பென்காஸி, ஆக. 6- நேட்டோ படைத் தாக்குதலில் லிபிய இராணுவப் படைத் தளபதிகளில் ஒருவரான கடாபியின் 7வது மகன் காமிஸ் உள்பட 32 பேர் பலியாகினர் என்று போராளிகளின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
லிபியாவில் கடந்த 41 ஆண்டுகளாக சர்வாதிகாரியாக இருப்பவர் கடாபி. அவரைப் பதவி விலக வலியுறுத்தி ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை அடக்கும் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு ஐ.நா.சபையும், உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கடாபி பதவி விலகும்படி அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் நேட்டோ படை நடத்திய தாக்குதலில் கடாபியின் 7-வது மகன் காமிஸ் உள்பட 32 பேர் பலியாகியுள்ளனர்.
ஜ்லிடானில் உள்ள கடாபியின் நம்பிக்கைக்கு பாத்திரமான படைகள் மீது நேட்டோ படை தாக்குதல் நடத்தியது என்று போராளிகளின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் குறித்த எதுவும் தெரிவிக்க முடியாது. நாங்கள் வானில் இருந்து தான் தாக்குதல் நடத்தினோம். தரையில் எங்கள் படையில்லை. ஆனால் தாக்குதல் குறித்து கண்டறிய முயற்சித்து வருகிறோம் என்று நேட்டோ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திரிபோலி அரசு எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் காமிஸ் கடாபி இறந்துவிட்டதை மட்டும் உறுதிபடுத்தியுள்ளது.
கடாபியின் 7-வது மகன் காமிஸ் லிபியா ராணுவத்தின் 32-வது பிரிகேடின் தலைவராக இருந்தார். போராளிகள் வசம் உள்ள மிஸ்ராடா மற்றும் திரிபோலிக்கு இடையேயுள்ள ஜ்லிடானில் இந்த படை போராடி வந்தது. காமிஸின் மரணம் இந்தப் படைக்கு பேரிழப்பாகும்.
கடந்த ஏப்ரல் 11-ம் தேதி நேட்டோ படை நடத்திய தாக்குதலில் கடாபியின் இன்னொரு மகன் சைப் அல் அராப் மற்றும் 3 பேரக்குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக