தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.1.11

இராக்கில் தற்கொலைப்படை தாக்குதல்: 60 பேர் பலி

திக்ரித் (இராக்), ஜன. 18: இராக் முன்னாள் சர்வாதிகாரி சதாம் ஹுசைன் சொந்த ஊரான திக்ரித்தில் செவ்வாய்க்கிழமை தற்கொலைப் படையைச் சேர்ந்த மனித குண்டு நடத்திய தாக்குதலில் 60 பேர் பலியாகினர். 150 பேர் காயம் அடைந்தனர்.
 போலீஸ் பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாமுக்கு வந்திருந்தவர்களுக்கு நடுவில் புகுந்த மனித குண்டு இந்த தாக்குதலை நடத்தினார்.
 இறந்தவர்களில் பலர் போலீஸ் வேலைக்கு சேருவதற்காக வந்திருந்தவர்கள்
 
 இராக் தலைநகர் பாக்தாதுக்கு வடக்கே 150 கிமீ தொலைவில் உள்ளது திக்ரித் நகரம். காலை சுமார் 10.15 மணி அளவில் நடந்த இந்த பயங்கரவாத தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் திக்ரித்தில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 போலீஸ் வேலைக்கான முகாமுக்கு வந்திருந்தவர்கள் சுமார் 300 பேர் வரிசையாக நின்றிருந்தனர். அப்போது தற்கொலைப்படைத் தீவிரவாதி இந்த தாக்குதலை நடத்தியுள்ளார் என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சதாம் ஹுசைன் குடும்பத்தாரின் சொந்த பகுதி திக்ரித். இது சன்னி பிரிவினர் நிறைந்த பகுதி. எனினும் ஷியா பிரிவினர்தான் ஆட்சி நிர்வாகத்தில் அமர்ந்துள்ளனர். அவர்களுக்கு எதிராகவே அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல் நடக்கிறது.
இராக்கை விட்டு இந்த ஆண்டில் முழுமையாக வெளியேற உள்ள அமெரிக்க படைகள், தீவிரவாத எதிர்ப்பு வேட்டையை நிறுத்திக்கொண்டுள்ளன. இந்த நிலையில் இராக் போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படைகள் மீதான தாக்குதலை தீவிரவாதிகள் முடுக்கிவிட்டுள்ளனர் என கூறப்படுகிறதுஇந்த இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தடை! தே.காங்கிரஸ்

புதுடில்லி: நாட்டில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் இந்துத்துவா இயக்கங்களான ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அபினவ் பாரத் அமைப்புகள் மீது தடை விதிக்க வேண்டும் என, தேசியவாத காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை நேற்று சந்தித்துப் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் தாரிக் அன்வர், இச்சந்திப்புக்கு பின் நிருபர்களிடம் பேசினார்: மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என, அமைச்சரிடம் தெரிவித்தேன். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு, இந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் தான் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
எனவே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்கள் அனைவரையும் விடுவிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  மேலும், 1994ம் ஆண்டு முதல் நடந்த அனைத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதிகளை கொண்டு உண்மையான விசாரணை நடத்த முன்வர வேண்டும் எனவும் கேட்டுள்ளேன். மேலும் நாட்டில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அபினவ் பாரத் அமைப்புகள் மீது தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளேன். என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி பொதுச்செயலர் தாரிக் அன்வர் கூறியுள்ளர்.இந்த இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

டெல்லி மஸ்ஜித் தகர்ப்பு - நடந்தது என்ன?

கடந்த ஜனவரி 12 ஆம் தேதி டெல்லி வளர்ச்சி ஆணையத்தினரால் இடித்து நீக்கப்பட்ட நூர் பள்ளிவாசல் இடம் வக்ஃப் போர்டுக்குச் சொந்தமானது என்பதற்கான கெஸட் ஆதாரம் வெளியாகியுள்ளது. அதே நேரம் இப்பள்ளிவாசலின் பக்கத்தில் கட்டப்பட்டுள்ள வால்மீகி கோவில் அரசு நிலத்தில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்டது எனவும் சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கட்டிடங்களை நீக்கம் செய்வதற்காக நடவடிக்கை துவங்கிய டெல்லி வளர்ச்சி ஆணையம் இக்கோயில் நிலத்தைக் கோயிலுக்காக விட்டுக்கொடுத்தது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட பள்ளிவாசல் எனக்கூறி, டெல்லி வளர்ச்சி ஆணையம் இடித்து நீக்கம் செய்த நூர் பள்ளிவாசல் கட்டப்பட்டிருந்த 350 சதுரமீட்டர் நிலம், முஸ்லிம்களுக்கென வக்ஃப் செய்யப்பட்டு வக்ஃப் போர்டுக்குச் சொந்தமானது என்பதற்கான 1975 ஆம் ஆண்டு கெஸட் ஆதாரம் வெளியாகியுள்ளது. 1947-48 ஆம் ஆண்டின் ஜமாபந்தி(நிலத்தின் உரிமையாளர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய குறிப்பு)யில் இவ்விவரம் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இப்பள்ளிவாசலை இடித்து நீக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிடவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லெஃப்டினண்ட் கவர்னரின் அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழுள்ள மதத்துறையைக் கையாளும் கமிட்டியே இப்பள்ளிவாசலை இடித்து நீக்குவதற்கு அனுமதி கொடுத்துள்ளது. இது தொடர்பாக நடைபெற்றதாகக் கூறப்படும் இக்கமிட்டியின் கூட்டக் குறிப்புகளைக் கோரி, தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் கவர்னர் அலுவலகத்தில் முஸ்லிம்கள் பல மனுக்கள் தாக்கல் செய்தும் இதுவரை அக்கூட்டக் குறிப்புகள் வழங்கப்படவில்லை.

இக்கமிட்டியின் உறுப்பினர்கள் யாவர் என்பது குறித்த விவரங்களைக் கூட டெல்லி அரசு இதுவரை வெளிப்படுத்தவில்லை. பல்வேறு சந்தேகங்கள் நிலைகொண்டிருந்த நேரத்திலேயே பள்ளிவாசல் இடித்து நீக்கம்செய்யப்பட்டுள்ளது.

இப்பள்ளிவாசல் இடித்து நீக்கப்படுவதற்கு முன்பு, இது நிலைகொண்டிருந்த நிலம் தொடர்பாக நடந்த சம்பவங்கள் பின்வருமாறு:

* ஜங்புரா ரெசிடன்ஸ் வெல்ஃபேர் அஸோசியேஷன், "ஜங்புராவிலுள்ள பள்ளிவாசல் உட்பட சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடித்து நீக்கம் செய்ய வேண்டும் எனவும் இப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ள மண்ணை நீக்கி இடத்தைத் தூய்மைபடுத்த வேண்டும்" எனவும் கூறி 2006 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து, இப்பகுதியில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து, இப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ள மண்ணை நீக்கி சுத்தம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

* 2006 நவம்பர் மாதம், இப்பகுதியிலுள்ள சட்ட விரோத கட்டிடங்களை டெல்லி வளர்ச்சி ஆணையம் இடித்து நீக்கியது. மேலும் அப்பகுதியிலுள்ள நூர் பள்ளிவாசல் மற்றும் வால்மீகி கோயில் கட்டிடங்கள் தொடர்பாக இறுதி தீர்மானமெடுக்க மதத்துறை கமிட்டிக்குப் பரிந்துரை செய்தது.

* 2007 ஜனவரி மாதம், டெல்லி உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச், ஜங்புரா பகுதி விரிவாக்கம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க, டெல்லி முனிசிப்பல் கார்ப்பரேஷன் மற்றும் டெல்லி வளர்ச்சி ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

* 2007 ஜூலை 30 அன்று, ஜங்புரா பகுதியின் தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, "அப்பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த மண்ணை நீக்கம் செய்ததாகவும் சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கட்டிடங்கள் அனைத்தையும் இடித்து நீக்கிவிட்டதாகவும்" டெல்லி முனிசிப்பல் கார்ப்பரேசன் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

* 2008 ஜூலை 7 ஆம் தேதியன்று, "நூர் பள்ளிவாசல் உட்பட, அப்பகுதியில் கட்டப்பட்டுள்ள அனைத்து சட்டவிரோத கட்டிடங்களையும் நீக்கம் செய்ய வேண்டும்" எனக்கோரி ரெசிடென்ஸ் அஸோசியேஷன் மீண்டும் நீதிமன்றத்தை அணுகியது.

* "ஜங்புரா பகுதியில் கட்டப்பட்டுள்ள அனைத்து சட்டவிரோத கட்டிடங்களையும் நீக்கம் செய்ய வேண்டும்" என்று 2008 ஜூலை 9 ஆம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

* 2009 ஜூன் மாதம், "நூர் பள்ளிவாசலை இடித்து நீக்கம் செய்யவும் வால்மீகி கோயில் இடத்தைக் கோயிலுக்காக விட்டுக்கொடுக்கவும்" லெஃப்டினண்ட் கவர்னர் அலுவலக மதத்துறை கமிட்டி சிபாரிசு செய்தது. இதனைத் தொடர்ந்தே பள்ளிவாசலை இடிப்பதற்கான முயற்சிகளை டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆரம்பித்தது.

* கடந்த 2009 ஆகஸ்ட் மாதத்திலிருந்து டெல்லி வளர்ச்சி ஆணையம் பள்ளிவாசலை இடிப்பதற்கான முயற்சிகளை எடுக்க ஆரம்பித்தது. ஆனால், அப்பகுதி மக்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக உடனடியாக அதைச் செய்ய இயலவில்லை.

* 2010 அக்டோபர் மாதம், பள்ளிவாசலை இதுவரை இடித்து நீக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி டெல்லி வளர்ச்சி ஆணையம் மற்றும் டெல்லி முனிசிப்பல் கார்ப்பரேசன் ஆகியவற்றுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை ஜங்புரா ரெசிடென்ஸ் அஸோசியேஷன் தொடுத்தது.

* நூர் பள்ளிவாசல் கட்டிடம் நிலைகொள்ளும் நிலம் வக்ஃப் போர்டுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரத்தை 2010 அக்டோபர் 26 ஆம் தேதி வக்ஃப் போர்டு டெல்லி வளர்ச்சி ஆணையத்திடம் சமர்ப்பித்தது. இதனைக் கண்டுகொள்ளாமலேயே டெல்லி வளர்ச்சி ஆணையம் தங்கள் மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக கடந்த 12 ஆம் தேதி பள்ளிவாசலைக் காவல்துறை பாதுகாப்புடன் இடித்துத் தள்ளியது.

* அதனைத் தொடர்ந்து, "ஜங்புரா பகுதியிலுள்ள அனைத்து சட்ட விரோத கட்டிடங்களையும் இடித்து நீக்கி விட்டதாகவும் ஆகவே தங்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கோரி டெல்லி வளர்ச்சி ஆணையம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

பட்டாவுடன் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு, நீண்டகாலமாக ஐவேளை தொழுகை நடத்தி வந்த பள்ளிவாசலை அநியாயமாக இடித்து நீக்கிய நடவடிக்கையை எதிர்த்து, டெல்லியில் முஸ்லிம்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஒருநாள் முழு கடையடைப்புப் போராட்டமும் நடத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஞாயிறன்று பள்ளிவாசல் இடித்து நீக்கப்பட்ட இடத்தில் அப்பகுதி மக்கள் தற்காலிகமாக கொட்டகை ஒன்றைக் கட்டி, அதில் தொழுகை நடத்தினர். தொழுகைக்காக சுத்தம் செய்வதற்கான வசதியை அருகிலுள்ள கோயிலில் அப்பகுதி இந்து மக்கள் ஏற்பாடு செய்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

தற்காலிக கொட்டகை அமைக்கும்பணி நள்ளிரவு வரை நடந்தது. உடனடியாக நிரந்தரமாக பள்ளிவாசலைக் கட்டும் நடவடிக்கையை மேற்கொள்ள, செங்கல் மற்றும் மணல் போன்றவற்றையும் அப்பகுதியில் இறக்கியுள்ளனர். அப்பகுதி மக்களின் முழு ஒத்துழைப்புடன் இது நடந்து வருவதால் காவல்துறை அதனைக் கண்டுகொள்ளவில்லை.

மேலும், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், "தற்காலிக கொட்டகையில் நடக்கும் தொழுகையைத் தடுக்க வேண்டாம்" என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதோடு "இடிக்கப்பட்ட இடத்தில் நிரந்தரமாக பள்ளிவாசல் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அறிவித்துள்ளார்.

இதனால் தொடர்ச்சியாக நடந்த போராட்டமும் பதட்டமும் சற்று தணிந்துள்ளது.
இதற்கிடையே, "டெல்லி வளர்ச்சி ஆணையம் கையகப்படுத்திய இடத்தில் சட்ட விரோதமாக அத்துமீறி தொழுகை நடத்துவதற்கும் அப்பகுதியைக் கையகப்படுத்துவதற்கும் டெல்லி மஸ்ஜித் இமாம் புகாரி மக்களைத் தூண்டியதாகவும் இதற்கு டெல்லி முதல்வர் துணை நின்றதாகவும் இது சட்டத்தை மீறியச் செயல்" எனவும் கூறி ஜங்புரா ரெசிடென்ஸ் அஸோசியேஷன் டெல்லி முதல்வர் மற்றும் டெல்லி ஜுமா மஸ்ஜித் இமாம் புகாரி ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு புகாரொன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.இந்த இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

17.1.11

திருச்சி ஏர்போர்டில் தோலிருக்கச் சுளை விழுங்கும் திருடர்கள்

உங்கள் இந்நேரம் தளத்தில், சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் பற்றி செய்தி வெளியானதைப் படித்தேன். நான் துபையில் பணிபுரியும் கண் பரிசோதகர். (ஆப்தால்மிஸ்ட்). துபையிலிருந்து  கடந்த ஒன்றாம் தேதி இரவு பதினொன்றரை மணிக்கு, திருச்சி ஏர்போட்டில் இறங்கினேன்.
எனது லக்கேஜான டிராலி பேக்கின் ஜிப் உடைக்கப்பட்டு இருந்ததால் சந்தேகப்பட்டு  அங்கேயே பெட்டியைத் திறந்து பார்த்தபோது பொருட்கள் நான் வைத்தபடியே இருந்ததால் புகார் எதுவும் கொடுக்காமல் வீட்டுக்கு வந்து விட்டேன்.
வீட்டில் வந்து பொருட்களைப் பிரித்தபோது கண்ணாடி பிரேம் இருந்த அட்டைப்பெட்டியும் அதனுள் பிளாஸ்டில்க் பெட்டியும் இருக்க, பிரேமை மட்டும் திருடி விட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். பூட்டைத் திறக்க முயன்று முடியாமல்  ஜிப்பின் கிளிப்பை உடைத்து பேக்கிலிருந்த விலை உயர்ந்த கண்ணாடி பிரேமை ஏர்போர்டில் லக்கேஜ் ஹேண்டில் செய்யும் ஊழியர்கள் திருடி விட்டனர்.
தோலிருக்கச் சுளை விழுங்கும் திருடர்கள் திருச்சி ஏர்போர்டில் இருப்பதை வாசகர்களுக்குத் தெரிவிப்பதற்காகவே இக்கடிதத்தை உங்கள் தளத்தில் வெளியிடக் கோருகிறேன்.
நாம் பூட்டுப் போட்டு விட்டோமே என நம்பி லக்கேஜை விட்டுவிடாமல் சரியான முறையில் பொதிந்து கட்டி எடுத்துச்செல்வது பாதுகாப்பானது.
- வாசகர் பைசல் பின் நஜ்புதீன், அத்திக்கடை நன்றி இன்நேரம்.இந்த இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

நெல்லை அருகே போலீசிடம் இருந்து தப்பிய கைதி வேனில் அடிபட்டு சாவு

நெல்லை: நெல்லை அருகே போலீசிடம் இருந்து தப்ப முயன்ற கைதி வேனில் அடிபட்டு இறந்தார்.

சென்னை சோழவரம் லட்சுமியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் வினோத் குமார். எலக்ட்ரீசியன். இவர் சென்னை புழல் காவாங்கரை லால்பகதூர் தெருவைச் சேர்ந்த ரத்தினபாண்டி மகள் லட்சுமி என்பவரை கடந்த இரண்டு ஆண்டாக காதலித்து வந்தார்.

இவர்கள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு லட்சுமியின பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 5 மாதத்துக்கு முன் லட்சுமியை அழைத்து கொண்டு வினோத்குமார் ஓடினார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி லட்சுமியை மீ்ட்டனர்.

அதன்பிறகு அவருக்கு வேறு மாப்பிள்ளை பார்த்தனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை உடன்குடி ரோட்டைச் சேர்ந்த செல்வராஜ் மகன் லோகேஷ் என்பவருக்கும், லட்சுமிக்கும் கடந்த 9-12-2010ல் திருமணம் நடந்தது. ஆனால் திருமணத்தில் லட்சுமிக்கு விருப்பம் இல்லை. திருமணத்துக்கு பிறகும் வினோத்துடனான காதல் நீடித்தது. இருவரும் அடிக்கடி போனில் பேசிக் கொண்டனர்.

21-12-2010 அன்று 21 பவுன் நகைகளுடன் லட்சுமி வினோத்குமாருடன் ஓட்டம் பிடித்தார். இது குறித்து திசையன்விளை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் நாகமாணிக்கம், சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் ஆகியோர் விசாரணை நடத்தி காதல் ஜோடிகள் சென்னையில் இருப்பது தெரிந்து அங்கு சென்று அவர்களை அழைத்து வந்தனர்.

வினோத்குமார் மீது புதுப்பெண்ணை கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்களை காவலர்கள் மகேஷ், மாணிக்கவாசகம், கீதா ஆகியோர் அம்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி லட்சுமியை பெற்றோரிடம் ஒப்படைக்கவும், வினோத்குமாரை 15 நாள் காவலில் வைக்கவும் உத்தரவிட்டார். அதன்படி அவரை நாங்குநேரி சிறையில் அடைக்க போலீசார் அழைத்து வந்தனர்.

இரவு 11.45 மணிக்கு நாங்குநேரி சிறை அருகே வந்தபோது அவரது கை விலங்கை போலீசார் கழற்றினர். அப்போது அவர் திடீரென போலீஸ்காரர்களை தள்ளிவிட்டு ஓடினார். போலீசார் அவரை விரட்டிச் சென்றனர். நான்குவழிசாலை ரோட்டை கடக்கும்போது திருவனந்தபுரத்தில் இருந்து ஈரோட்டுக்கு சென்று கொண்டிருந்த கூரியர் வேன் வினோத்குமார் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.இந்த இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

தற்கொலையில் தமிழகம் 3வது இடம்: மேற்கு வங்கம் முதலிடம்

டெல்லி: கடந்த 2009-ம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 348 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும், 418 பேர் விபத்துகளில் பலியாகியுள்ளதாகவும் தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

2008-ம் ஆண்டைவிட 2009-ல் தற்கொலை 1.7 சதவிகிதமும், சாலை விபத்துகள் 7.3 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 1 லட்சத்து 27 ஆயிரத்து 151 பேர் தற்கொலை செய்துகொண்டார்கள். மேலும் 3,57,021 பேர் சாலை விபத்துகளில் பலியாகியுள்ளனர்.

நாள் ஒன்றுக்கு நாடு முழுவதும் 223 ஆண்களும், 125 பெண்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதில் தற்கொலை செய்து கொள்ளும் 125 பெண்களில் 69 பேர் இல்லத்தரசிகள். ஒரு நாளில் 73 பேர் உடல் நலக்குறைவாலும், 10 பேர் காதல் விவகாரத்தாலும் தற்கொலை செய்து கொள்வதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

முதலிடத்தில் மேற்கு வங்கம்-2வது இடம் ஆந்திரா

தற்கொலையில் 14 ஆயிரத்து 648 பேருடன் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. 14 ஆயிரத்து 500 பேருடன் ஆந்திரா இரண்டாவது இடத்திலும், 14 ஆயிரத்து 424 பேருடன் தமிழகம் மூன்றாவது இடத்திலும், 14 ஆயிரத்து 300 பேருடன் மகாராஷ்டிராவும், 12 ஆயிரத்து 195 பேருடன் கர்நாடகமும் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன.

வழக்கமாத தற்கொலையில் கேரளா முன்னணியில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் பட்டியலில் மேற்கு வங்கம், தமிழகம் மற்றும் ஆந்திரா ஆகியவை முதலிடத்திற்கு வந்துள்ளன.

நாட்டில் நடக்கும் மொத்த தற்கொலைகளில் மேற்குவங்கம், ஆந்திரா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களின் பங்கு 55.1 சதவிகிதமாகும்.

2009ல் டெல்லியில் ஆயிரத்து 477 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மொத்த தற்கொலையில் உத்தர பிரதேசத்தின் பங்கு 3.3 சதவிகிதம். 2009ல் மஹாராஷ்டிரா(2,872), ஆந்திரா (2,414), கர்நாடகா(2,282), சட்டீஸ்கர்(1,802), மத்திய பிரதேசம்(1,395) ஆகிய 5 மாநிலங்களில் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நாட்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளில் மூன்றில் இரண்டு பங்கு இந்த 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான். கடந்த 2009-ம் ஆண்டில் மொத்தம் 17 ஆயிரத்து 368 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இது 2008-ம் ஆண்டைவிட 7 சதவிகிதம் அதிகம் ஆகும்.

கடந்த 10 ஆண்டுகளாக மஹாராஷ்டிராவில் தான் அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த 2008ல் தற்கொலை செய்து கொண்ட 512 பேரில் இருந்து அதிகரித்து 2009ல் ஆயிரத்து அறுபது விவசாயிகள் தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டுள்ளனர்.

பீகார் (112), ஒரிசா (154) மற்றும் ஜாக்க்கண்டில் (164) குறைந்த பேர் தற்கொலை செய்துள்ளனர். நாட்டில் தற்கொலை காரணங்களில் 23. 7 சதவிகிதத்துடன் குடும்ப பிரச்சனை முதலிடத்திலும், 21 சதவிகிதத்துடன் உடல்நலக்குறைவு இரண்டாவது இடத்திலும் உள்ளது.

சமுதாய மற்றும் பொருளாதாரக் காரணங்களால் ஆண்களும், தனிப்பட்ட மற்றும் உணர்ச்சி காரணங்களால் பெண்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர். 2009ல் வேலையின்மையால் 18.8 சதவிகிதத்தினரும், வேலை பிரச்சனை காரணமாக 15.1 சதவிகிதத்தினரும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

நகரங்களில் சென்னைக்கு 2வது இடம்

35 பெரு நகரங்களில் நடந்த தற்கொலையில் பெங்களூர் (2,167), சென்னை (1,412), டெல்லி (1,215) மற்றும் மும்பையில் (1,051) 43. 3 சதவிகிதம் பேர் இறந்துள்ளனர்.

புனேவில் தான் விபத்துகளில் இறந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விபத்துகளை பொருத்தவரையில் சாலை விபத்தில் 37.9 சதவிகிதத்தினரும், விஷத்தால் 8 சதவிகிதத்தினரும், ரயில் விபத்துகளில் 7. 8 சதவிகிதத்தினரும், நீரில் மூழ்கி 7.7 சதவிகிதத்தினரும் மற்றும் தீ விபத்துகளில் 7 சதவிகிதத்தினரும் இறந்துள்ளனர்.இந்த இடுகை (post)தங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

Nokia Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி

உங்களுடைய கை தொலைபேசியிலும் இலும் தமிழ் website ஐ பார்க்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான், உங்களுடைய phone இல் www.opera.com இங்கு செல்லவும்.opera for phones

download opera mini 5.1 (271 KB)

download செய்த பிறகு

Address Bar இல் www. ஐ அழித்து விட்டு opera:config என டைப் செய்யுங்கள்

ஆக கடைசியில் use bitmap fonts for complex scripts என்பது No என்று இருக்கும் அதை yes என மாற்றி விட்டு save செய்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் Opera வை exit செய்து விட்டு மீண்டும் open செய்யுங்கள். தமிழ் தளம் இனி உங்களுடைய phone இல் சரியாக வேலை செய்கின்றதா என தெரிந்து கொள்ள www.thanneerkunnam.net என தேடி பார்க்கவும்      இந்த இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

16.1.11

இந்த கோமாளிகலின் கூத்தை கேட்க்க யாராவது வாரீஹலா ::தீவிரவாதி அசிமானந்தாவுக்கும் பாஜக, சங்கபரிவாரத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை -கட்காரி!

"தீவிரவாத குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றவாளியான அசிமானந்தாவுடன் பாஜகவுக்கோ சங்கபரிவாரங்களுக்கோ எவ்வித தொடர்பும் இல்லை" என பாஜக தலைவர் நிதின் கட்காரி கேரள பத்திரிக்கையாளர்களிடையே பேசும் போது தெரிவித்துள்ளார்.
கேரளத்திலுள்ள பாஜக தலைமையகத்தில் கேரள பத்திரிக்கையாளர்களுக்கு மட்டுமேயான தனிப்பட்ட சந்திப்பு ஒன்றைப் பாஜக தேசிய தலைவர் நிதின் கட்காரி நடத்தினார். இதில், "குஜராத் மாடலில் கேரளத்தை முன்னேற்றும் வகையில் திட்டங்கள் அறிவிப்பதன் மூலம் 8 சதவீதம் வரை பாஜக ஓட்டு வங்கியை அதிகரித்து, 5 எம்.எல்.ஏக்களையாவது வருகின்ற கேரள சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெறும். இதற்கென கட்சி, தேசிய நிலைபாடுகள் எடுக்கும்.
கேரளத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் தலைமை வகிக்கும் இரு கூட்டணிகளுக்கு எதிராகத் தனித்து நிற்க பாஜக முடிவு செய்துள்ளது. பாஜகவைச் சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று காங்கிரஸ் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. இது தவறான பிரச்சாரமாகும். நாட்டில் வாஜ்பாய் தலைமையிலான அரசே சிறுபான்மையினருக்கு அதிக முன்னேற்றத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. பீகார் தேர்தலில் முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சியைக் கைகழுவி விட்டதாலேயே காங்கிரஸ் இவ்வாறான தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
சிறுபான்மை மக்களோடு பாஜகவுக்கு எவ்வித விரோதமும் இல்லை. பாஜக, சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. தீவிரவாத குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றவாளியான அசிமானந்தாவுடன் பாஜகவுக்கோ சங்கபரிவாரங்களுக்கோ எவ்விதத் தொடர்பும் கிடையாது" என்று கட்காரி கூறினார்.
"குஜராத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக மோடி அரசு நடத்திய அராஜகங்களைக் குறித்து" பத்திரிக்கையாளர்கள் இடைமறித்து கேள்வி எழுப்பினர். அப்போது,
"குஜராத்தில் நடந்தவை வருந்தத்தக்க நிகழ்வுகளே. ஆனால் அதே சமயம் அதுதொடர்பாக செய்திகளில் வந்தவைகளில் மிகப்பெரும்பான்மையான சம்பவங்களும் பத்திரிக்கைகளின் தவறான மிகைப்படுத்தல்களாகும். குஜராத்தில் 30 சதவீத முஸ்லிம்களும் பாஜகவுக்கே ஓட்டளித்துள்ளனர்" என்று பதிலளித்தார்.
"தீவிரவாத்தைத் தீவிரவாதமாகவும் குற்றவாளிகளைக் குற்றவாளிகளாகவுமே காணப்படவேண்டும். ஜாதி, மதத்தின் பெயரால் பிரிவினை ஏற்படுத்தி ஓட்டு வங்கியை உருவாக்க காங்கிரஸ் முயல்கிறது" என்று அவர் மேலும் கூறினார்.                இந்த இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

சம்ஜெளதா குண்டு வெடிப்பு இந்துத்துவாவினரே காரணம்: அசீமானந்த் மீண்டும் வாக்குமூலம்!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் விரைவு இரயில் மீது 2007ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புக்கு இந்துத்துவா பயங்கரவாதிகளே காரணம் என்று சுவாமி அசீமானந்த் மீண்டும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பஞ்ச்கூலா மாஜிஸ்ட்ரேட் முன் சனிக்கிழமையன்று வாக்குமூலம் அளித்த சுவாமி அசீமானந்த் என்ற நபா குமபார் சர்கார், சம்ஜெளதா குண்டு வெடிப்பின் முக்கியக் குற்றவாளியாக இந்துத்துவா பயங்கரவாதிகளான தலைமறைவாக உள்ள ராம்ஜி கல்சங்கரா மற்றும் சந்தீப் டாங்கே ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியக் குற்றவியல் சட்டம் பிரிவு 164ஆன் கீழ், தேசிய புலணாய்வு அமைப்பால் (NIA) இந்த வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த வாக்குமூலம் சட்டப்படி சான்றாக எடுத்துக்கொள்ளத் தக்கதாகும்.

முன்னதாக சுவாமி அசீமானந்த் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் அவரைத் துன்புறுத்தி பெறப்பட்டது என்று அசீமானந்தின் வழக்கறிஞர் மன்வீர் ரதி கூறிய குற்றச்சாட்டையும் சனிக்கிழமையன்று பதிவு செய்யப்பட்ட வாக்குமூலம் மறுத்துள்ளது.

சம்ஜெளதா விரைவு ரயிலில் குண்டு வெடித்த உடனே, இது பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது என்றும் ஆரிஃப் கஸ்மானி என்பவர் இந்த குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளி என்றும் முன்னர் கூறப்பட்டது.

சம்ஜெளதா விரைவு ரயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 68 பேர் கொல்லப்பட்டனர் என்பதும் அவர்களில் பெரும்பாலோர் பாகிஸ்தானியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெண் நீதிபதியை பதவிநீக்கம் செய்தது சரியே: உச்சநீதிமன்றம்

புதுதில்லி, ஜன.16: ரயிலில் டிக்கெட் இல்லாமல் 3 முறை பயணம் செய்த பெண் நீதிபதியை பதவிநீக்கம் செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புறநகர் ரயிலில் 3 முறை டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததற்காகவும், டிக்கெட் வாங்குமாறு வலியுறுத்திய ரயில்வே ஊழியரை அச்சுறுத்தியதற்காகவும் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டான வாலவல்கர் 2000-ம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாட்டில் அதற்கு மேற்பட்டவர்கள் யாரும் இல்லை என்றும்;  நீதித்துறையில் உள்ளவர்கள் ஒவ்வொரு நடத்தையிலும் கண்ணியத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்து, அவரை டிஸ்மிஸ் செய்ததை உறுதிப்படுத்தி உத்தரவிட்டது.

அசீமானந்தின் வாக்குமூலப் பதிவை ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி!

அசீமானந்திடம் இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 164ன் கீழ் பதிவு செய்யப்படவுள்ள வாக்குமூலத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிய மனுவை தேசிய புலணாய்வு நிறுவனத்தின் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

2007ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட சம்ஜெளதா விரைவு ரயில் குண்டு வெடிப்பில் அசீமானந்த் முக்கியக் குள்ளவாளிகளில் ஒருவர் ஆவார்.

அண்மையில் அசீமானந்த் மாஜிஸ்ட்ரேட் ஒருவரிடம் அளித்ததாகக் கூறப்படும் ஒப்புதல் வாக்குமூலத்தை தன்னுடைய மனுவில் சுட்டிக்காட்டிய சண்டிகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சடின்டர் சிங், மத்திய ஆளும் கூட்டணி பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களின் பெயர்களைக் களங்கப்படுத்தவே ஒப்புதல் வாக்குமூலம் வெளியிடப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆட்சியில் இருப்பவர்கள் தங்களுக்கு விருப்பமானவற்றை சட்டத்துக்குப் புறம்பான வகையில் நிறைவேற்றிக் கொள்வதற்காக புலணாய்வு அதிகாரிகளைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் இன்றும் வழக்கறிஞர் தன்னுடைய மனுவில் கூறியிருந்தார்.

தன்னுடைய மனுவில் கூறப்பட்டுள்ளவற்றைக் கவனத்தில் கொண்டு, சுவாமி அசீமானந்திடம் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ள வாக்குமூலத்திற்கு முன் போதிய முன்னேற்பாடுகளைச் செய்து கொண்ட பிறகே வாக்கு மூலத்தை பதிவு செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் தன்னுடைய மனுவில் கோரியிருந்தார்.

மனுதாரரின் வாதங்களைக் கேட்ட, தேசிய புலணாய்வு நிறுவன சிறப்பு நீதிமன்ற நீதிபதி பஞ்ச்குலா இந்த மனுவை தள்ளுபடி செய்தார். பின்னர் நீதிபதி, சுவாமி அசீமானந்தை தன்னுடைய ஓய்வறைக்கு அழைத்துச் சென்று அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தார்

அமெரிக்க இராணுவத்தால் கந்தஹாரில் 100 மில்லியனுக்கு மேல் சேதம்

கடந்த ஆறு மாத காலமாக கந்தஹாரில் அமெரிக்க இராணுவத்தினால் வீடுகள், பண்ணைகள் முதலானவற்றுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள உடைமைச் சேதங்களின் மொத்தப் பெறுமதி சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களைவிட அதிகமாகும் என ஆப்கானிய கமிஷன் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை (13.01.2011) நிவ்யோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் இந்தப் புதிய கணிப்பீடு, இதற்கு முன்னர் அமெரிக்க இராணுவம் வெளியிட்டிருந்த புள்ளிவிபரத்திலிருந்து (1.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) பெரிதும் வேறுபடுவதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்தப் புள்ளிவிபரத்தை வெளியிட்டவர் கந்தஹார் பிராந்தியத்துக்குப் பொறுப்பாக இருந்த கமாண்டர் மேஜர் ஜெனரல் ஜேம்ஸ் டெர்ரி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிய கமிஷனின் அறிக்கையில் 900 இற்கும் அதிகமான ஆப்கானிய வீடுகள் அமெரிக்கத் துருப்பினரால் வேண்டுமென்றே இடித்துத் தகர்க்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகள், பழத்தோட்டங்கள், பெருந்தெருக்கள் என்பவற்றின்மீது இடையறாது மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள், புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் என்பவற்றினாலேயே பெருமளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கந்தஹாரின் ஆளுநர் கூறியுள்ளார்.

மேற்படி ஆப்கானிய கமிஷனின் தலைவர் முஹம்மத் ஸாதிக் அஸீஸ் கருத்துரைக்கையில், 'கந்தஹார் பிராந்தியத்தைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களில் வயல்வெளிகளை அடுத்திருந்த 800-900 வீடுகளும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மரங்களும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன என்று நம்முடைய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். 

15.1.11

பினாயக் சென்னை விடுதலை செய்! சென்னையில் HRPC மறியல், 90 பேர் கைது!!

மனித உரிமைப் போராளி மரு. பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை!
விடுதலை கோரி சென்னையில் சாலை மறியல் செய்த மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தினர்
90 பேர் கைது

மருத்துவர் பினாயக் சென்னுடைய விடுதலையைக் கோரி சாலை மறியல் செய்த மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் உட்பட 90 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய துணைத் தலைவரும், சத்தீஸ்கர் மாநிலத்தின் பொதுச் செயலருமாகிய மருத்துவர் பினாயக் சென்னுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரி மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பாக சென்னையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
06.01.2011 வியாழனன்று முற்பகல் 10.30 மணியளவில் சென்னை உயர்நீதி மன்றம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு தமிழகம் தழுவிய அளவில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
முந்தைய தினம் சென்னை மாநகரில் ஒட்டப்பட்டிருந்த மறியல் போராட்டச் சுவரொட்டிகளை  தேடித்தேடி காவல்துறை கிழித்து கிழிப்பு போராட்டம் நடத்தியது. ம.உ.பா. மைய சென்னை வழக்கறிஞர்கள் கிழிப்பு வீரர்களைக் கையும் களவுமாகப் பிடித்து கடுமையாக எச்சரித்த பின்னரே அப்பணியைக் கைவிட்டனர். மறியல் அன்று காலை முதலே சென்னை உயர்நீதி மன்ற வளாகம் முன்பு ஏராளமான போலீசு படை குவிக்கப்பட்டிருந்தது. உயர் அதிகாரிகளுக்கும் பஞ்சமில்லை. பிப்ரவரி 19 உயர்நீதி மன்ற வழக்கறிஞர் போராட்டம், கருணாநிதிக்கு ம.உ.பா. மைய வழக்கறிஞர்கள் கருப்புக் கொடி காட்டியது போன்ற கடந்த கால அனுபவங்கள் காவல் துறையினரை அங்கே குவித்து விட்டது போலும் மரு. பினாயக் சென்னை நிபந்தனையின்றி விடுதலை செய்ஆயுள் தண்டனையை ரத்து செய்! என்ற மைய முழக்கத்துடன் மறியல் போராட்டம் தொடங்கியது.
பழங்குடி மக்களுக்கு மருத்துவம் செய்த
பினாயக் சென் தேசத் துரோகியாம்,
அவருக்கு ஆயுள் தண்டனையாம்,
போபாலில் 25000 பேரைக் கொன்ற
கார்பைடு முதலாளிகளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை,
உடனே ஜாமீனாம்.
என்னடா ஜனநாயகம், வெங்காய ஜனநாயகம்,
அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸி, சட்ட விரோத சல்வாஜுடும், போலி என்கவுண்டர் சாம்ராஜ்யம்
என்று பாசிஸப் பேயாட்டமாடும் மத்திய, மாநில அரசுகளை அம்பலப்படுத்திய முழக்கங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது                                       ம.உ.பா மையத்தைச் சேர்ந்தவர்களோடு மேலும் சுமார் 50 பேர் இணையவே மறியல் போர் வலுத்தது. போலீசுக்கு இது மேலும் சங்கடத்தை ஏற்படுத்தியது. ஆர்ப்பாட்டம் நடத்தி முடித்துக் கொள்ளுங்கள், கைது செய்யவில்லை என்று போலீசு பவ்யமாகக் கேட்டுக்கொண்டது. மறியல் தொடரும், கைது செய்து கொள்ளுங்கள் என்று அறிவித்து பிராட்வே நாற்சந்தியை நோக்கி ஊர்வலம் சென்றது.
‘மருத்துவர் பினாயக்சென் ஒரு ஜனநாயகவாதி. அவர் அரசு பயங்கரவாதத்தைப் போலவே மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டத்தையும் கண்டித்தார். எனினும், அரசு பயங்கரவாதத்தின் அத்துமீறல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்களுக்கு மருத்துவ உதவியும் அளித்தார். சிறைக் கைதிகளுக்கு அரசின் அனுமதியோடு தொடர்ந்த சிகிச்சை அளித்து வந்தார். நாராயண் சன்யால் என்ற மாவோயிஸ்ட் தலைவர் சர்க்கரை நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் கைதியாக சிறையிலிருந்தார். அவருக்கு சிகிச்சை அளித்ததைப் பொறுக்காத சத்தீஸ்கர் அரசு, மாவோயிஸ்டுகளுக்கு உதவி செய்தார் என்ற பொய்யான குற்றச் சாட்டின் கீழ் சத்தீஸ்கர் மக்கள் சிறப்பு பாதுகாப்புச் சட்டம் என்ற ஆள்தூக்கிச் சட்டத்தின் கீழ் தேசத்துரோக (124A) வழக்குப் போட்டு பினாயக் சென்ஐ கைது செய்தது. இவ்வழக்கில் உச்சநீதி மன்றம் 2 ஆண்டுகள் கழித்து அவருக்கு பிணை வழங்கியது. பிணையில் வெளியே வந்த அவருக்கு உடனடியாக ராய்ப்பூர் விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது              
இந்த பாராளுமன்றம், அரசியல் சட்டம் மற்றும் இந்த ஜனநாயகத்தை நம்புகின்ற ஒரு நல்லவருக்கே இந்தக் கதியென்றால் இது மனித உரிமை மீறல்களை எதிர்த்துப் போராடுகின்றவர்களுக்கு விடப்படும் ஒரு எச்சரிக்கையே‘ என்று ம.உ.பா. மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் எஸ்.ராஜு உரையாற்றினார். சென்னை மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சுரேசு, மதுரை மாவட்டச் செயலாளர் லயனல் அந்தோணி ராஜ், துணைச்செயலாளர் வழக்கறிஞர் வாஞ்சி நாதன் ஆகியோர் உரையாற்றினர். ஒரு மணிநேர மறியல் போராட்டத்திற்கு பின் காவல்துறை அனைவரையும் கைது செய்தது. 29 வழக்கறிஞர்கள் (3 பெண் வழக்கறிஞர்கள் உட்பட) 90 பேர் கைது செய்யப்பட்டனர். பினாயக் சென் மீதான அநீதியான தண்டனையை எதிர்த்து, அவரது விடுதலையைக் கோரி மாநிலம் முழுவதும் தொடர்ச்சியான பிரச்சாரம் மற்றும் போராட்டங்களை ம.உ.பா மையம் நடத்தி வருகிறது

இந்த பதிவு ஆர்.எஸ்.எஸ் டவுசர் பாண்டிகளுக்கு சமர்ப்பணம்!!!


இந்திய அரசு, இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக காஷ்மீரில் நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. துப்பாக்கி தோட்டக்களை வெறும் கற்களால் எதிர் கொண்டு சிறுவர் முதல் பெண்கள் வரை அங்கே உயிரைத் துச்சமென மதித்து போராடி வருகின்றனர். கடந்த மதங்களில் நூற்றுக்கணக்கில் காஷ்மீர் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இந்த அநீதியை எதிர்த்து அருந்ததிராய் குரல் கொடுத்ததால் அவரையே கைது செய்வதாக மிரட்டியது இந்திய அரசு. “காஷ்மீரின் விடுதலைக்கு குரல் கொடுத்த குற்றத்திற்காக என்னைக் கைது செய்ய வேண்டுமென்றால் இந்த குற்றத்தை இலட்சக்கணக்கான காஷ்மீர் மக்கள் அன்றாடம் தெருக்களில் செய்து வருகிறார்கள், முடிந்தால் அவர்களை கைது செய்து பாருங்கள்” என்று நெற்றியடி அடித்தார் அருந்ததி ராய். அதன் பிறகு தேசபக்தி குஞ்சுகள் ஒன்றும் சவுண்டு விடக் காணோம்.

ஆனால் தற்போது பா.ஜ.க என்ற பண்டாரங்களது கட்சி பெரியதாக ஒரு சவுண்டு விட்டிருக்கிறது. அதாவது வரும் ஜனவரி 26 குடியரசு நாளில் ஸ்ரீநகர் லால் சவுக்கில் இவர்கள் இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்றப் போகிறார்களாம். “இந்திய அடக்கு முறையாளர்களே காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்” என்று உரக்க குரல் கொடுக்கும் மக்களை வெறுப்பேற்றுவதற்கு பா.ஜ.க விற்கு கிடைத்திருக்கும் ஒரு ஆயுதம்தான் இந்த கொடியேற்று தேசபக்தி. ஆயிரக்கணக்கான உறவுகளை பலிகொடுத்து விட்டு வீட்டை விட்டு தெருவில் இறங்கினால் துப்பாக்கிகளின் அடக்குமுறையில் வாழ்க்கையை கழிக்கும் அந்த மக்களின் போராட்டத்தை ஆதரிக்க வில்லை என்றாலும் இப்படி குரூரமாக குத்திக் கிழிக்க வேண்டிய அவசியம் என்ன?

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் இந்த அயோக்கியத்தனத்தை எதிர்த்து அறிக்கை விட்டிருக்கிறார். பா.ஜ.க அப்படி கொடியேற்றும் முயற்சியை செய்தால் இந்தியத் துணைக் கண்டமே தீப்பிடித்து எரியும் என்று அவர் அதை கண்டித்திருக்கிறார். மேலும் பா.ஜ.க மத்தியில் ஆண்டபோது கூட அவர்கள் இதை செய்யவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். உண்மைதான் இதிலிருந்து தேசபக்தி என்பது கூட எதிர்க்கட்சி அரசியல் நடவடிக்கைகளின்போது மட்டுமே பொங்கி வழியும் என்றாகிறது இருக்கட்டும். உடனே நமது தேசபக்திக் குஞ்சுகள் ” இந்தியாவின் தேசியக் கொடியை எங்கு வேண்டுமானலும் ஏற்றலாமே.. அது உரிமை, அதை எதிர்ப்பது தேச துரோகம்” என்று பொங்குவார்கள்.

அந்த கூ முட்டைகளுக்கு ஒன்றை புரியும் விதத்தில் சொல்வோம். தேசம் என்பது அந்த தேசத்தில் வாழும் மக்களைக் குறிக்கிறது. அப்படிப் பார்த்தால் இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் ஏழைகள் என்ற விதத்தில் வாழ்வைக் கழிக்க போராடுபவர்கள் யாரும் காஷ்மீர் மக்களின் நியாயமான கோரிக்கையை ஆதரிக்கத்தான் செய்வார்கள். ஏனெனில் இவர்களுக்கு இந்தியா என்ற நாடு எந்த வாழ்க்கையையும், விடுதலையையும் தந்துவிடவில்லை. இப்படி பெரும்பான்மை மக்களை அடக்கி ஆளும் மேட்டுக் குடி கும்பல்தான் இந்தியா என்பதை பட்டாப் போட்ட அவர்களது அப்பன் வீட்டு சொத்து போல ஆட்டம் போடுகிறது.

சரி, அவர்களது வாதப்படியே பார்ப்போம். இந்தியக் குடிமகன் என்ற ”உரிமையில்” அவர்கள் ஸ்ரீநகரில் கொடி ஏற்றட்டும். அதே போல நாமும் வரும் ஜனவரி 26 அன்று இந்தியக் குடிமகன் என்ற ”உரிமையில்” கீழ்க்கண்ட சமத்துவ தேசபக்தி நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

1. கன்னியாகுமரியிலுள்ள மீனவர்கள் தங்களது உணவான மீனை எடுத்துக் கொண்டு விவேகானந்த கேந்திரத்திற்கு சென்று சமைத்து சாப்பிடுவார்கள். ஒரு இந்தியக் குடிமகன் தனது உணவை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று சாப்பிடலாம். விவேகானந்தா கேந்திராவில் அசைவம் சாப்பிடக் கூடாது என்று எவனாவது தேச துரோகம் புரிந்தால் செருப்பு கிழியும்.

2. நெல்லை மாவட்டம் கொடியங்குளம் கிராமத்தை சேர்ந்த ஒரு தலித் பக்தர் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று கருவறையில் நுழைந்து அப்பனை பூஜை செய்வார். ஒரு இந்தியன் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சென்று நுழைந்து பூஜை செய்வதற்கு உரிமை உண்டு. மறுப்பவர்களை உடனடியாக தூக்கில் போட வேண்டும். கருணை மனு வெங்காயங்கள் எல்லாம் கிடையாது.

3. ஜனவரி 26 அன்று இந்தியர்களின் உரிமையை நிலைநாட்டும் பொருட்டு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் சபரி மலைக்கு சென்று ஐயப்பன் கோவிலில் வழிபாடு செய்வார்கள். எந்தக் கபோதியாவது தடுத்தால் துடப்பக்கட்டை பிஞ்சு போகும்.

4. 26 அன்று பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த விவசாயிகள் அருப்புக் கோட்டையில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருக்கும் நாயுடுகளிடமிருந்து நிலத்தை தேசபக்த்தியோடு கைப்பற்றி இந்தியனாகப் பிறந்த எவருக்கும் இந்தியாவில் நிலம் இருக்க வேண்டும் என்ற உரிமையை நிலைநாட்டுவார்கள். இல்லை என்று சொன்னால் இரட்டை ஆயுள் தண்டனை.

5. இந்த பொன்னாளில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருக்கும் அய்யங்கார் அக்ரகாரத்திற்கு பெண் கேட்டு சமயபுரத்தை சேர்ந்த பறையர்களாக இருக்கும் தலித்துகள் செல்வார்கள். இந்தியாவில் பிறக்கும் எவரும் எவரையும் மணப்பதற்கு உரிமை உண்டு. அதன்படி தலித்துக்களின் மண உரிமையை யாராவது மறுத்தால் அவர்களை பாக்கிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும்.

6. கோயம்புத்தூர் கொங்கு வேளாளக் கவுண்டர்களது மாளிகைகளுக்கு ஜனவரி 26 அன்று அருந்ததி இளைஞர்கள் பெண் பார்த்து மணம் முடிப்பதற்கு வருவார்கள். கூட வரும் நகர சுத்தி வேலை செய்யும் அவர்களது பெற்றோர்கள் முறைப்படி பேசுவார்கள். ” பீ அள்ளுற சக்கிலிப் பயலுக்கு கவுண்டன் பொண்ணு கேக்குதா” என்று எவனாவது சவுண்டு விட்டால் அவனது நாக்கை அங்கேயே அறுப்போம். இல்லையேல் இந்தியாவில் சமத்துவ உரிமை இல்லை என்றாகிவிடும். என்ன இருந்தாலும் இந்திய தேசபக்தி முக்கியமில்லையா!

7. நமது சிவனடியார் ஆறுமுகசாமியை சங்கர மடத்தில் சங்கராச்சாரி ஆக்குவதற்கு இதே 26 அன்று பெரும் ஊர்வலத்துடன் காஞ்சிபுரம் வருவோம். எங்கள் சாமியாரின் அர்ப்பணிப்பும், பக்தியும் அந்த பன்னாடை ஜெயேந்திரனது பொம்பிளை பொறுக்கித்தனங்களோடு ஒப்பிட முடியாது. எனவே இந்தியாவில் பிறந்த எவரும் சங்கரமடத்தில் சங்கராச்சாரியாக ஆக முடியும் என்ற உரிமையை நிலை நாட்ட அன்றைக்கு வந்தே தீருவோம். இதை சங்கரசாச்சாரி மறுத்தால் அவரை மடத்தோடு சேர்த்து இந்திய அரசு சொந்த செலவில் புல்டோசர் வைத்து இடித்து தரைமட்டமாக்க வேண்டும் !

8. இந்தியா குடியரசாக மலர்ந்த இந்த திருநாளில் சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் செம்மஞ்சேரி மக்கள் தமது இருப்பிடத்தைக்காலி செய்து விட்டு மேற்கு மாம்பலம் பார்ப்பனர்கள் வீட்டில் குடியேற வேண்டும். பதிலுக்கு மேற்கு மாம்பலம் பார்ப்பனர்களை சைதாப்பேட்டை கூவத்தின் கரையில் குடிசைகளை போட்டு குடியேற வைக்க வேண்டும். இந்த எக்ஸ்சேன்ஞ் மேளா மூலம்தான் உண்மையான சமத்துவத்தை இந்தியாவில் படைக்க முடியும். மறுப்பவர்களை காஷ்மீரிலோ அல்லது மணிப்பூருக்கோ நாடு கடத்த வேண்டும்.

9. இந்த உன்னதமான நாளில் இந்தியாவிலேயே பணக்கார வசதிகளோடு வாழும் காஷ்மீர் பண்டிட் அகதிகளை டெல்லியிலிருந்து காலி செய்து கும்மிடிப்பூண்டி முகாமில் உள்ள ஈழ முகாமிற்கு அனுப்ப வேண்டும். அதே போல அந்த முகாமில் உள்ள அகதிகளை டெல்லியில் உள்ள ஹடெக் பண்டிட்களின் குடியிருப்புக்கு அனுப்ப வேண்டும். இப்படித்தான் இந்தியாவில் உள்ள அகதிகளின் உரிமையில் கூட நாம் சமத்துவத்தை கொண்டு வரமுடியும். மறுப்பவர்கள் ராமேஸ்வரம் கடலில் இறக்கிவிட வேண்டும் அதற்கு மேல் ராஜபக்சேவின் சிங்கள கடற்படை உரிமையோடு பார்த்துகொள்ளும்.

10. பெங்களூருவில் உள்ள விஜய் மல்லையாவின் கிங் பிஷர் ஆலையை இனிமேல் அதே ஊரில் உள்ள ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி எடுத்து நடத்துவார். பதிலுக்கு மல்லையா இனி செருப்பு தைத்து தனது வாழ்க்கையை ஓட்ட வேண்டும். இந்தியாவில் உள்ள எல்லாரும் எல்லாத் தொழில்களையும் பாகுபாடு இல்லாமல் செய்யும் உரிமையை இதன் மூலம் நிரூபிக்கமுடியும். இதையெல்லாம் செய்வதற்கு துப்பிருந்தால் காஷ்மீரில் கொடி ஏற்றும் உரிமையை பற்றி பேசு !

ஏமனிலுள்ள அல்காய்தா போராளிகளே அமெரிக்காவின் தற்போதைய உடனடிக் கவலை : ஹிலாரி கிளின்டன்

சனா,ஜன.15:அல்காய்தா போராளிகள் ஏமனில் செயல்பட்டு வருவதே அமெரிக்காவின் தற்போதைய உடனடிக் கவலையென அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.

20 வருடங்களுக்குப் பின் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏமனுக்கு மேற்கொள்ளப்பட்ட முதலாவது வருகையாக இதுவாகும்.

இராணுவ ரீதியான பங்களிப்புக்கு அப்பால் ஏமனுடன் விரிவான உறவுகளைத் தொடர அமெரிக்கா விரும்புவதாக இப்பயணத்தின் போது ஹிலாரி கூறியுள்ளார்.

அத்துடன், அமெரிக்காவின் உதவி ஏமன் எதிர்நோக்கும் சமூக பொருளாதார சவால்களையும் மையப்படுத்தியிருக்குமென அவர் கூறியுள்ளார்.

2000 ஆம் ஆண்டிலிருந்து ஏமனில் அமெரிக்காவுக்கு எதிரான அதிகளவான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 2008 இல் தலைநகர் சனாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இரு தடவைகள் அல்காய்தா போராளிகளின் தாக்குதல்களுக்கு இலக்கானதுடன் கடந்த மாதமும் சானாவில் இடம்பெற்ற தாக்குதலிலருந்து சி.ஐ.ஏ. அதிகாரிகள் மயிரிழையில் உயிர்தப்பியிருந்தனர்.

இந்நிலையில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் சனாவை வந்தடைந்த ஹிலாரி கிளின்டன் அந்நாட்டு ஜனாதிபதி அப்துல்லா சலேஹ்யை சந்தித்துள்ளார். ஜனாதிபதியுடனான பேச்சுகளின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹிலாரி; இன்று ஏமன் பகுதியிலிருந்து பயங்கரவாதிகள் செற்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏமனைச் சேர்ந்தவர்கள் அல்ல. இவர்களில் சிலர் அமெரிக்கப் நபர்களாக உள்ளனர் என்பதைக் கூறுவதில் நான் கவலையடைகிறேன். எனவே இது இரு நாடுகளுக்கும் உடனடியாகக் கவலையை ஏற்படுத்தும் விஷயாமாகும்.

வறுமை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் உள்ளிட்ட காரணங்களால் உருவாகும் வன்முறைகள் தொடர்பிலும் அமெரிக்கா கவனம் செலுத்த விரும்புகிறது. இராணுவ ரீதியான உறவு மட்டும் போதுமானதன்று. விரிவான அடிப்படையில் பேச்சுகளை நடத்த விரும்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

அல்காய்தா போராளிகளை ஒழிக்கும் முகமாக கடந்த இரு வருடங்களாக ஏமனுக்கு அமெரிக்கா அளித்து வரும் உதவிகள் 100 வீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி:பி.பி.சி
நன்றி: பாலைவணதூது

மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் நடந்த ஜும்ஆ தொழுகை

புதுடெல்லி,ஜன.15:டெல்லியில் காங்கிரஸ் அரசின் கரசேவையினால் இடிக்கப்பட்ட மஸ்ஜிதில் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஜும்ஆ தொழுகை நடந்தது.
டெல்லி இமாம் அஹ்மத் புகாரி ஜும்ஆ தொழுகைக்கு தலைமை தாங்கினார்.

டெல்லி நிஸாமுத்தினூக்கு அருகிலுள்ள ஜங்புராவில் பழமையான நூர் மஸ்ஜித் கடந்த புதன்கிழமை டெல்லி வளர்ச்சி ஆணைய அதிகாரிகளால் அநியாயமாக இடித்துத் தள்ளபட்டது.

மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் ஜும்ஆ தொழுகை நடத்தப்படும் என முன்னரே டெல்லி இமாம் அஹ்மத் புகாரி அறிவித்திருந்தார். மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் தொழுகைக்கு அனுமதிப்பதாகவும், மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்த டி.டி.ஏவிடமிருந்து வாங்கி மீண்டும் மஸ்ஜிதை புனர் நிர்மாணிக்க வக்ஃப் போர்டிடம் ஒப்படைக்கப்படும் எனவும் டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் டெல்லி இமாமை சந்தித்து உறுதியளித்திருந்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்பால்ரெட்டி ஆகியோருடன் ஆலோசனை நடத்தியபிறகு ஷீலா தீட்ஷித் இந்த உறுதியை அளித்தார்.

டெல்லியில் நேற்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால் நிஸாமுத்தீன் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கடைகள் மூடிக்கிடந்தன. போலீஸ் ஸ்டேசனுக்கு முன்னாலும் மக்கள் ஜும்ஆ தொழுகையை நடத்தினர். தொடர்ந்து ஊர்வலமாக மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்திற்கு சென்றனர். வழியில் போலீஸ் தடுத்தபொழுதிலும் அதனை மீறிய மக்கள் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் கூடினர். ஆனால், போலீசார் மஸ்ஜித் இடிக்கபட்ட இடத்திற்கு மக்களை அனுமதிக்கவில்லை. தொடர்ந்து டெல்லி இமாம் அவ்விடத்திற்கு வருகைதந்தார்.

மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் தொழுகை நடத்தப் போவதாகவும், போலீசார் தடுக்கக்கூடாது எனவும் டெல்லி இமாம் கூறினார். தொடர்ந்து, போலீசார் தடைக் கட்டைகளை அப்புறப்படுத்தினர். இடிக்கப்பட்ட மஸ்ஜிதின் சிதிலங்கள் மீது ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற ஜும்ஆ தொழுகை நடந்தேறியது.

தொழுவதற்குத் தேவையான தொழுகை விரிப்புகளை அருகிலுள்ள வீடுகளிலிருந்து பெண்கள் கொண்டுவந்துக் கொடுத்தனர். அதேவேளையில் பெரும் மக்கள் திரள் போலீஸ் ஸ்டேசன் முன்னால் கூடியிருந்தது. காங்கிரஸின் ரகசிய திட்டம்தான் மஸ்ஜித் இடிக்கப்பட்ட நிகழ்வு என டெல்லி இமாம் குற்றஞ்சாட்டினார்.

பின்னர் டெல்லி இமாம் தலைமையில் ஜங்புராவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக புறப்பட்டபொழுது போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து நடந்த மோதலில் ஒரு டி.டி.ஏ வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டது. மஸ்ஜித் இடிக்கப்பட்ட சம்பவம் துயரமானது என சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் தெரிவித்தார். மஸ்ஜித் புனர் நிர்மாணிக்க முஸ்லிம்களுடன் போராடுவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்          நன்றி;கே.என்.ஆர் டைம்ஸ்            

கமல்ஹாசனுக்குப் பகிரங்கக் கடிதம் மன்மதன் அம்பும், மதிகெட்ட வம்பும்


அன்புள்ள கமலஹாசன் அவர்களுக்கு,

தங்கள் மீது, ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் பொழியப்படவும், தாங்கள் நேர்வழி பெறவும், பிரார்த்தித்துக் கொள்கிறோம்.(மாற்றுக் கருத்துடையோர்க்கும் பிரார்த்திப்பது எங்கள் மரபு) வாசிப்பு வாசனையற்ற எத்தனையோ திரைக்கூத்தாடிகளுக்கிடையே, ஆழமான வாசிப்பாளராக, மனிதநேயராக, மதமாச்சரியம் அற்றவராக, சாதி கடந்தவராக, தங்களை அடையாளப் படுத்திக் கொள்கிறீர்கள். சினிமா, என்ற சக்திவாய்ந்த ஊடகத்தின் உச்சத்தில் இருக்கும் தாங்கள், சிதைக்கப்பட்டு, வதைக்கப்பட்டு, வாழ்வுரிமையே கேள்விக்குறியாக்கப்பட்டு வரும் ஒரு சிறுபான்மை சமுதாயத்தை மேலும், சிதைப்பதிலும், சீண்டுவதிலுமா உங்கள் கலைஞநானத்தையும், ஆற்றலையும் காட்ட வேண்டும்.


முஸ்லிம்கள் மீதான ஊடக வன்முறையின் உச்சகட்டமாக, உங்களது ‘உன்னைப்போல் ஒருவன்’ படம் அமைந்தது. தங்களை நேரில் சந்தித்து எங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தோம். சுமார் ஒரு மணிநேரம் நான் முஸ்லிம் எதிர்ப்பாளன் அல்ல என்று விளக்கினீர்கள்

‘கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த நன்றொன்று உள்ளக் கெடும்‘ (கொல்கிற அளவுக்குக் கொடுமை செய்தவரானாலும், அவர் செய்த ஒரு நன்மையை நினைத்துப் பார்த்து, மன்னிக்க வேண்டும், மறக்க வேண்டும், என்பார் வள்ளுவர்.)

‘உன்னைப்போல் ஒருவன்’ எங்களைக் காயப்படுத்திய படம் என்பது தான் இப்போதும் எங்கள் நிலை. ஆனால், பாபரி மஸ்ஜித் இடிப்பு நேரத்தில், மனிதநேயத்தோடு தாங்கள் வெளிப்படுத்திய கருத்துகளையும், மும்பை கலவரத்தின்போது அன்றைய பிரதமர் நரசிம்மராவை நேரில் சந்தித்து துணிவோடு குற்றம் சாட்டியதையும், நாங்கள் நினைத்துப் பார்த்தோம், நீங்களும் அதை நினைவூட்டினீர்கள்.

இப்போது, முதல்வர் கலைஞரின் பேரன் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் ‘மன்மதன் அம்பு’ வந்துள்ளது. உங்கள் அம்பு சரியாகவே பாய்ந்துள்ளது. அது தந்த வலிகளே இந்தக் கடிதம்..

‘அம்பு’ படத்தில் வாகன விபத்தில் இறந்துபோன உங்கள் முதல்மனைவி (ஜுலியட்) பற்றி, கதாநாயகியிடம் சொல்லும்போது, காஷ்மீரில் ‘லஷ்கர் இ தொய்பா’ பயங்கரவாதிகள் அந்தப் பெண்ணைக் கடத்தி வைத்திருந்ததாகவும், அவரை மீட்பதற்கு ராணுவ மேஜரான நீங்கள் இரண்டு வீரர்களை பலி கொடுத்ததாகவும் கூறுகிறீர்கள்.

என்ன சொல்ல வருகிறீர்கள் கமல்?

காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் வெளிநாட்டிலிருந்து அழகான பெண் வந்தால் கடத்தி வைத்துக் கொள்வார்கள். பெண்களைப் பெரிதும் மதித்து, துதித்துப் பெண்ணியம் போற்றும் (?) நமது பாதுகாப்புப் படையினர் கடத்தப்பட்டப் பெண்ணை உயிரைப் பணயம் வைத்து மீட்பார்கள்? என்று தானே சொல்ல வருகிறீர்கள்.

உங்கள் மீட்பர்களின் லட்சணத்தை உண்மை யிலேயே அறிந்துள்ளீர்களா? கமல்.

பேரா.அ.மார்க்ஸ், எழுதியுள்ள ‘காஷ்மீர் என்னதான் நடக்கிறது அங்கே, என்ற நூலைப் படியுங்கள்.

நட்சத்திர விடுதியில் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து கொண்டு எழுதப்பட்ட எழுத்தல்ல அது, திகிலூட்டப்பட்ட காஷ்மீருக்கு, உண்மை அறியும் குழுவோடு நேரில் சென்று பார்த்த உண்மைகள் அவை.

காஷ்மீரில் தொடரும் துயரம் என்ற நூலையும் படியுங்கள்.

அருந்ததிராய், பேரா.கீலானி உள்ளிட்ட மனிதஉரிமைப் போராளிகளின் காஷ்மீர் குறித்த கருத்துகளை வாசியுங்கள்.

‘காஷ்மீரில் ஷோபியான் என்ற இடத்தில் முஸ்லிம் இளம்பெண்களை உங்கள் மீட்பர்கள் பாலியல் வன்மம் செய்து கொன்ற செய்தி எல்லா ஏடுகளிலும் தொடர்ந்து வெளிவந்ததே...

கலைஞானி அவர்களே.. கண்ணுறவில்லையா?

காஷ்மீரில், குறைந்தபட்சத் தண்டனையே மரண தண்டனைதான் என்பதையும், காஷ்மீரியாகப் பிறந்துவிட்டால், வாழ்க்கையே ஒரு தண்டனைதான் என்பதையும், இதற்கெல்லாம் காரணம் அந்த மீட்பர்கள் என்பதையும் அறியாமலா இருக்கிறீர்கள்? நிச்சயமாக அறியாமல் இருக்க மாட்டீர்கள் பிறகு ஏன்.?

லஷ்கர் இ தொய்பாவை திட்டினால் உங்களுக்கேன் வருத்தம்? என்று நீங்கள் கேட்கலாம். பாகிஸ்தான் என்ற நாசகர ஆக்ரமிப்பு சக்தியின் ஆதரவோடு காஷ்மீரில் இயங்கும் எந்த இயக்கத்தையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். அதே நேரத்தில், தங்களது வாக்களிக்கப்பட்ட சுயநிர்ணய உரிமைக்காக உயிரைப் பணயம் வைத்துப் போராடிவரும் காஷ்மீரிகளை கொச்சைப்படுத்தவும் மாட்டோம்.

காஷ்மீரி என்றாலே அவன் ‘லஷ்கர் இ தொய்பா’வைச் சேர்ந்தவன் என்று முத்திரைக் குத்திதான் ‘மீட்பர்களின் துப்பாக்கிகள்’ அந்த அப்பாவியைப் பலியிடுகின்றன. காஷ்மீர்ப் பெண்களை அன்றாடம் சூறையாடுகின்றன.

காஷ்மீரிகளின் வீடுகளை இடித்துத் தகர்க்கின்றன. சந்தேகத்தின் பேரில் சிறுவர்களையும் கொன்று குவிக்கின்றன.

காஷ்மீரிகளை, இந்த மீட்பர்கள் பொது இடங்களின் வைத்து பெண்களைப் பாலியல் வன்முறை செய்தாலும், அப்பாவிகளைப் படுகொலையே செய்தாலும் யாரும் கேட்க முடியாது.

மீட்பர்களை இப்படி ரட்சிக்கிறது ராணுவத்திற்கான சிறப்பு அதிகாரச் சட்டம். மாநில அரசு கூட இந்த சீருடைப் பயங்கர வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. மத்திய அரசின் அனுமதி பெற்றுத்தான் நடவடிக்கை எடுக்க முடியும். சீருடைக் கொடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அனுமதி அளிப்பதில்லை. 2009ம் ஆண்டு மட்டும் 350 முறை காஷ்மீர் மாநில அரசால் அனுமதி கேட்கப்பட்டு மத்திய அரசால் மறுக்கப்பட்டுள்ளது. இந்த அவலங்களையெல்லாம், சக்திவாய்ந்த ஊடகத்தின் சகலகலா வல்லவர்கள் வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

ஃபாரன்ஹீட் 9/11 போன்ற படம் எடுக்கும் கலைஞர்களும், ஹிட்லரையே மிரளவைத்த திரைக்கலைஞர் சார்ளி சாப்ளினும் தமிழகத்தில் இல்லையே...

மத்திய அமைச்சராக இருந்த முப்தி முகமது சயீதின் மகள் கடத்தப்பட்டதைப் பின்புலமாகக் கொண்டு உங்கள் மருமகன் மணிரத்னம் ‘ரோஜா’ படம் எடுத்தார். காஷ்மீரிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி பொதுப் புத்தியில் பதிய வைத்தார்.

அன்றாடம் நூற்றுக்கணக்கான காஷ்மீர் இளம் பெண்கள் பாதுகாப்புப் படையால் கடத்தப்பட்டு, சிதைக்கப்படுகிறார்களே உங்கள வர்கள் அதைப்படமாக எடுத்த துண்டா?

நீங்கள் கறுப்பு சட்டைக்காரராகவும், இருக்கிறீர்கள், சமயத்தில் சிவப்புச் சிந்தனையும் பேசுகிறீர்கள். கறுப்பு, சிவப்போடு சேர்ந்தும், காட்சி தருகிறீர்கள், படமும் தருகிறீர்கள்.

யாரும் விரும்பிய வண்ணத்தை எங்கள் மீது பூசுவதற்கு வசதியாக நாங்கள் வெள்ளையாக, வெள்ளந்தியாக நிற்கிறோம்.

குடிபோதையின் உச்சத்தில் மகன் அம்மாவுக்கு தொலைபேசி.. நீங்கள் ஜீனியஸ், நாஸ்ட்ரா டாமஸ், கருநாக்கு தேவதை என்கிறான். அதற்கு அம்மா, “பார்ல இருக்கியா, போறுண்டா சாப்டது, வீசிங் வந்துரும், ஆத்துக்கு வந்துடு” என்கிறார்.

சிவப்புச் சிந்தனையாளரான மாவோ, சீனாவில் செய்தது கலாச்சாரப்புரட்சி, அன்பே சிவம் படத்தில் காம்ரேடாக ‘சிவப்புச் சிந்தனை’ பேசிய நீங்கள் ஒரு புதிய கலாச்சார புரட்சியைத் தமிழகத்தில் விதைக்கிறீர்கள்...

‘கட்டிக்கப் போறவனுக்குக் கடுக்காக் கொடுக்கும் பெண்களால்தான், சுனாமி, பூகம்பம், சூறாவளியெல்லாம், வருதுன்னு, இரான் நாட்டு இமாம் சொன்னதாக, உங்கள் குடிகாரக் கதாநாயகன் பேசுகிறார், ‘இதையே தான் எங்க அம்மாவும் சொன்னாங்க” என்கிறான் நண்பன், ‘உங்க அம்மா இமாமா? என்கிறார் கு.கா. ஹீரோ....

இரான் நாட்டு எந்த இமாம் இப்படி சொன்னார் என்பது கதை வசனம் எழுதிய கலைஞானிக்கே வெளிச்சம். இரான் நாட்டு இமாம் அல்ல, ஈஞ்சம்பாக்கத்து இமாமைக் கேட்டால் கூட ‘குடிப்பழக்கம் தான் பாவங்களின் ஊற்றுக்கண்” என்பார்.

இரான் நாட்டு இமாமின் கருத்தையெல்லாம் கவனித்து எழுதிய கலைஞானி(?)க்கு காஷ்மீர் மக்களின் கண்ணீரையும், கதறலையும், கண்டு கொள்ள முடியவில்லை என்பதுதான் வேதனை.

உங்களிடம் மானுடநேயத்தை விட ராணுவ நேயம் விஞ்சி நிற்கிறது. ஜெய்ஹிந்த் கொலைகாரத் துப்பாக்கிகள் நடத்துகிற ஷுட்டிங்காக இருந்தாலும், கலைகாரக் கேமராக்கள் நடத்துகிற ஷுட்டிங்காக இருந்தா லும், விளைவு என்னவோ ஒரே மாதிரிதான் இருக்கிறது...
-ஹாஜாகனி
நன்றி : கே.என்.ஆர் டைம்ஸ்

14.1.11

உள்நோக்கத்தோடு செயல்படுகிறது பா.ஜ: காஷ்மீர் முதல்வர் கோபம்

ஸ்ரீநகர் : காஷ்மீரில் பா.ஜ.,வினர் தேசியக்கொடியை ஏற்றக் கூடாது என்று அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். பா.ஜ.,வின் இளைஞர் அணியினர் நேற்று முன்தினம் கோல்கட்டாவில், "ராஷ்டிரிய ஏக்தா யாத்திரை'யை துவங்கியுள்ளனர். பல்வேறு மாநிலங்கள் வழியாக 3,037 கி.மீ., தூரம் பயணம் செய்து, 26ம் தேதி காஷ்மீரை சென்றடையும் யாத்திரைக் குழுவினர், அங்கு லால் சவுக் பகுதியில் ஊர்வலமாகச் சென்று தேசியக் கொடியை ஏற்றுகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: காஷ்மீரில், மீண்டும் காஷ்மீரில் பிரச்னையை உருவாக்க புறப்பட்டுள்ளனர். இங்கு மீண்டும் அமைதியின்மையை உருவாக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, இதை செய்கின்றனர். காஷ்மீரில் நிலவி வந்த பதட்டமான சூழ்நிலையை, கடுமையான முயற்சிகளுக்குப் பின்னர் தணித்துள்ளோம். அதை குலைக்கும் நடவடிக்கைகளை பா.ஜ.,வினர் நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஒமர் அப்துல்லா கூறினார்.

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கை மறு விசாரணை நடத்த கோர்ட் அனுமதி

மும்பை;ஜன;13-
 
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் இந்து சாமியார் அசிமானந்தாவுக்கு தொடர்பு இருப்பதாக சிபிஐ கோர்ட்டில் தெரிவித்தது. மேலும் இந்த வழக்கை மறுவிசாரணை நடத்த அனுமதிக்ககோரியது, சிபிஐயின் இந்த கோரிக்கை கோர்ட் ஏற்று கொண்டது.
 
மலேகானில் 2006 ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் 37 பேர் பலியாயினர் மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கோர்ட் அனுமதி அளித்ததை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது

புற்று நோயை குணப்படுத்தும் ஒட்டக பால் !

துபாய், ஜன 13-
 
அரபு நாட்டு பயோ டெக்னாலஜி நிறுவனம் புற்று நோய் மருத்துவம் பற்றி ஆய்வு நடத்தியது. பல்வேறு அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
 
அவர்கள் ஒட்டகம் பால் மற்றும் சிறுநீரில் இருந்து ஒரு வகை மருந்தை தயாரித்தனர். எலிக்கு புற்று நோயை ஏற்படுத்தி இந்த மருந்தை அந்த எலிக்கு செலுத்தினார்கள். 6 மாதமாக மருந்து கொடுக்கப்பட்டது. இதில் எலிக்கு புற்று நோய் முற்றிலும் குணமாகிவிட்டது.
 
எலி உடலில் இருந்த புற்று நோய் செல்கள் அனைத்தும் அகன்று வீரியத்துடன் கூடிய புதிய செல்கள் உருவாகி உள்ளன. இப்போது இந்த எலி மற்ற ஆரோக்கியமான எலிகளை போல துள்ளி குதித்து ஓடுகிறது.
 
ஒட்டகம் பால்- சிறுநீரில் இருந்து தயாரான இந்த மருந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமாக உருவாக்குகிறது. இது பாதிக்கப்பட்ட புற்று நோய் செல்களை அளித்து விட்டு புதிய செல்களை உருவாக்குகிறது.
 
இந்த மருந்தால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படு வது இல்லை. எனவே மனிதர் களுக்கும் இந்த மருந்தை பயன்படுத்தி புற்று நோயை குணப்படுத்தி விடலாம் என விஞ்ஞானிகள் கூறி இருக்கிறார்கள். அடுத்த கட்டமாக இப்போது மனிதர்களுக்கு இந்த மருந்தை செலுத்தி ஆய்வு செய்ய இருக்கிறார்கள்.
 
இதிலும் வெற்றி ஏற்பட்டால் மருந்து பயன்பாட்டுக்கு வந்து விடும்.   உலகில் ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் பேர் புற்று நோய்க்கு பலியாகிறார்கள். அரபு நாடுகளில் இதய நோய் மற்றும் தொற்று நோய் அடுத்து புற்று நோயால்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன