இதயம் நொறுங்கிய விவசாயியைப் போன்று,
அறுபது ஆண்டு கால இழுவைக்குப்பின் இதோ சட்டத்தின் கதவு எங்களுக்காக திறக்கவிருக்கிறது. அதில் நீதியின் குரலும் எதிரொலிக்கும். அதையொட்டி, எங்களின் இறைவனை தொழும் இடமான பாபரி மஸ்ஜிதில் எங்களின் 'அல்லாஹு அக்பர்' எனும் குரலோசையும் விண்ணை முட்டும் என நம்பிக்கையோடு காத்திருந்த முஸ்லிம்களுக்கு, நாளை வழங்கப்படுவதாக இருந்த பாபர் மஸ்ஜித் குறித்த தீர்ப்பை செப்டம்பர் 28ம் தேதி வரை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஒரு வகை ஏமாற்றமே.
அறுபது ஆண்டுகாலம் பொருத்த நீங்கள், ஆறு நாட்கள் பொறுக்க மாட்டீர்களா..? எனக் கேட்பதும் எமது காதில் விழுகிறது. அறுபது ஆண்டுகாலம் நடந்தது விசாரணை. அது தள்ளிப் போவதில் கூட ஒரு அர்த்தம் இருக்கும். ஆனால் தீர்ப்பு தள்ளிப் போவதில்தான் ஒரு சதியோ என சாமான்யர்களின் மனம் கலங்குகிறது.
காரணம், காமன்வெல்த் போட்டி நடைபெறும் இந்த நேரத்தில் பாபர்மஸ்ஜித் தீர்ப்பு வெளியானால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வருமா என்று கவலைப் படவேண்டியது மத்திய அரசு. அத்தகைய மத்திய அரசே, தீர்ப்பை எதிர்கொள்ள, சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க பல்லாயிரம் கோடிகளுக்கு பயங்கரமான நவீன ஆயுதமான லத்தி[!] எல்லாம் வாங்கி தயார் நிலையில் இருக்கும் போது,
யாரோ ஒரு ரமேஷ் சந்த் திரிபாதி என்பவர், காமன்வெல்த் போட்டி நடக்கும் இந்நேரத்தில் தீர்ப்பு வந்தால் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய மனுவை ஏற்க மறுத்தது அலகாபாத் உயர்நீதி நீதிமன்றம். அதோடு, மனுவை தாக்கல் செய்த திரிபாதிக்கு அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் புறக்கணிக்கப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்ட திரிபாதியின் அதே மனுவை சுப்ரீம்கோர்ட் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதும், பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பு இடைக்கால தடைவிதிப்பதும் எங்கோ இடிக்கிறதே என்பதுதான் அறியா பொதுஜனங்களின் புலம்பலாக உள்ளது.
எது எப்படியோ, தீர்ப்பை தள்ளிவைத்தால் அதுகூட பரவாயில்லை. ஆனால் நீதியை தள்ளி வைத்து விடாதீர்கள் என்பதுதான் இந்தியாவின் மதசார்பின்மையையும், சட்டத்தையும் மதிக்கும் ஒவ்வொரு இந்தியனின் வேண்டுகோளாகும்.
எங்கள் இறைவா! நாங்கள் யாருக்கும் அநீதியிழைக்காமலும், யாராலும் அநீதியிழைக்கப் படாமலும் காத்தருள்வாயாக!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக