நாட்களாக விசாரித்தனர். அப்போது சமச்சீர் கல்விக்கு ஆதரவாக
வக்கீல்கள் பி.வில்சன். என்.ஜி.ஆர்.பிரசாத், ஜி.சங்கரன் ஆகியோரும், அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், அரசு சிறப்பு வக்கீல் சம்பத் ஆகியோரும் பள்ளிகள் சார்பில் மூத்த வக்கீல்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சிலம்பண்ணன் ஆகியோரும் ஆஜராகி வாதாடினார்கள்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் நேற்று மாலை அளித்த தீர்ப்பு விவரம் வருமாறு: சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வர கடந்த அரசு ஓராண்டாக ஆய்வு செய்து புதிய பாட திட்டத்தை வகுத்தது. கடந்த ஆண்டு 1ம் மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இந்த 2011&2012 கல்வி ஆண்டிற்கு மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. இந்த ஆண்டு 9 கோடி சமச்சீர் கல்வி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டது . இதற்காக 200 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதும் சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைத்தது. இதற்காக புதிய திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. சமச்சீர் பாடப்புத்தகத்தை 10ம் வகுப்பு மாணவர்கள் இன்டர்நெட் மூலம் எடுத்து படித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த புத்தகத்தை மாற்றினால் இந்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று மனுதாரர்கள் தரப்பில் கூறியதை ஏற்றுக்கொள்கிறோம்.
200 கோடி செலவில் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது என்பதை அரசு மறுக்கவில்லை. சமச்சீர் கல்வி திட்டம் தரமற்றது என்று அரசு ஆராய்ந்து பார்த்ததாக தெரியவில்லை. இதை மாற்றி அமைக்க நிபுணர் குழு இதுவரை அமைக்கவில்லை என்று அரசு தரப்பில் கருத்து கூறியுள்ளனர். சமச்சீர் கல்வியை மாற்றி அமைக்க உள்ள ஆதாரங்களை அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.
புதிய அரசு பொறுப்பேற்ற உடன் அமைச்சரவை கூடி ஆலோசனை செய்து, சமச்சீர் திட்டம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பழைய புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும், இதற்காக டெண்டர் விடப்படும் என்று கடந்த மாதம் 23ம் தேதி அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை பார்க்கும் போது அரசு அவசரமாக உள்நோக்கத்துடன் செயல்பட்டது தெளிவாக தெரிகிறது.
திருத்த சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு நிபுணர்கள் குழுவை அரசு அமைத்து ஆய்வு செய்யவில்லை என்று தெளிவாக தெரிகிறது. கல்வியை தரமாக்க சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தப்பட்டது என்று அரசு கூறியதை ஏற்க முடியாது. சமச்சீர் கல்வியை ரத்து செய்யவில்லை நிறுத்தி தான் வைத்துள்ளோம். சட்டத்திருத்தத்திற்கு தடை விதிக்க கூடாது என்று அரசு தரப்பில் கூறியதை ஏற்க முடியாது. புதிய சட்டத்தில் கூறிய காரணங்கள் குழப்பமாக உள்ளது. திருத்தச்சட்டத்தில் இப்போதுள்ள கல்விமுறை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. இது எந்த கல்விமுறையை கூறியுள்ளது என்று தெளிவாக இல்லை.
சமச்சீர் கல்வி பாடபுத்தகத்தில் சுயவிளம்பரத்திற்காக சில பாடங்கள் உள்ளது என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அனைத்து பாடபுத்தகங்களும் சரியானது அல்ல என்று அரசு தரப்பில் நீதிமன்றத்தில் நிருபிக்க வில்லை. சமச்சீர் கல்வி பாடதிட்டம் குறைபாடு உள்ளது என்று அரசு தரப்பில் கூறப்படவில்லை. றீ தற்போதுள்ள சட்டத்திருத்தம் அரசியல் சாசனம் அளிக்கும் உரிமையை பறிப்பதாக உள்ளதா? இந்த ஐகோர்ட் ஏற்கனவே அளித்த தீர்ப்பை செல்லாததாக மாற்றுகிறதா? என்பதை பரிசீலிக்க வேண்டும். இதற்கு விரிவாக அரசிடம் பதில் பெற வேண்டும். அரசு விரிவாக பதில் மனு தாக்கல் செய்த பிறகு வழக்கை விரிவாக விசாரித்தால் தான் முடிவு எடுக்க முடியும். இதற்கிடையில் என்ன செய்யலாம் என்பது தான் தற்போதைய கேள்வி எழுந்துள்ளது? எனவே தான் திருத்த சட்டத்திற்கு தடைவிதிக்கிறோம்.
றீ திருத்த சட்டம் கொண்டு வந்த சூழ்நிலையை உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது. திருத்த சட்டம் கொண்டுவரும் முன்பு நிபுணர்கள் குழுவிடம் கருத்து கேட்டதற்கு ஆதாரம் இல்லை. அப்படி நிபுணர்கள் குழுவை அரசு அவசரமாக அமைத்திருந்தாலும் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையுள்ள பாட புத்தகங்கள் ஒரே நாளில் நிபுணர்கள் குழு ஆய்வு செய்திருக்க முடியாது. எனவே அரசின் செயல்பாடு அவசர கோலத்தில் எடுக்கப்பட்டது என்று தெளிவாக தெரிகிறது.
கடந்த 2010&2011ம் கல்வி ஆண்டில் உள்ள பழைய பாடத்திட்டம் இந்த ஆண்டு அமுல்படுத்தப்படும் என்று அரசு கூறுவது கடந்த ஆண்டு சமச்சீர் கல்வி வழக்கில் உயர்நீதிமன்றம் டிவிஷன் பெஞ்சு அளித்த தீர்ப்பை மீறுவது மட்டுமல்ல மூலசட்டத்தையே திரும்ப பெறுவது போல உள்ளது. எனவே மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு சமச்சீர் கல்வி முறையில் எந்த மாற்றத்தையும் இந்த கல்வி ஆண்டுமுதல் கொண்டு வர அரசுக்கு அனுமதி வழங்க முடியாது.
சமச்சீர் கல்வி புத்தகங்கள் எல்லா வகுப்புகளுக்கும் தயாராக உள்ளது என்று கூறப்பட்டுள்ளதால் அதை திருத்த அனுமதித்தால் பல பிரச்சனைகள் ஏற்படும். மாணவர்கள் நலன் பாதிக்கப்படும். இந்த வழக்கை எல்லா நிலையிலும் எல்லா கோணத்திலும் ஆராய்ந்து பார்க்கும் போது மாணவர்கள் நலன் தான் முக்கியம் என்று இந்த நீதிமன்றம் மனதில் கொள்கிறது. எனவே திருத்த சட்டத்திற்கு தடை விதிக்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
சமச்சீர் கல்வி திட்டத்தை இந்த ஆண்டு அமல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியதும், தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி, ‘‘இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு எடுத்துள்ளது. இந்த தீர்ப்பு நகல் உடனே தர வேண்டும்’’ என்றார்.
இதை கேட்ட தலைமை நீதிபதி இக்பால், ‘‘உச்ச நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஒரு மாதம் விடுமுறை உள்ளது. அப்படியிருக்கும் போது உடனே எப்படி மேல்முறையீடு மனு தாக்கல் செய்வீர்கள்?’’ என்று கேள்வி எழுப்பினார். இருந்தாலும் தீர்ப்பு நகல் உடனே தரப்படும் என்று அறிவித்தார்.
நன்றி;தினகரன் நாழிதள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக