சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கி கப்பம் தொகை செலுத்தப்பட்டு பின்னர் பாகிஸ்தான் படையினரின் உதவியால் மீட்கப்பட்ட இந்தியர்கள் இன்று டெல்லி வந்து சேர்ந்தனர். இவர்கள் மீட்பு நடவடிக்கைக்கு பெரும் உதவிபுரிந்த பாகிஸ்தான் கடற்படைக்கு மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நன்றி தெரிவித்துள்ளார்.
சோமாலிய கடற்கொள்ளையரால் பிடிக்கப்பட்டு, பின் விடுவிக்கப்பட்ட எம்.வி.சூயஸ் சரக்குக் கப்பல், ஓமன் நாட்டுக்கு வரும் வழியில் கடற்புயலில் சிக்கியதால், அதில் இருந்த
ஆறு இந்தியர்கள் உள்ளிட்ட 22 கப்பல் பணியாளர்கள், பாகிஸ்தான் கப்பலுக்கு மாற்றப்பட்டு காப்பாற்றப்பட்டனர். எகிப்திய கப்பல் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்.வி.சூயஸ் சரக்குக் கப்பல், ஏடன் வளைகுடாவில் சென்று கொண்டிருந்த போது, கடந்த 2010 ஆகஸ்ட் 2ம் தேதி சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இதில், ஆறு இந்தியர்கள், 11 எகிப்தியர்கள், நான்கு பாகிஸ்தானியர்கள், இலங்கையைச் சேர்ந்த ஒருவர் என, மொத்தம் 22 பணியாளர்கள் இருந்தனர். இந்தியர்களில், இருவர் அரியானாவைச் சேர்ந்தவர்கள். இமாச்சலப்பிரதேசம் மற்றும் தமிழகம், காஷ்மீர் மற்றும் மும்பையைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவர். கப்பலை மீட்க, எகிப்திய நிறுவனம், ஒன்பது கோடி ரூபாயை கடற்கொள்ளையர்களிடம் அளித்தது. இதையடுத்து, கப்பலை சமீபத்தில் கடற்கொள்ளையர்கள் விடுவித்தனர். விடுவிக்கப்பட்ட கப்பல், ஓமன் நாட்டின் சலாலா துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது, அதன் எரிபொருள் முற்றிலும் காலியாகிவிட்டது. மேலும் கடலில் வீசிய சூறாவளியில் கப்பல் சிக்கிக் கொண்டது.கப்பல் கேப்டன், பாகிஸ்தான் கடற்படைக்கு அளித்த தகவலின்படி, பாகிஸ்தானின் பி.என்.எஸ்.பாபர் கப்பலுக்கு கேப்டன் உள்ளிட்ட 22 பணியாளர்களும் பத்திரமாக மாற்றப்பட்டனர். கப்பலில் இருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டு கராச்சிக்கு அழைத்து வந்தது. அதன்பின்னர் விமானம் மூலம் துபாய் வழியாக இந்தியர்கள் அனைவரும் இன்று காலை 9.15 மணியளவில் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர். இதன்மூலம் கடந்த 10 மாதங்களாக துயரத்தில் இருந்த இந்திய குடும்பத்தினர் மன நிம்மதியடைந்தனர். டெல்லி வந்து சேர்ந்த 6 பேரையும் வரவேற்க கப்பல் ஊழியர்களின் குடும்பத்தினர் கூட்டம், கூட்டமாக வந்திருந்தனர். உறவினர்கள் ஆனந்தகண்ணீர் விட்டபடி பூஙகொத்து கொடுத்து வரவேற்றனர்.
கடல் கொள்ளையர்களிடமிருந்து விடுவிக்கப்பட்ட எம்.வி.சூயிஸ் கப்பல் ஊழியர்களை பாகிஸ்தான் கப்பல் படையைச் சேர்ந்த பாபர் என்ற கப்பல் பத்திரமாக மீட்டது. பாகிஸ்தானின் இந்த மனிதாபிமான உதவிக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தக்க சமயத்தில் செய்யப்பட உதவி இது என்றும், ஆபத்தான நேரத்தில் காட்டப்பட்ட மனிதாபிமானத்திற்கு பணியாளர்கள் குடும்பத்தினர் சார்பில் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக