அருணாசல பிரதேச முதல்வர் டோர்ஜிகாண்டு சென்ற ஹெலிகாப்டர் மாயமாகி 30 மணி நேரத்தை கடந்து விட்ட தருணத்தில் எவ்வித சிறிய சமிக்ஞையும் கிடைக்காததால் அவர் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியிருக்கும் என அஞ்சப்படுகிறது. மோசமான வானிலை காரணமாக டோர்ஜிகாண்டுவும் அவரோடு பயணித்த 4 பேரும் விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கக்கூடும் என்ற யூகங்கள் கிளம்பியுள்ளன. நேரம் அதிகரிக்க, அதிகரிக்க மீட்பு படையினர் இந்திய விமானப்படை, மற்றும் ராணுவத்தினர் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஹெலிகாப்டரை கண்டுபிடிக்கும் பணியில் பதட்டத்துடன் ஈடுபட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாக தேடுதல் வேட்டை பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர்கள் விரைவு : அருணாச்சல் முதல்வர் டோர்ஜி கண்டுவே தேடும் பணியை கண்காணிக்க மத்திய அமைச்சர்கள் முகுல் வாஸ்நிக், வி நாராயணசாமி டில்லியிலிருந்து இடாநகருக்கு செல்லவுள்ளதாக டில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதி- பிரதமர் கவலை: டோர்ஜி காண்டு நிலை குறித்து ஜனாதிபதி பிரதீபாபாட்டீல், காங்.,தலைவர் சோனியா உள்ளிட்டோர் கவலை தெரிவித்துள்ளனர். இவர் மாயமானது தொடர்பாக மாநில கவர்னரை தொடர்பு கொண்டு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் விசாரித்தார். டோர்ஜி விரைவில் நலமாக திரும்புவார் என ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்துள்ளளார். பிரதமர் மன்மோகன்சிங், காங்., தலைவர் சோனியா மற்றும் சபாநாயகர் மீராகுமார் உள்ளிட்ட பிரமுகர்கள், டோர்ஜிகாண்டு நிலை குறித்து விவரம் கேட்டவண்ணம் உள்ளனர்.
மாநில தலைமைசெயலர் தலைமையில் உயர்நிலை கூட்டம் அவசரமாக கூடிமுதல்வர் டோஜி காண்டுவை தேடும் பணியை முடுக்கி விடவும், இது தொடர்பான அடுத்தக்கட்ட பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. மாயமான ஹெலிகாப்டரை தேடி கண்டு பிடிக்க மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டு கொண்டதின்படி இஸ்ரோவும் ஒரு புறம் களம் இறங்கியுள்ளது.
ஹெலிகாப்டர் பூடானில் தரையிறங்கியதாகவும், முதல்வர் டோர்ஜி காண்டு உட்பட அவருடன் பயணித்த அனைவரும், பத்திரமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், நேற்று மாலை திடீரென இத்தகவல் மறுக்கப்பட்டது. ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டதா இல்லையா என்பதிலும் குழப்பம் நீடித்தது.
முதல்வர் டோர்ஜி காண்டு. நேற்று ( சனிக்கிழமை) காலை 9.56 மணியளவில், தவாங் என்ற இடத்தில் இருந்து தலைநகர் இடாநகருக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அவருடன், பாதுகாப்பு அதிகாரி, உறவுப் பெண் ஒருவர் மற்றும் இரு கேப்டன்கள் என, மொத்தம் ஐந்து பேர் பயணித்தனர். சரியாக, 11.30 மணிக்கு அவர் பயணித்த ஹெலிகாப்டர் இடாநகரில் தரையிறங்கி இருக்க வேண்டும். ஆனால், ஹெலிகாப்டர் புறப்பட்ட 20 நிமிடங்களில், செலாபாஸ் என்ற இடத்தின் மீது பறந்து கொண்டிருந்த போது, அதன் அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன.
ஹெலிகாப்டர் தரை இறங்கியதா ? : இந்நிலையில், முதல்வர் டோர்ஜி காண்டு பயணித்த ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், பூடான் நாட்டு எல்லையில் டபோரிஜோ என்ற இடத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும், முதல்வர் உட்பட ஐந்து பேரும் பத்திரமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய அருணாச்சல பிரதேச துணை போலீஸ் டி.ஜி.பி., ராபின் ஹிபு, “”காணாமல் போன ஹெலிகாப்டர் பற்றியும் அதில் பயணித்த முதல்வர் உட்பட ஐந்துபேர் பற்றியும் எந்தத் தகவலும் இல்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்கிறது,” என்றார்.
பூட்டான் அரசும் எஸ்.எம். கிருஷ்ணா பேச்சு: டோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டரை பூட்டான் எல்லைக்குபட்ட பகுதியில் தேடும் பணியில் ஈடுபடுமாறு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் அந்நாட்டு பிரதமரிடம வேண்டுகோள் விடுத்தார். இதற்கு அந்நாட்டு அரசு முழு உதவி செய்யும் என உறுதிஅளித்து அந்நாட்டு படையினரும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் நிலை என்ன என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இந்திய ராணுவத்தில் உளவுப் பிரிவில் பணியாற்றிய டோர்ஜி காண்டு, 2007 ஏப்ரல் 9ம் தேதி, அருணாசல பிரதேச மாநிலத்தின் ஐந்தாவது முதல்வராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அருணாசல பிரதேசத்தில் இதுவரை நடந்த விபத்துக்கள்:
கடந்த ஏப்19 ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.
2010 ம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ம் தேதி நடந்த விபத்தில் 12 பேர் பலியாயினர்.
2009 ம் ஆண்டில் ஜூன் மாதம் 10 ம் தேதி நடந்த விபத்தில் 13 பேர் பலியாயினர்.
2001 ம் ஆண்டில் மே மாதம் 11 ம் தேதி மாநில அமைச்சர் உள்பட 7 பேர் பலியாயினர்.
1997 ம் ஆண்டில் நவம்பர் மாதம் நடந்த விபத்தில் மாநில பாதுகாப்புதுறை அமைச்சர் , ராணுவ மேஜர் ஜெனரல் உயிரிழந்தனர்.
சமீபத்திய விபத்துக்களில் முக்கியஸ்தர்கள் பலி விவரம் :
2009 செப்டம்பர் மாதம் ஆந்திரமுதல்வர் ராஜசேகரரெட்டி மரணம் .
2005 உத்திரபிரதேச மாநிலத்தில் அரியானா அமைச்சர்கள் 2பேர் இறந்தனர்.
2002 ம் ஆண்டு மார்ச் மாதம் 3 ம் தேதி ஆந்திர மாநிலம் தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த பார்லி., சபாநாயகர் பாலயோகி மரணம் .
2002 ம் ஆண்டு மார்ச் மாதம் 3 ம் தேதி ஆந்திர மாநிலம் தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த பார்லி., சபாநாயகர் பாலயோகி மரணம் .
2001 ம் ஆண்டு உ.பி., மாநிலம் மைன்புரியில் பா.ஜ.,வை சேர்ந்த மாதவராவ் சிந்தியா மரணம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக