மதுரை, மே.24- ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் தொலைதொடர்பு நிறுவனத்திற்கு விற்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு ஏர்செல் நிறுவனத்தை வெளிநாட்டு வாழ் இந்தியரான சிவசங்கரன் என்பவர் நடத்தி வந்தார்.
இந்த ஏர்செல் நிறுவனத்திற்கு அலைக்கற்றை உரிமம் வழங்க அப்போதைய தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் மறுப்பு தெரிவித்ததாக பரவலான கருத்து இருந்து வருகின்றது. இதனால் ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் என்ற தொலைதொடர்பு நிறுவனத்திற்கு விற்க சிவசங்கரன் முடிவு செய்தார்.
அதன்படி கடந்த 2006-ம் ஆண்டு ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் விலைக்கு வாங்கியது. இலங்கை தமிழர் வம்சாவழியைச் சேர்ந்த, மலேசிய தொழிலதிபரான டி.அனந்தகிருஷ்ணன் என்பவர் மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸை நிர்வகித்து வருகிறார். கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டுவரை உள்ள 6 ஆண்டுகளில் தொலைதொடர்புத் துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இதன் அடிப்படையில் அடுத்து முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) ஒன்றை வரும் ஜூலை மாதம் முன்பு, அதாவது உச்ச நீதிமன்றத்தின் கோடை விடுமுறை காலம் முடிந்து மீண்டும் திறந்த பிறகு தாக்கல் செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த முதல் தகவல் அறிக்கையில் தான் அப்போதைய தொலைதொடர்புத் துறை அமைச்சரும் இப்போதைய ஜவுளித்துறை அமைச்சருமான தயாநிதி மாறனின் பெயரை சேர்க்க சிபிஐ முடிவு செய்துள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதே முதல் தகவல் அறிக்கையில் மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் கம்பெனியின் பெயரையும் சேர்க்க சிபிஐ திட்டமிட்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக