ராம்தேவ் மீதான நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அன்னா ஹசாரே டெல்லியில் மீண்டும் 8-ந் தேதி (புதன்கிழமை) உண்ணாவிரதம் இருக்கிறார்.
ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த யோகா குரு ராம்தேவை நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினார்கள். உண்ணாவிரத பந்தலில் இருந்த பாபா ராம்தேவின் ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன.
இந்த மோதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் காயம் அடைந்தனர்.டெல்லி போலீசாரின் இந்த நடவடிக்கை ஒரு அத்துமீறிய செயல். இதனால், ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டு உள்ளது என்று சமூக சேவகரும் காந்தியவாதியுமான அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ராம்லீலா மைதானத்தில் அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. போலீசாரின் இந்த அத்துமீறல், ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தி உள்ள சம்பவம் மட்டும் அல்லாமல், ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல்.
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள், குழந்தைகள் மீது தடியடி நடத்தப்பட்டது ஏன்? அப்படி அவர்கள் என்ன குற்றத்தில் ஈடுபட்டார்கள்? அவர்கள்மீது பகல் வேளையில் நடவடிக்கை எடுக்காமல், எதற்காக நள்ளிரவில் தாக்குதல் நடத்த வேண்டும்?
போலீசாரின் இந்த அத்துமீறலுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெறும். இந்த போராட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். ஊழலுக்கு எதிராக இனி நடைபெறக்கூடிய போராட்டங்கள் அனைத்தும் பெரிய அளவில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
சுவாமி அக்னிவேஷ் கூறியபோது, ராம்லீலா மைதானத்தில் அமைதியான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாபா ராம்தேவ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மீது கண்ணியக்குறைவாக போலீசார் எடுத்துள்ள நடவடிக்கை பற்றி பிரதமர் மன்மோகன்சிங் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இதுதொடர்பாக, முழு சம்பவம் பற்றியும் உயர்மட்டக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் ராம்தேவ் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் 8-ந் தேதி (புதன்கிழமை) டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அன்னா ஹசாரே அறிவித்து உள்ளார். டெல்லி ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. இதில் இருந்து அரசு பாடம் கற்றுக்கொள்ளாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் அதாவது 2-வது சுதந்திர போராட்டம் நடைபெறும் என்றும் ஹசாரே கூறியிருக்கிறார்.
இதற்கிடையே இன்று நடைபெறும் லோக்பால் கமிட்டி கூட்டத்தை அன்னா ஹசாரே புறக்கணிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக