தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.6.11

பின்லேடனைப் போல ஜவாஹிரியையும் சுட்டுக் கொல்வோம்: அமெரிக்கா

வாசிங்டன், ஜூன். 18-  ஒசாமா பின்லேடனை வேட்டையாடியதைப் போல அல் கொய்தாவின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கும் அல் ஜவாஹிரியையும் சுட்டு வீழ்த்துவோம் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் எச்சரித்துள்ளார்.

அல் கொய்தா அமைப்பின் தலைவராக இருந்து வந்த பின்லேடனை பாகிஸ்தானின் அபோதாபாத்தில் உள்ள வீட்டில் வைத்து அமெரிக்க வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து அல் கொய்தாவின் புதிய தலைவராக அதன் நம்பர் டூ தலைவராக இருந்து வந்த ஜவாஹிரி நியமிக்கப்பட்டுள்ளார்.
59 வயதான ஜவாஹிரி பின்லேடனின் வலதுகரமாக திகழ்ந்தார். மேலும் பின்லேடனுக்கு அடுத்தப்படியாக 2-வது இடத்தில் இருந்தார். எகிப்து நாட்டை சேர்ந்தவரான இவர் அல்கொய்தாவின் தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டார். தற்போது இவர் எங்கு இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. இவர் தலைக்கு அமெரிக்கா ரூ.125 கோடி விலை நிர்ணயித்துள்ளது.
இதையடுத்து ஜவாஹிரியையும் பின்லேடனைப் போல வேட்டையாடுவோம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் கூறியதாவது:-
ஜவாஹிரிக்கு, பின்லேடனைப் போல திறமையோ அல்லது புத்திசாலித்தனமோ கிடையாது. இருப்பினும் பின்லேடன் இடத்தை நிரப்பக் கூடிய ஒருவர் இருக்கிறார் என்பதை ஜவாஹிரியின் நியமனம் உறுதிப்படுத்துகிறது. பின்லேடனுக்கு ஏற்பட்ட பெரும் மரணத்தைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து செயல்பட இவர்கள் நினைக்கிறார்கள் என்றால் தீவிரவாதத்தின் தீவிரம் இன்னும் குறையவில்லை என்றுதான் அர்த்தம். பின்லேடன் விட்டுச் சென்ற பணிகளை தொடரப் போவதாக இவர்கள் கூறுகின்றனர். ஆனால் பின்லேடனுக்கு ஏற்பட்ட கதியே இவர்களுக்கும் நேரிடும். ஜவாஹிரிக்கும் இது பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க கூட்டுப் படைத் தலைமைத் தளபதி அட்மிரல் மைக் முல்லன் கூறியதாவது:-
ஜவாஹிரி புதிய தலைவராகியிருப்பதை நாங்கள் ஆச்சரியத்துடன் பார்க்கவில்லை. ஆனால் பின்லேடனுக்கு என்ன மரியாதை கொடுத்தோமோ அதேதான் ஜவாஹிரிக்கும் கிடைக்கும். பின்லேடனை எப்படி தேடிப் பிடித்து அழித்தோமோ, அதையேதான் ஜவாஹிரி விசயத்திலும் செய்வோம். நிச்சயம் அதில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்: