அயோத்தி விவகார வழக்கில் வரும் 24ம் தேதி வழங்கப்படும் தீர்ப்பை நாட்டில் அனைத்து தரப்பினரும் பதற்றத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.
1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடந்து வருகிறது.
மசூதி இடிக்கப்பட்டதால் ஏற்பட்ட மதக் கலவரத்தில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பலியாயினர். இந் நிலையில் அப்போது பிரதமராக இருந்த நரசிம்ம ராவ், சர்ச்சைக்குரிய இடத்தில் 67 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அவசரச் சட்டம் பிறப்பித்தார்.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த நிலம் தொடர்பான அனைத்து வழக்குகள் மற்றும் அனைத்து இடைக்கால உத்தரவுகளையும் ரத்து செய்து தீர்ப்பளித்தது.
மேலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே சர்ச்சைக்குரிய நிலம் இருக்க வேண்டும் என்றும், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட லக்னெள பெஞ்ச் தீர்ப்பளிக்கும் வரை இந்த நிலைமையே நீடிக்க வேண்டும் என்றும் 1994ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதையடுத்து இந்த நிலம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் லக்னெள பெஞ்ச் தான் விசாரித்து வருகிறது.
1538ம் ஆண்டில் மசூதியை கட்டும் முன்பு அங்கு கோவில் இருந்ததா?, பாபர் மசூதி கமிட்டிக்கு 1961ம் ஆண்டில் வழக்குத் தொடர உரிமை உள்ளதா? போன்ற அம்சங்கள் குறித்து விசாரணையின் போது ஆராயப்பட்டன.
கடந்த 16 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், வரும் 24ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்துக்கள், முஸ்லிம்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் என அனைத்து மட்டத்திலும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
மசூதியை இடித்தபோது உத்தரப்பிரதேசத்தில் பாஜக சார்பில் முதல்வராக இருந்த கல்யாண் சிங் கூறுகையில், ஒருவேளை இந்துக்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டால், ராமர் கோவிலை கட்டுவதற்கு வசதியாக நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். ராமர் மீது நம்பிக்கை வைத்துள்ள கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பாபர் மசூதி நடவடிக்கை கமிட்டி சார்பாக வழக்கு தொடர்ந்த முகமது காசிம் அன்சாரி கூறுகையில், தீர்ப்பு பாதகமாக வந்தால் முஸ்லிம்கள் அமைதி காக்க வேண்டும் என்று முஸ்லிம் சட்ட வாரியமும் பாபர் மசூதி கமிட்டியும் கேட்டுக் கொள்கிறது. தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம் என்றார்.
இந் நிலையில் தீர்ப்பு வெளியானவுடன் நாடு முழுவதும் பதற்றம் ஏற்படும் என்பதால் தேசம் முழுவதுமே தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அயோத்தியிலும் கடும் பாதுகாப்பு:
இந் நிலையில் உத்தரப் பிரதேசத்துக்கு மட்டும் 63,000 மத்திய போலீஸ் படை தேவை என்று அம் மாநில முதல்வர் மாயாவதி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் இதை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது. மற்ற மாநிலங்களுக்கும் காஷ்மீர் மாநிலத்திலும், வடகிழக்கு பகுதியிலும் மற்றும் சர்வதேச எல்லையிலும் ஏற்கனவே ஏராளமான அளவில் மத்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கும் மத்திய போலீஸ் படைகளை அனுப்ப வேண்டியுள்ளதால் ஒரு மாநிலத்துக்கு மட்டும் 63,000 போலீஸாரை அனுப்ப முடியாது என்று மத்திய அரசு கூறிவிட்டது.
அயோத்தி பாதுகாப்புக்காக 5,000 மத்திய ரிசர்வ் படை போலீசார் அனுப்பப்படுவர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
**********************************************************
தீர்ப்பு எந்த விதத்தில் இருந்தாலும் இருவருமே அதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. பிரச்சையை தீர்த்துவைக்கும் நோக்கில் தீர்ப்பு அமையப்போவதில்லை, நீர்த்துப்போகச் செய்யும் முனைப்பிலேயே தீர்ப்பு இருக்கும். இது ஆரூடமல்ல. ஒரு இடம் யாருக்குச் சொந்தம் என்பதை முடிவு செய்ய தொல்லியல் துறையின் அறிக்கையை கேட்கும் நீதிமன்றங்களின் நினைப்பிலிருந்து தீர்ப்பு மட்டும் விலகி நிற்குமா என்ன?
ஆகஸ்ட் 15, 1947ல் இருந்தபடியே வணக்கத்தலங்கள் மதிக்கப்படும் என்று அரசியல் சாசனம் இருக்கிறது. கோவிலை இடித்துத்தான் பள்ளி கட்டப்பட்டது என்பதற்கு ஆதாரம் எதுவுமில்லை. பார்ப்பனிய சதித்திட்டத்தின்படி படிப்படியாக வணக்கம் நிறுத்தப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டு, இடித்துத்தகர்க்கப்பட்டது.
பார்ப்பன பாஸிச சதிகளை இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, இந்து என தம்மை நம்பிக்கொள்வோரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சாதி ரீதியாகவோ, மத ரீதியாகவோ ஒன்றிணைந்து இந்த பார்ப்பனிய, அதிகாரவர்க்க கூட்டை முறியடிக்க முடியாது. வர்க்க அடிப்படையில் பாட்டாளி வர்க்கமாய் அணிதிரள்வதன் மூலம் மட்டுமே சரியான தீர்ப்பையும், தீர்வையும் பெறமுடியும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக