ஈரானில் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு கடத்தப்பட்ட எப்.பி.ஐ உளவுப்பிரிவு ஏஜென்ட்டின் வீடியோவை கடத்தல்காரர்கள் வெளியிட்டுள்ளனர். அதில், அமெரிக்க அரசு தன்னை மீட்க கடத்தல்காரர்களின் நிபந்தனையை நிறைவேற்றும்படி கேட்டுள்ளார். அமெரிக்க உளவுப் பிரிவு எப்.பி.ஐ.யில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ராபர்ட் லெவின்சன். வயது 63. ஈரானில் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு இவரைமர்ம கும்பல் கடத்தியது.
அவரை மீட்க அமெரிக்க படைகள் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. அவர் எங்கிருக்கிறார், யார் கடத்தியது, என்ன நிபந்தனைகள் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. இந்நிலையில், ராபர்ட்டின் குடும்பத்தினருக்கு கடந்த மாதம் கடத்தல்காரர்கள் வீடியோ ஒன்று அனுப்பி உள்ளனர். அந்த வீடியோவை ராபர்ட்டின் குடும்பத்தார் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோவில் ராபர்ட் கீழே உட்கார்ந்துள்ளார். உடல் இளைத்து மிகவும் சோர்வாக இருக்கிறார். ஒரு கான்கிரீட் சுவருக்கு கீழ் இருக்கிறார். என் அன்பான மனைவி கிறிஸ்டின், மகன், பேரன்களே, எனக்கு உடல்நலம் சரியில்லை. சர்க்கரை நோய்க்கு மருந்து இல்லாமல் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறேன்.
என்னை கடத்தல்காரர்கள் துன்புறுத்தவில்லை. நன்றாக பார்த்துக் கொள்கின்றனர். எனினும், குடும்பத்துடன் என்னை சேர்க்க அமெரிக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடத்தல்காரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி என்னை மீட்க வேண்டும் என்று வீடியோவில் கண்ணீர் விட்டு ராபர்ட் அழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக